கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 8, 2017

தெருவில் ஒலித்து மறைந்த குரல்கள்

தெருவில் ஒலித்து மறைந்த குரல்கள் 

என்னுடைய பால்ய காலம் முதல் இளமைக் காலம் வரை நம் ஊரில் பெரும்பாலும் தனி வீடுகள்தான் இருந்தன. பிரிட்ஜ், டி.வி., வாஷிங் மெஷின், போன்றவை 90% வீடுகளில் கிடையாது. கிரைண்டர், மிக்ஸி, டூ வீலர் போன்றவையே ஆடம்பரம்தான். ஏ.சி.யா? அப்படீன்னா..என்ன? சிந்தாமணி,அமராவதி, டி.யூ.சி.எஸ்., போன்றவை தவிர சூப்பர் மார்க்கெட் என்னும் கான்செப்ட் பெரிதாக வளரவில்லை. எல்லோரும் பக்கத்தில் இருக்கும் நாடார் கடையிலோ, செட்டியார் கடையிலோதான் மாதாந்திர கணக்கில் சாமான்கள் வாங்குவார்கள். அதற்கென்று ஒரு குட்டி நோட்டு உண்டு. அந்த கடைகளில் பிளாஸ்டிக் பை தர மாட்டார்கள். நாம்தான் சாமான்கள் வாங்க துணிப் பையும், எண்ணெய் வாங்க தூக்கும் கொண்டு செல்ல வேண்டும்.    

எனவே அப்போதெல்லாம் தெருக்களில் நிறைய சாமான்கள் விற்றுக் கொண்டு வருவார்கள். விதம் விதமான குரல்களிலும், தொனி-  களிலும் தங்கள் பொருள்களை விற்றுக் கொண்டு போவார்கள். 

வீடுகளில் அம்மியும், ஆட்டுக்கல்லும் மட்டுமே இருந்ததால் "ஆட்டுக்கல் குத்தலையோ, அம்மிக்கல் குத்தலையோ" (ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் பொள்ளுவதை  "குத்தலையோ?" என்பார்கள்). என்றபடி தலையில் ஒரு சிறிய சாக்கு பையை வைத்துக் கொண்டு   ஒருவர் கூவிக் கொண்டே செல்வார். 

ஒவ்வொரு ஞாயிறென்றும் பகல் மூன்று மணி அளவில் கடிகாரம், பேனா ரிப்பேர் செய்வதாக ஒருவர் ஒரு பெரிய மரப்பெட்டியை சுமந்து கொண்டு வருவார். அதில் வித விதமான பேனாக்கள் வைத்திருப்பார். கடிகாரத்தை சர்வீஸ் செய்யக் கொடுத்தால் கண்களில் ஒரு லென்ஸை மாட்டிக் கொண்டு, "பார் எத்தனை அழுக்கு" என்று நம்மிடம் காட்டுவார். "ஸ்ப்ரிங் சரியில்லை, முள் சரியில்லை" என்று ஏதோ கூறி, என்னவோ செய்து ஓடவிட்டு செல்லுவார். அந்த கடிகாரம் கொஞ்ச நேரம் ஓடும் பிறகு நின்று விடும். சரி செய்தவரிடம் கேட்கலாம் என்றால் கொஞ்ச நாள் தலையை காட்ட மாட்டார்.

இவரைத் தவிர, "பூ...ட்... ரிப்பேர்(பூட்டு ரிப்பேர்), கொடை ரிப்பேர் என்று கூவியபடி ஒரு ஆள் அடிக்கடி வருவார். மழைக் காலங்களில் சிலர் அவரிடம் தங்கள் வீட்டு குடைகளை ரிப்பேர் செய்து கொள்வார்கள். 

வெள்ளிக் கிழமை என்றால் காலையில்," உப்பு, வெள்ள வெள்ள (வெள்ளை, வெள்ளை) உப்பு.." என்று கை வண்டியில் உப்பை தள்ளிக் கொண்டு விற்க வருபவரிடம் பெரும்பாலும் எல்லோரும் உப்பு வாங்குவார்கள். வெள்ளிக் கிழமை உப்பு வாங்க வேண்டும் என்பது ஐதீகம் அல்லவா?     

