கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 29, 2018

வேதபுரீஸ்வரர் ஆலயம் - திருவேற்காடு

வேதபுரீஸ்வரர் ஆலயம் - திருவேற்காடு




சென்னையில் இருக்கும் புராதனமான கோவில்களை கூறுங்கள் என்றால்,நம்மில் பலரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலையும், மயிலை கற்பகாம்பாள் கோவிலையும் கூறிவிடுவோம். அதற்குப் பிறகு கொஞ்சம் யோசித்து காளிகாம்பாள் கோவில், கந்தகோட்டம் போன்றவற்றை கூறலாம். திருமுல்லைவாயில், திருவொற்றியூர் போன்றவை எத்தனை பேரின் நினைவிற்கு வரும் என்று தெரியாது. ஆனால் சென்னையில் பாடல் பெற்ற தலங்களும், புராண சம்பந்தப்பட்ட தலங்களும் நிறைய இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் திருவேற்காட்டில் இருக்கும் வேதபுரீஸ்வரர் ஆலயம். திருவேற்காடு பஸ் டெப்போவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கிறது இந்த பழமையான ஆலயம்.

சிவ பெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த பொழுது தேவர்கள் அத்தனை பேரும் கைலாயத்தில் குழுமி விட வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்து விடுகிறது. அதை சமன் செய்ய அகத்தியரை தென் திசைக்கு  அனுப்புகிறார்கள்.அதன் படி தென்திசைக்கு அகத்தியர் வருகிறார். ஆனால் அவர் மனதுக்குள் தன்னால் இறைவன், இறைவி திருமணத்தை காண முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. அதை நீக்கும் பொருட்டு சிவனும் பார்வதியும் தங்கள் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி அளித்த தலங்களில் திருவேற்காட்டில் இருக்கும் வேதபுரீஸ்வரர் ஆலயமும் ஒன்று.




ஓரளவு பெரிய ஆலயம்தான். கொடிமரத்தையும் நந்தியையும் தாண்டி உள்ளே சென்றால் நேராக கருவரையின் உள்ளே லிங்கத் திருமேனிக்கு பின்னால் சிவ பெருமானும், பார்வதி தேவியும் தம்பதிகளாக சிலா ரூபத்தில் காட்சி அளிக்கிறார்கள். சாதாரணமாக சிவன் கோவில்களில் காண கிடைக்காத காட்சி. வணங்கி வெளியே வந்தால், சிறிய உள்சுற்று. அதில் சைவ சமய குரவர் நால்வரைத் தொடர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார்கள்.
கோஷ்டத்தில் கணபதி, தக்ஷிணாமூர்த்தி, பின்னால் லிங்கோத்பவர், வடக்கில் ப்ரம்மா. உள் பிரகாரத்திலேயே பாலாம்பிகையாக அம்மன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். அம்மனுக்கு அருகில் பைரவர்.  வாயிலுக்கு இரு புறமும் சூரியனும், சந்திரனும் இருக்கிறார்கள். சந்திரனை ஒட்டி அகத்தியர். பின்னர் வட்ட வடிவ மேடையில் நவகிரகங்கள்.

அகத்தியர் 
பெரிய வெளி பிரகாரம். அதில் தல விருட்சமான வில்வ மரம். நுழை வாயிலின் இரு புறங்களில் ஒன்றில் சனி பகவானுக்கும், மற்றொன்றில் அருணகிரிநாதருக்கும் தனி சந்நிதிகள். பிரகாரம் முழுவதும் செப்பனிடப்பட்டு நன்றாக இருக்கிறது.



அருணகிரிநாதர் சந்நிதி 

சனி  பகவான் சந்நிதி 
சிவனும் பார்வதியும் இங்கே திருமண கோலத்தில் இருப்பதால் இது திருமண பரிகார தலமாகவும் விளங்குகிறது. திருமணம் தடை படுபவர்கள் இங்கு சென்று சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. 

கோவிலுக்கு வெளியே பெரிய குளம். ஆனால், அது இப்போது வறண்டு கிடப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் தண்ணீரை சேமித்ததை போல நாம் செய்வது இல்லை. மழை நீரை வீணாக்காமல் இப்படிப்பட்ட குளங்களில் சேமித்தால் நிலத்தடி நீர் குறையாமல் இருக்குமே. 



நம்முடைய பெரியவர்கள் இறைத்தொண்டு, சமூகத் தொண்டு இரண்டையும் ஒன்றாக செய்திருக்கிறார்கள். நாம் தொடர்வோம்.