கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 6, 2020

படித்தேன், ரசித்தேன்

படித்தேன், ரசித்தேன்



சமீபத்தில் படித்த மூன்று புத்தகங்களை பற்றி சொல்ல ஆசை.
முதலில் வருவது 'தாமிரபரணி என்னும் சினேகிதி' என்னும் புத்தகம்தான். 

ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் கீழே வைக்காத நாட்களெல்லாம் திருமணத்திற்கு முன்புதான்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு அழகான ஓவியங்கள், புகைப்படங்களோடு எல்லோரும் படிக்கக்கூடிய பெரிய எழுத்துக்கள், ஹார்ட் பவுண்ட் அட்டையோடு கூடிய ஒரு புத்தகத்தை படித்து முடித்தேன் என்றால் அது தாமிரபரணி என்னும் சினேகிதி. மத்யமர் இரண்டாம் ஆண்டு விழாவில் விற்பனைக்கு வைத்திருந்த திரு.நெல்லை கணேஷ் எழுதிய இந்த புத்தகத்தை ஒரு தோழி எனக்கு பரிசளித்தார். 

ஒரு ஐ.டி.கம்பெனியில் மிகப் பெரிய பதவியில் இருக்கும் திரு. நெல்லை கணேஷ் இரண்டு வருடங்களாக ஃபேஸ் புக்கின் மத்யமர் குழுவில் எழுதிய கட்டுரைகள், ஒன்றிரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல். வெகு சரளமாக கொஞ்சம் சுஜாதாவின் சாயலில் பல விஷயங்களை தொட்டிருக்கிறார். 

வந்தியத்தேவனை கால எந்திரத்தில் ஏற்றி தஞ்சாவூருக்கு அனுப்புகிறார். சோழர் , பாண்டியர், விஜயநகர, நாயக்கர்கள் கால சிற்பங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்களை விளக்குகிறார். திருமங்கையாழ்வாரை குமுதவல்லியின் கணவனாகவும், பெரியாழ்வாரை ஆண்டாளின் தகப்பனாராகவும் காட்டுகிறார். தான் ரசித்த கர்னாடக இசைக்கச்சேரியை அழகாக விமர்ச்சிக்கிறார். என்னைப் போலவே இவருக்கும் மதுரை மணி ஐயர் கச்சேரி கேட்டுத்தான் இசையில் ஈடுபாடு வந்ததாம். 

தனக்கு பிடித்த கடவுளாக திருமால் ஆனதற்கான காரணமாக அவர் சொல்வது, செவிக்கு நல்ல தமிழும், அருமையான ததியோன்னமும், புளியோதரையும்,சாப்பிட்ட பின் இனிப்புக்கு அக்கார அடிசிலும், லட்டுவும் தரும் பெருமாளே கடவுளின் உருவமாக இருந்து விட்டு போகட்டுமே. போகட்டுமே என்று நமக்கும் தோன்றுகிறது. 

இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தவை 'காவல் தெய்வம்', 'அமெரிக்கா ஒரு தேடல்', மற்றும் 'தாய் மாமன்' என்னும் கட்டுரைகள் ஆகும். காவல் தெய்வம் என்னும் கட்டுரையில் தென் தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தில் நேர்மையாக பணியாற்றிய ஒரு இன்ஸ்பெக்டரைப் பற்றியது.  "சார் இராமர் வாலியை எப்படிக் கொன்னாரு? சட்டப்படியா செஞ்சாரு? மறைஞ்சு இருந்துதான அம்பு போட்டாரு? சட்டப்படி செல்லாதுதான், ஆனா அவர் செஞ்சது தர்மம், நியாயம்தானே? எது நியாயமோ அதச் செய்யறதுக்குத்தான் சட்டம், ஸ்டேஷன் எல்லாம்".  என்ற அந்த இன்ஸ்பெக்டர் நேர்மையாக இருந்ததாலேயே எந்த ஊரிலும் ஆறு மாதத்திற்கு மேல் இருந்ததில்லையாம். 