வாரத்தில் இரண்டு முறை கெரசின் ஆயில் விற்றுக் கொண்டு வருபவர் அந்த வண்டியில் உள்ள மணியால் ஒலி எழுப்பும் பொழுது தாய்மார்கள்  தெரிந்து கொள்வார்கள் கெரசின் என்று. அப்போ- தெல்லாம் எல்லா வீடுகளிலும் கேஸ் அடுப்பு கிடையாது.கேஸுக்கு  புக் பண்ணிவிட்டு கனெக்ஷனுக்காக காத்திருக்க வேண்டும். சிலிண்டர் தீர்ந்து விட்டாலும் புது சிலிண்டர் அத்தனை சீக்கிரம் வந்து விடாது. எனவே எல்லோர் வீட்டிலும் மண்ணெண்ணெய் அடுப்பும், அதற்கு தேவையும் இருக்கும். 

மண்ணெண்ணெயை ட்ரம்மில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதிலிருந்து ஒரு பாட்டிலுக்கு இறைத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி இறைக்க ஒரு பம்பும்  எல்லார் வீடுகளிலும் இருக்கும். 1974-75 கால கட்டங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்தது. விற்பவர் ஒரு வீட்டுக்கு இரண்டு லிட்டருக்கு மேல் விற்க மாட்டார். 
எனவே மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அந்த வண்டியின் மணி சத்தம் இன்பத் தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருக்கும்.

அந்த சமயத்தில் ரா.கி.ரெங்கராஜன் அவர்கள் குமுதத்தில் 'ஷ்ணாயில் ' என்று எழுதிய கதையை படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. பதினோராம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் அண்ணா கெரசின் ஆயில் விற்பவர். நன்றாக படிக்கும் அந்த மாணவன், எப்போதாவது அண்ணாவோடு உதவிக்கு செல்லும் போதெல்லாம் அண்ணாவிடம் அதை 'ஷ்ணாயில்' என்று சொல்வது தவறு, கெரசின் ஆயில் என்றுதான் கூறவேண்டும் என்பான். தம்பி கூறுவதை கேட்டுக் கொண்டாலும் அண்ணா ஷ்ணாயில் என்று கூவுவதை மாற்றிக் கொள்ள மாட்டார். பள்ளி இறுதி தேர்வு விடுமுறையில் அண்ணாவுக்கு ஒரு விபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய் விடும். எனவே அவன் மண்ணெண்ணெய் விற்கச் செல்வான். அவனோடு படித்த பெண் வந்து கெரசின் வாங்குவாள், இவனைத் தெரிந்தது போல காண்பித்துக் கொள்ள மாட்டாள். அவன் முதலில் கெரசின் ஆயில் என்று கூவுவான், அது அவனுக்கே வித்தியாசமாக ஒலிக்க, 'ஷ்ணாயில்' என்றே அவனும் குரல் கொடுக்கத்  தொடங்குவான். என்று முடியும் கதை. 

இதைத் தவிர அந்தந்த ஸீசன்களுக்கு ஏற்றாற்போல கோல மாவு, வடு மாங்காய் எல்லாம் தெருவில் வரும். மல்லி, ஜாதி, கனகாம்பரம் போன்ற பூ விற்கும் பெண்கள், மாலையில்தான் வருவார்கள். மல்லிகைப் பூ சீசனில் மதியம் இரண்டு மணிக்கே உதிரிப் பூவை சைக்கிளில் விற்றுக் கொண்டு வருவார்கள்.   

பால்காரர்கள் சைக்கிளில்தான் வருவார்கள். சைக்கிள் பாரில் சற்று பெரிய மணியை கட்டி வைத்து, அதை அசைத்துதான் ஒலி எழுப்புவார்கள். ஒவ்வொரு பால்காரரின் மணியும் வித்தியாசமாக ஒலிக்கும். காலை,மாலை என இரு வேளை மட்டுமே பால் கிடைக்கும். பாக்கெட் பாலும் கிடையாது, அதை வைத்துக் கொள்ள குளிர்சாதன பெட்டியும் கிடையாது. நடுவில் யாராவது விருந்தாளிகள் வீட்டுக்கு வந்து விட்டால், அக்கம் பக்கத்தில் யார் வீட்டிலாவது பால் இருக்குமா என்று கேட்க வேண்டும்.  

பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் கூட சிறிய மணியை ஒலி எழுப்பியபடிதான் வருவார்கள்.

