கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, May 6, 2017

கோடையும் எடையும்

கோடையும்  எடையும்


வெய்யில் காலம் வருகிறது என்றால் எனக்கு கொஞ்சம் பயம் வரும். தகிக்கும் வெய்யில், பவர் கட் இவைகளை நினைத்து மாத்திரம் அல்ல. கூடப் போகும் என் எடையை நினைத்தும்தான். கோடையில்தான் எடை குறையுமாம். அதிகம் வியர்பதால் எடை குறைந்து விடும் என்கிறார்கள். நாம் வியர்க்க விட்டால்தானே? வியர்க்க ஆரம்பிக்கும் பொழுதே, "உஸ்... அப்பா... முடியல... ஏ.சி.ஐ போடு" என்று வியர்வையை அடக்கி விடுகிறோம். 




அது மட்டுமா? ஜில்லுனு ஏதாவது குடிச்சால்தான் தாகம் அடங்கும் என்று நன்னாரி சர்பத் என்ன? ரோஸ் மில்க் என்ன? இவைகளைத் தவிர பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளும் குளிர் பானங்கள் கிலோ கிலோவாக நம் எடையை ஏற்றி விடுகின்றனவே...! குளிர் பானங்களோடு நிறுத்திக் கொள்கிறோமா? ஆங்காங்கே இருக்கும் ஐபாகோக்களும்(IBACO) , மில்கிவேக்களும்(MILKY WAY) நம்மை வா என்று அழைக்கும் பொழுது மாட்டேன் என்றா சொல்ல முடியும்? உள்ளே நுழைந்து வித விதமான ப்ளேவர்களில் ஐஸ் க்ரீம்களை வெளுத்து கட்டினால் எடை ஏறாமல் இருக்குமா?

வெய்யில் கொளுத்துகிறதே என்று திருமணங்கள் நடத்தாமலா இருக்கிறார்கள்? கல்யாணம்,காது குத்தல், பிறந்த நாள், க்ரஹ பிரவேசம், என்று எப்படியும் ஒரு மாதத்தில் இரண்டு நிகழ்ச்சிகளிலாவது கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்பொழுதெல்லாம் எந்த விருந்துமே ஐஸ் கிரீம் இல்லாமல் இல்லை. அதைத் தவிர இன்னும் இரண்டு இனிப்புகள்... எல்லாவற்றையும் பரிமாறி வைத்து விடுகிறார்கள். உணவை வீண் ஆக்க முடியுமா? ஜோதிகா வேறு சின்ன திரையில் வந்து, "உணவை வேஸ்ட் பண்ணாதீர்கள், ப்ளீஸ், வேஸ்ட் பண்ணாதீர்கள்" என்று கெஞ்சும் போது வீண் பண்ண முடியுமா? எல்லாவற்றிற்கும் நம் வயிற்றில் இடம் அளிக்கிறோம். எடை ஏறாமல் இருக்குமா? 

ஐஸ் க்ரீம் ஐ ஒதுக்கலாம் என்றால்?"ஏன் ஐஸ் க்ரீம் சாப்பிடலையா? ஷுகரா"? என்று அக்கறையாக விசாரிப்பார் பக்கத்து இலை காரர்."சீ சீ அதெல்லாம் இல்ல, வெய்ட் ஏறிக் கொண்டே போகிறது, அதான்.." "ஒரு நாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகிடாது". என்று உசுப்பேற்றி உசுப்பேற்றியே நம்மை 'ஓவர் வெய்ட்' ஆக்கி விடுகிறார்கள்.



விருந்தை விட்டுத் தள்ளுங்கள், என்றாவது ஒரு நாள்தான், வீட்டில் இருக்கும் வில்லன்களை என்ன செய்வது? எல்லாவற்றிலும் முதன்மையானது மாங்காய்!!! மாவடு, மாங்காய் தொக்கு, ஆவக்காய், மாம்பழம் என்று பல வடிவங்களில் அது படுத்தும் பாடு இருக்கிறதே..!