குடிகார புருஷனால் தினமும் அடி  உதை என அவஸ்தைப்பட்ட ஒரு பெண் அந்த இன்ஸ்பெக்டரிடம் வந்து, கம்பளைண்ட் கொடுக்க மறுத்து, "கூப்பிட்டு நல்ல புத்தி சொல்லுங்க சார்" என்று  அழுதாளாம்.  அவள் புகார் கொடுக்காததால் அவளுடைய கணவன் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே ஒரு நாள் ஓடுகிற பஸ்ஸில் ஒரு பெண்ணிடம் வம்பு செய்தான் என்று அவனைப் பிடித்து லாக் அப்பில் வைத்து, ஒரு நாள் முழுவதும் மிதி மிடி என்று மிதித்தாராம். அவனுடைய மனைவியின் வலி தெரிய வேண்டும் என்று சொல்லியே அடித்தாராம். அதன் பிறகு அந்த ஆசாமி குடியெல்லாம் விட்டு விட்டு மனைவியோடு அன்பாக இருக்க ஆரம்பித்தானாம். அப்போது அவர் கூறியவைதான் வாலி வதம் பற்றிய நியாயம். அப்படிப்பட்ட அந்த நேர்மையான காவல் அதிகாரி அகலமாக மரணித்ததை பற்றி நெல்லை கணேஷ்  "வைகுண்டத்தில் என்ன லா அண்ட் ஆர்டர் பிரச்சனையோ பெருமாளுக்கு? சீக்கிரமே ராமையாவை(இன்ஸ்பெக்டர்) நித்யசூரியாக்கி அழைத்துக் கொண்டு போய் விட்டார். என்கிறார்.   

அமெரிக்கா ஒரு தேடலில் அமெரிக்கா என்னைப்போல் பல பேர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாடு. முதல் கார், முதல் முத்தம் என பல முதல் அனுபவங்கள் பலருக்கும் இங்குதான். வாழ்வில் தொட்ட உயரங்களுக்கெல்லாம் ஏணிகள் இங்குதான் கிடைத்தன. என்று தொடங்கும் இந்த கட்டுரையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் பல நகரங்களுக்கும் சென்று அந்த அனுபவங்களை எழுதியிருக்கிறார். நியூ டவுன், கனெடிக்கெட் பயணம் பற்றிஎழுதும் பொழுது, "சாலைகள் பல இடத்தில விரிசல் விட்டு இருக்க, பாலங்கள் நியாயம் இழந்து வெளிறி இருந்தன. சமீபத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரி போல் நகரம் பழைய பெருமையை  இன்னும் இழக்காமல், ஆனால் சற்று ஆடிப்போயிருப்பது போல் தெரிந்தது. போகும் வழியில் பல நகரங்கள் - டெர்பி, ஷெல்டன் இங்கெல்லாம் பல பாக்டரிகள் இருந்திருக்கின்றன. இப்போது எதுவும் இல்லை. பல கட்டிடங்களில் கண்ணாடி எல்லாம் உடைந்து இருக்கிறது. ரோடுகள் எல்லாம் குண்டும் குழியுமாய். டாலஸ் விமான நிலையம். வயதாகி,வலு குறைந்து,காலை இழந்த முனையங்கள்(டெர்மினல்ஸ்).  என்றெல்லாம் இவர் எழுதியிருப்பதை படிக்கும் பொழுது அமெரிக்காவின் இன்னொரு முகத்தை, நமக்கெல்லாம் தெரியாத முகத்தை காட்டுகிறார். 

இருந்தாலும், காவிரியில் முழு வருடமும் பொங்கி ஓடும் தண்ணீரும், தாவணி அணிந்த இளம் பெண்களின் கோலாட்ட குதூகலங்கள் நிறைந்த அக்கிரகாரங்களும் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் அங்கு வசித்த குடும்பங்களின் பல வாரிசுகள் இன்று ஹட்சன் நதிக்கரையில் விநாயக சதுர்த்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதே சுபிட்சம் இடிந்து விழுந்த கண்ணாடி கட்டிடங்கள் மட்டுமே உள்ள டெர்பி, கனெக்டிகட் போன்ற ஊர்களில் வாழும் வயதானவர்களின் வாரிசுகளுக்கும் வர பெரிய பெருமாளோ, மேரி அம்மையோ ஆசிர்வதிக்கட்டும். என்று முடித்திருப்பதில் அவருடைய நன்றி உணர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது.   

தாய் மாமன் கட்டுரையில் அவருக்கும் அவருடைய மாமாவுக்கும் இருந்த உணர்வு பூர்வமான பந்தத்தை விவரித்து விட்டு, மாமாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதை, "கலங்கிச் சகதியாய் ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி நதியில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு முங்கி எழுந்தேன். கண்ணீரையும் சேர்த்துத் துடைத்துக் கொண்டு ஓடியது தாமிரபரணி.

திருநெல்வேலிக்கு வந்தால் திரும்பிப் போகவே மனம் வராத எனக்கு, இரவே பஸ் பிடித்துச் சென்று விடலாம் என்று தோன்றியது. திருநெல்வேலிக்கு வர வேண்டிய காரணங்கள் எல்லாம் குறைந்து கொண்டே வருகின்றன. மாமாவும் சாம்பலாகி தாமிரபரணியில் கரைந்து போனார். 

குல தெய்வம் நடுக்காவுடையாரும், கோடாலி வெட்டுக் காயத்துடன் நெல்லையப்பரும் இருக்கிறார்கள். கல்லாய் சமைந்து போன இருவர். யாருக்கென்ன! இருந்து விட்டு போகட்டும்" என்று கையறு நிலையில் வரும் விரக்தியை  கூட அழகாக பதிவு செய்திருக்கிறார். 

எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி எழுதியிருப்பது இதுவரை கேள்விப்படாதது. ஜெயலலிதா மாண்டியா ஐயங்கார் என்பது கூட தவறுதான். அவருடைய தந்தையின் பூர்வீகம் திருச்சிக்கு அருகில் இருக்கும் நங்கவரம்.   

அகவை ஐம்பது என்னும் கட்டுரையில் ஐம்பதாவது வயதை எட்டிய தான் எடுத்திருக்கும் சில தீர்மானங்களை எழுதிவிட்டு இறுதியில் 
கடைசியாய் ஒன்று "தாய் மொழியில் எழுத பேசாத தெரியாதவர்கள் அடுத்த பிறவியில் குரங்காய் பிறப்பார்கள் என்கிறார் பாரதி. மகனோ, மகளோ, தாய் மொழியில் பேசுவதற்காவது சொல்லிக் கொடுத்து விடுங்கள். உயில் தாய் மொழியில் எழுதி வைத்து விடுவது இதற்கு கை கொடுக்கும் என்று புன்னகைக்க வைக்கிறார்.

மன்னிக்கவும் கடைசி கடைசியாய் இன்னொன்று. ஐம்பது வயதுக்குப் பிறகு, இது மாதிரியான அச்சு பிச்சென்று புத்திமதி சொல்லும் பதிவுகளை 'படித்ததில் பிடித்தது, பிடித்தால் பகிரவும், தமிழனாய் இருந்தால் பகிர்ந்து விடு, இருபது நிமிடத்தில் இருபது பேருக்கு ஃபார்வர்ட் செய்தால் நினைத்தது நடக்கும் என்று எழுதி அனுப்ப வேண்டாம். உடனேயே குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விடவும்" என்று மிகுந்த தன்னடக்கத்தோடு சொல்லியிருக்கிறார். ஆனால் அவருடைய இந்த தாமிரபரணி என்னும் சினேகிதியை நிச்சயம் குப்பைத் தொட்டியில் போட மாட்டோம். பத்திரமாக நம் கலெக்ஷனில் வைத்துக் கொள்வோம். 

26 comments:

  1. அழகான விமர்சனம் பானுக்கா .புக் படிக்க  நேரத்தை தேடணும் :)அமெரிக்கா /இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் அழுக்கு பக்கங்கள் வெவேறு பரிமாண முகங்கள்  நிறைய இருக்கு ..எழுத துவங்கினா  வெறுப்பும் வேதனையும் மிஞ்சும் .ஏதோ மூவிஸில் குத்துப்பாட்டுக்கு லொகேஷனை பார்த்து சந்தோஷப்படறவங்களை எதுக்கு கஷ்டப்படுத்துவானேன் :)
    ஹப்பா நல்லவேளை என் வம்சத்தில் ஆஞ்சி வரமாட்டார் :) என் மகளுக்கு தமிழில் நல்லா பேச தெரியும்.உயில் ஐடியா சூப்பர் :) ஆனா இங்கே ட்ரான்ஸ்லேட்டர்ஸ்   interpreters இருக்காங்களே :))

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய பிஸி ஷெட்யூலுக்கிடையே வந்து சுவையான பின்னூட்டம் இட்டதற்கு நன்றி ஏஞ்சல். //என் மகளுக்கு தமிழில் நல்லா பேச தெரியும்.//  கேட்க சந்தோஷமாக இருக்கிறது. 

      Delete
  2. மிக அழகிய விமர்சனம். வெளிநாட்டில் வசித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதரின் உணர்வுகள், அவற்றில் பொதிந்திருக்கும் ஆதங்கம், சோகம் என்று திரு. நெல்லை கணேஷின் எழுத்து நதியின் பிரவாகமாய் ஓடியிருப்பது தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தடங்கலற்ற தெளிவான நடை. நன்றி மனோஜி.

      Delete
  3. உணர்வுகளை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார்.  அழகிய புத்தகம் என்று தெரிகிறது.  நல்லதொரு அறிமுகம்.  ரஞ்சனி அக்காவுக்கும் நன்றி சொல்ல வேண்டுமோ!

    ReplyDelete
    Replies
    1. //ரஞ்சனி அக்காவுக்கும் நன்றி சொல்ல வேண்டுமோ!//தொலைபேசியில் சொல்லி விடுகிறேன். நினைவூட்டியதற்கு நன்றி! வருகைக்கும் நன்றி.

      Delete
    2. என்னைப் பற்றிய குறிப்பு இந்தக் கட்டுரையில் எங்குமே இல்லையே ஸ்ரீராம் எனக்கு எதற்காக நன்றி சொல்லச் சொல்லுகிறார்?