இரவில் எட்டு மணிக்கு மேல் கடலை வருத்தபடி செல்லும் வண்டிக் காரர் அந்த இரும்பு சட்டியில்  தட்டி 'டங் டங்' என்று ஒலி எழுப்புவார். பத்து பைசாவுக்கு ஒரு பொட்டலம் கடலையில் அடியில் ஒரு சிறு வெல்லத் துண்டும் போட்டு கொடுப்பார்.

தலை நரைத்து, வெள்ளை புடவை கட்டிக்கொண்டு வெண்ணை,நெய் கொண்டு வரும் கவுண்டர் பெண்மணியின் அருகில் சென்றாலே வெண்ணை வாசம் அடிக்கும். அதற்கு பிறகு எங்கள் வீட்டிற்கு சனிக்கிழமைதோறும் வெண்ணை கொண்டு வருபவர் அரை கிலோ வெண்ணை அளந்து போட்ட பிறகு, கையை நீட்டினால் ஒரு உருண்டை வெண்ணை கையில் போடுவார். 

பெரும்பாலும் மதியத்தில்தான் "பழைய சேலைகளுக்கு பாத்திரம், பிளாஸ்டிக் பக்கெட்" என்று குரல் எழுப்பியபடி எவர்சிவர், அலுமினிய பாத்திர வியாபாரிகள்   வருவார்கள். 

விடுமுறை நாட்களில் வண்டியில் ஐஸ் க்ரீம் விற்பவர்கள் மற்றும் பலூன்காரர்கள் சிறு குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நகராமல் 'பாம் பாம்'  என்று ஹாரன் ஒலி எழுப்புவார்கள். 

ஒவ்வொரு வியாழக் கிழமையும் பாத்திரங்கள் துலக்க அரப்புத்தூள் கொண்டு வரும் பெண்மணி பசலைப்  பொடி என்று பச்சை நிறத்தில் ஒரு பொடி கொண்டு வருவார், கொஞ்சம் கொழகொழப்பாக இருக்கும் அதை சிகைக்காயோடு சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிப்போம். என் மகளுக்கு அரப்புத்தூள் என்றால் என்னவென்றே தெரியாது. 

இதைத் தவிர காவடி போல நீண்ட கழியின் இரு புறங்களிலும் தொங்க விடப்பட்டிருக்கும் பானைகளை சுமந்தபடி 'பதநி , பதநி' என்று விற்றுக் கொண்டு செல்லும் பதநீர் வியாபாரிகள். ஒரு அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் சூடான சேமியா பாயசத்தை,'சே..மி..யா.. பா..ய..ஸ்.." என்று விற்றுச் சென்றவர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் இவை இரண்டையும் ருசித்ததில்லை. சேமியா பாயசம் பிரமாதமாக இருக்கும் என்பார் என் அண்ணா. 

காலை வேளைகளில் கீரை, காய் கறி இவைகளைக்கொண்டு வருபவர்களின் அழைப்பு. ஒரு கைப்பிடி அரிசிக்கு ஒரு கட்டு கொத்தமல்லி தரும் பாட்டி. இதே ஒரு கைப்பிடி அரிசிக்கு இலந்தை பழம்,களாக்காய் எல்லாம் வாங்கி சாப்பிட்டிருக்கிறோம்.

இதில் விளக்குமாறு விற்பவர்களும், ஒட்டடை கம்பு விற்பவர்களும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.  எல்லோரையும் போல அவர்களும் தங்கள் பொருளின் பெயரை குறிப்பிட்டுதான் கூவுவார்கள். நாமும் அவர்களை கவலையேப் படாமல் ஏ! விளக்குமாறு! ஏ! ஒட்டடை கம்பு! என்று அழைப்போம், கொஞ்சம் கூட பாதிப்படையாமல் அவர்கள் வருவார்கள். சாதாரணமாக யாரையாவது இப்படி அழைத்து விட முடியுமா? 

எண்பதுகளின் இறுதியிலிருந்து நிலைமை மாற ஆரம்பித்தது. மிக்ஸியும், கிரைண்டரும் ஆடம்பரம் என்பதிலிருந்து அத்தியாவசியம் என்னும் நிலைமைக்கு மாறத் துவங்கின. தொன்னூறுகளின் இறுதியில் ஐ.டி. பூம் ஏற்பட்ட பிறகு, குளிர்சாதன 
பெட்டியும், வாஷிங் மிஷினும் அத்தியாவசியமாகி விட்டன. கடன் அட்டைகள் புழங்க ஆரம்பித்த பிறகு நாடார் கடைகளின் இடத்தை  சூப்பர் மார்கெட்டுகள் பிடித்துக் கொண்டன. 

தனி வீடுகள் குறைந்து கேட்டட் கம்யூனிட்டிகள் பெருகிய பிறகு வீதியில் சாமான்கள் விற்றுக் கொண்டு வருபவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. 

இப்போதெல்லாம் ஆன் லைனில் ஆர்டர் கொடுத்தால் சாமான்கள் அட்டை பெட்டியில் அழகாக வந்து விடுகின்றன. மாறுதல்தானே வாழ்க்கை! 

Sunday, September 3, 2017

என் பின்னூட்டங்கள்

என் பின்னூட்டங்கள்

பெரும்பாலும் என் பின்னூட்டங்கள் கடைசியில்தான் வரும். காரணம் எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் பதிவுகளை படித்து முடிக்கவே நேரம் சரியாக போய் விடும். பிறகு தனியாக பின்னூட்டம் இடுவேன். சில சமயம் ரொம்ப நாளாகி விட்டது, இனிமேல் பின்னூட்டம் அளித்தாலும், அதை எழுதியவரே படிப்பாரோ மாட்டாரோ என்ற தயக்கம் எழுத விடாது. சில சமயங்களில் போன் வழியாக அனுப்பும் பின்னூட்டங்கள் போய் சேரவே சேராது  :(( 

எதற்கு இவ்வளவு வியாக்கியானம்? கீதா அக்காவின் யார் யாரை மன்னிப்பது என்னும் பதிவிற்கு பின்னூட்டம் எழுத நினைத்தேன், ஆனால் நாட்கள் மிக அதிகமாகி விட்டதால் தனி பதிவாகவே எழுதி விடலாம் என்று தோன்றியது. நீங்களும் என் பதிவை படிக்கும் முன் கீதா அக்காவின் மேற்படி பதிவை ஒரு முறை படித்து விட்டால், தொடருவது சுலபமாக இருக்கும்.

கீதா அக்கா தன்னுடைய பதிவில் ராமன் ராவண வாதத்திற்குப் பிறகு சீதையை தீக்குளிக்கச் சொன்னதை தவறு கிடையாது என்று நியாயப்படுத்தி இருக்கிறார். மேலும், தனக்கு கம்ப ராமாயணத்தில் அத்தனை பரிச்சயம் கிடையாது என்றும், வான்மீகி ராமாயணம் மற்றும் துளசி தாஸரின் ராமா சரித மாநஸ் படித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இன்னும் துளசி தாசரும், கம்பரும் ராமனை தெய்வமாகவே சித்தரித்திருக்க, வான்மீகி  மட்டுமே ராமனை ஒரு மனிதனாக கண்டுள்ளார் என்றும் கூறியிருக்கிறார். 

இதிலெல்லாம் எனக்கும் உடன்பாடுதான். என்னுடைய ஒரே சந்தேகம் சீதை அக்னி பிரவேசம் செய்தாள் என்றால் நிஜமாகவே நெருப்பில் புகுந்து எந்த வித சேதாரமும் இல்லாமல் வெளிப்பட்டாளா? என்பதுதான். ராமனையும், சீதையையும் அவதாரங்களாக கருதினால் இதை மறு பேச்சில்லாமல் ஒப்புக் கொள்ளலாம்,அப்படி இல்லாமல் சாதாரண மனிதர்கள் என்னும் பொழுது இது சாத்தியமா? என்று சந்தேகம் வருகிறது. 


எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர்,"புராணங்களை படிக்கும் பொழுது சில விஷயங்களை ஓவர் லுக் செய்ய வேண்டும், சில விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும், சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்பார். லக்ஷ்மணன் பதினான்கு வருட வனவாசத்தில் தூங்கவே இல்லை என்பதை ஓவர் லுக் செய்ய வேண்டும், அவன் அப்படி கண்ணும் கருத்துமாக ராமனை கவனித்துக் கொண்டான் என்பதுதான் அதற்குப் பொருள் என்பார்.  இந்த அக்னி பிரவேச விஷயமும் அப்படிப்பட்ட ஒன்று என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் சில சொற்கள், அல்லது  pharseகள் புழக்கத்தில் இருக்கின்றன. இப்போது, "அவனை செஞ்சுடணும்", "வெச்சு செய்யணும்" என்றெல்லாம் கூறினால், அது நல்லவிதமானது அல்ல. அதைப் போல, ''கேக் வாக்" என்றால் மிகவும் சுலபமானது என்றுதானே பொருள் கொள்வோம். நிஜமாகவே கேக்கின் மீது நடப்பது கிடையாதே. அதைப் போல அந்த கால கட்டத்தில் எதிர் கொள்ள மிகவும் கடினமாக இருப்பதை அக்னி பிரவேசம் என்று குறிப்பிட்டிருக்கலாம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பற்றி கூறும் பொழுது, "நெருப்பு ஆற்றில் நீந்தி வந்தேன்" என்றதை எப்படி புரிந்து கொண்டோம்?



இப்படி abstract ஆக பல விஷயங்கள் நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் உண்டு.  ஒரு முறை  திரு.ஜெய ராமா சர்மா அவர்கள் ராமாயண பிரவசனம் ஒன்றில் அகலிகையின் சாபத்தை பற்றி கூறும் பொழுது, "அகலிகையை கல்லாக போகும்படி கௌதமர் சபித்தார் என்றால், நாம் எல்லோரும் நினைக்கும்படி அவள் உணர்ச்சிகள் அற்ற வெறும் பாறையாக சமைந்து விடவில்லை. அவளுக்கு எல்லா உணர்வுகளும் இருக்கும் ஆனால், அனுபவிக்க முடியாது. பசிக்கும், சாப்பிட முடியாது, தாகம் எடுக்கும், தண்ணீர் அருந்த முடியாது, நகர வேண்டும் போலிருக்கும் ஆனால் இயலாது(அப்பா எத்தனை கொடுமை?) என்றார். காரணம், தன்னோடு இருப்பது தன் கணவர் அல்ல என்று அகலிகைக்கு தெரிந்து விடுகிறது, ஆனாலும், சரீர சுகத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் அவள் இருந்ததால் சரீர சுகம் எதையும் அனுபவிக்க முடியாமல் கல் போல கிடக்க வேண்டும் என்று சபித்தாராம் கௌதமர். 

மஹா பாரதத்தில் குந்தியும், மாதுரியும் surrogate motherகளாக இருந்து பாண்டவர்களை ஈன்றிருக்கிறார்கள் என்பது விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கு புரிகிறது. துரோணரின் பிறப்பு பரிசோதனை குழாய் குழந்தையின் பிறப்பை ஒத்து இருக்கிறது. அதே சமயத்தில் திரௌபதி ஐவரை மணந்து கொண்டதை அப்படியேதான் ஏற்றுக் கொள்கிறோம்.

மஹாபாரத யுத்தத்தின் பொழுது துரோணரை கொல்வதற்காக அவரிடம் தர்மபுத்திரர்,"அஸ்வத்தாமா அதஹா:குஞ்சரஹ:(இறந்தது அஸ்வத்தாமா என்னும் யானை) என்று கூறியவுடன் அதுவரை தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த அவருடைய தேர் தரையில் இறங்கியது. என்கிறார் வியாசர். இதன் உட் பொருள் என்ன? அவருடைய தேர் அத்தனை நாட்கள் பரந்து கொண்டா இருந்தது? இல்லை, அதுவரை நடை முறை உலகில் இல்லாமல் ஒரு லட்சிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தர்மபுத்திரர் நடை முறை உலகிற்கு இறங்கி வருகிறார் என்பதுதானே.  இப்போதும் நாம் லட்சியவாதிகளை பார்த்து "பூமியில் கால் ஊன்றி நில்" என்றுதானே சொல்கிறோம்? இந்துமதி, 'தரையில் இறங்கும் விமானங்கள்' என்று ஒரு அருமையான நாவல் எழுதியிருக்கிறார்.