      Delete
  4. விமரிசனத்தை முகநூலிலும் படித்தேன் . நல்ல விரிவான விமரிசனம். படிக்கும் ஆவலைத் தூண்டி விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை விமர்சித்ததற்கு நன்றி அக்கா. நேர நிர்வாகத்தை உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா பதிவுகளுக்கும் சென்று தவறாமல் பின்னூட்டமும் போடுகிறீர்களே!! Hats off!

      Delete
  5. ஜெயகாந்தன் அவர்களின் கதையை விட அவருடைய் முன்னுரை மிகச்சிறப்பாக இருக்கும்..தங்கள் புத்தக விமர்சனம் படிக்க ஏனோ அந்த ஞாபகம் வந்தது.அருமையான விமர்சனம்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஏ அப்பா! எப்படிப்பட்ட பாராட்டு! எதிர்பாராமல் கழுத்தில் விழும் இது போன்ற மாலைகள்தான் ப்ளாக் எழுதுவதில் கிடைக்கும் சந்தோஷம் என் நினைக்கிறேன். மிக்க நன்றி. 

      Delete
  6. நல்ல விமர்சனம்.

    நானும் வாங்கணுமா அல்லது புத்தகத்தை பரிசளிப்பார்கள் என்று காத்திருக்கணுமா என யோசிக்கிறேன்

    ReplyDelete
  7. ஹாஹா! வாங்கி விடுங்கள். இந்த புத்தகத்தில் கிடைக்கும் வருவாயை மத்யமர் சாரிடீஸுக்கு வழங்கப் போகிறாராம் உங்கள் ஊர்க்காரர். நல்ல புத்தகத்தை வாங்கியவது போலவும் இருக்கும், நல்ல காரியத்திற்கு உதவியது போலவும் இருக்கும். வருகைக்கு நன்றி. 

    ReplyDelete
  8. ஆழ்ந்து ரசித்து விமர்சித்து உள்ளீர்கள்... அருமை...

    ReplyDelete
  9. நல்லதொரு நூலைப் பற்றிய அருமையான அறிமுகம்.

    ReplyDelete
  10. மிக அற்புதமான அப்ரைசல்.
    அமெரிக்க நிதர்சனங்களும் உண்மை. அக்ரஹாரம் திரும்பாததும் உண்மை.
    எங்கள் ஊரில் வீடுகள் இருக்கின்றன.
    அதில் வசித்தவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். ஊர்க்கோயிலைப்
    புதுப்பிக்கிறார்கள்.
    பணம் தான் தேவையாக இருக்கிறது. அங்கே எல்லாம் தாமிரபரணி சுத்தமாகத்தான் இருக்கிறது.
    புத்தகத்தை எழுதிய கண்ணனுக்கு வாழ்த்துகள்.
    அகவை ஐம்பது மிகச் சுவை.
    தமிழ் இங்கெல்லாம் உயிரோடு இருக்கிறது.
    நன்றி பானு மா.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் என் விமர்சனத்தை அழகாக அலசியிருக்கிறீர்கள். //அங்கே எல்லாம் தாமிரபரணி சுத்தமாகத்தான் இருக்கிறது.////தமிழ் இங்கெல்லாம் உயிரோடு இருக்கிறது.//கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தகத்தை எழுதியிருப்பவர் கணேஷ். மிக்க நன்றி அக்கா.

      Delete
  11. அருமையான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி!. நீங்கள் பதிவிட்டு நீண்ட நாட்களாகி விட்டது போலிருக்கிறது. உடல் நலமெல்லாம் ஓ.கே.தானே? 

      Delete
  12. வணக்கம் சகோதரி

    அருமையான புத்தக விமர்சனம். நீங்களும் ஆழ்ந்து படித்து ரசித்து விமர்சனம் செய்திருப்பதில், உங்கள் ரசனையும், புத்தகத்தின் சிறப்பும் போட்டி போட்டுக் கொண்டு மிளிர்கின்றன. ஒவ்வொன்றையும் கதாசிரியர் திரு. நெல்லை கணேஷ் நன்றாக உணர்ந்து மிக அழகாக எழுதியிருக்கிறார். எழுத்துக்கள் படிக்கும் போதே சட்டென மனதில் அமர்கின்றன. சமயம் கிடைத்தால் வாங்கி படிக்கும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. சிறப்பான நூல் அறிமுகம். நன்றிம்மா. இணையம் வழி பணம் அனுப்பி வாங்கக் கிடைக்கிறதா எனத் தேடிப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  14. https://www.amazon.in/dp/B083XQTMQN/ref=cm_sw_r_wa_api_i_decjEbKRVEH2X

    ReplyDelete