ராமனை விட்டு விட்டு கிருஷ்ணனை நோக்கி வருவோம். பெரும்பாலோனோர் கிருஷ்ணனை பற்றி கூறும் ஒரு குற்றச்சாட்டு அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதாகும். கோபிகைகளோடு ராஸக்ரீடை புரிந்ததவன், அவர்கள் குளிக்கும் பொழுது அவர்கள் ஆடைகளை கவர்ந்து சென்றவன் என்றெல்லாம் கிருஷ்ணனை பழி கூறுகிறார்கள். உண்மையில் கிருஷ்ணன் ஒரு வாலிபனாக இதைச் செய்யவில்லை. சிறு குழந்தையாக இருந்த பொழுதுதான் இந்த லீலைகளை செய்திருக்கிறான். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் எல்லா குழந்தைகளும் செய்வதுதான் இது போன்ற விஷமங்கள் என்பது. மகா பெரியவரே இதைப் பற்றி, " இப்போதெல்லாம் கிருஷ்ணனை ஒரு வாலிபனாக சித்தரித்து,அவன் கோபியரோடு ராசக்ரீடை செய்வது போல காலண்டர் போடு-  கிறார்கள், அது தவறு" என்று கூறியிருக்கிறார். 

மேலும் ஸ்ரீ கிருஷ்ணன் பிரமச்சாரி என்பதற்கு பாகவதத்தில் உள்ள சாட்சி பரீக்ஷித்தின் பிறப்பு. மகாபாரத யுத்த சமயத்தில் உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசு ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட, பிறக்கும் பொழுதே இறந்துதான் பிறக்கிறது. அந்த குழந்தைதான் பாண்டவர்களின் ஒரே வாரிசு.அதுவும் இப்படி ஆகி விட்டதே என்று எல்லோரும் துக்கத்தில் இருக்க, அங்கு வரும் வியாசர் நைஷ்டிக பிரமச்சாரி ஒருவர் இந்த குழந்தையை தொட்டால் அது உயிர் பெரும் என்கிறார். நாரதர் உட்பட யாருக்கும் அந்த பிண்டத்தை தொடும் தைரியம் வரவில்லை. அப்போது குழந்தையை பார்க்க வரும் கிருஷ்ணர் உயிரில்லாத அந்த பிண்டத்தை தீண்ட அது உயிர் பெற்று விடுகிறது. அப்போதுதான் குந்தி, கிருஷ்ணரிடம்,"எங்களுக்கு எப்போதும் துன்பத்தையே தா, அப்போதுதான் நாங்கள் உன்னை மறக்காமல் இருப்போம் என்று வேண்டுகிறாள். நிறைய பெண்களை மணந்து கொண்ட கிருஷ்ணன் எப்படி பிரும்மச்சாரியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு,"அந்த பெண்களை அடைய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பி அவர்களை மணக்கவில்லை. அந்த பெண்கள் கிருஷ்ணனை அடைய வேண்டும் என்று விரும்பி அவனை அடைந்தார்கள். எனவே மனதால் அவன் ப்ரம்மச்சாரிதான். என்று கூறப் படுகிறது. ஒரு விஷயத்தை செய்வதை விட எப்படி செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை வலியுறுத்த இந்த நிகழ்ச்சி கூறப் பட்டிருக்கலாம். 

இப்படி பல விஷயங்கள்.. சொல்லிக்கொண்டே போகலாம். சாதாரணமாக விநாயகரில் ஆரம்பிப்பதுதான் நம் மரபு. நாம் விநாயகரோடு முடிக்கிறேன். ஜி.எம்.பி. அவர்கள் விநாயகர் அகவலுக்கு பொருள் எழுதியிருந்தார். அதில் வரும் "மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்பதை பூடகமாக விளக்குவதுதான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைத்தார்கள் என்னும் கதை.  பாற்கடலை கடைந்த பொழுது காமதேனு, கற்பக விருட்சம், அப்சரஸ்கள், லட்சுமி, சரஸ்வதி, தன்வந்திரி போன்ற பல விஷயங்கள் வெளி வந்தன. ஆல கால விஷமும் வந்தது, இறுதியில் அமுதமும் வந்தது. இவை எல்லாமே குறியீடுகள்தான்.   இதன் பொருளை பின்னர் கூறுகிறேன். இந்த பதிவு மிகவும் நீண்டு விட்டது.

படங்கள் நன்றி Google