அம்மாவிடமும், மாமியாரிடமும் எதை கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ ஊறுகாய் போட கற்றுக் கொண்டு விடுகிறோம். முதலில் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளத்தான் ஊறுகாயை போட்டுக் கொள்வோம். அது கொஞ்சம் மீந்து விடும். சரி ஊறுகாயை வீணாக்க வேண்டாமே என்று கொஞ்சம் சாதம் போட்டுக் கொள்வோம், இப்போது மறுபடியும் ஊறுகாய் மீந்து விடும். இப்படி சாதத்திற்கு ஊறுகாய், ஊறுகாய்க்கு சாதம் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டால் எடை எப்படி ஏறாமல் இருக்கும்? 

இனிமேல் இப்படிப் பட்ட சபலங்கள் எல்லாம் கூடாது என்று எண்ணி ஊறுகாயை குறைவாக போட்டுக் கொள்கிறேன். ஐபாகோ களையும், மில்கி வேக்களையும் புறக்கணித்து விட்டேன்.  ஆனால் மாம்பழம்?? 


செந்தூரான், நீலம், பங்கனப்பள்ளி, இமாம்பசந்து என்று கலர் கலராக வண்டிகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் மாம்பழக் கவர்ச்சியிலிருந்து விடுபடுவது கொஞ்சம் கடினம்தான்... வயதோ ஏறிக் கொண்டிருக்கிறது ஒரே ஒரு நல்ல சுவையான மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு நிறுத்தி விடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் பாருங்கள், ஒரு வெற்றி படம் கொடுத்து விட்டு நடிப்பதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கும் சூப்பர் ஸ்டாருக்கு வெற்றி படம் வாய்க்காதது போல எனக்கும் சுவையான மாம்பழம் கிடைக்க மாட்டேன் என்கிறது. ஒன்று புளிக்கிறது, அல்லது நாராக இருக்கிறது, அல்லது சப்பென்று இருக்கிறது. என்ன செய்வது? இன்றைக்கு கூட மாம்பழம் வாங்கி இருக்கிறேன்.. எப்படி இருக்க போகிறதோ? 

எடை? அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கொஞ்சம் நடந்தால் குறைந்து விடப் போகிறது... தவிர நான் என்ன அழகி போட்டிக்கா செல்லப் போகிறேன்?.. கிடக்கட்டும் கழுதை

படங்கள் உதவி: கூகுள் . இது ஒரு மீள் பதிவு 

Friday, May 5, 2017

எங்கள் ஊர்களுக்கு கிடைத்த கௌரவம் !!

எங்கள் ஊர்களுக்கு கிடைத்த கௌரவம் !!


நான் பிறந்து வளர்ந்த ஊரான திருச்சி மற்றும் எங்கள் சொந்த ஊரான தஞ்சை ஜில்லாவை சேர்ந்த கண்டமங்கலம் ஆகிய இரண்டு ஊர்களுக்கும் இந்த வாரம் ஒரு கௌரவம் கிட்டியிருக்கிறது.

இந்தியாவின் சுத்தமான நகரங்களுள் ஆறாவது இடத்தில் திருச்சி இருக்கிறது. (சத்திரம் பேருந்து நிலையம் துர்கந்தம் இல்லாமல் இருக்கிறதா?)

எங்கள் சொந்த ஊரான கண்டமங்கலம் டிஜிட்டல் கிராமமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.  

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக குஜராத் மாநில அகோதரா கிராமத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மூலம் டிஜிட்டல் கிராமமாக மாற்றினார். அதன் தொடர்ச்சியாக அந்த வங்கி இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நூறு கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 கிராமங்களில் எங்கள் ஊரான கண்டமங்கலமும் ஒன்று.

கிராம மக்கள் இரண்டாயிரத்து இரு நூறு பேர்களில் ஆயிரத்து எழுநூறு பேர்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டு ஏ.டி.எம். அட்டைகளும் வழங்கப்பட்டு விட்டதாம். கடைகளில்(எனக்கு தெரிந்து பெருமாள் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு கடை உண்டு) ஸ்வாய்ப்பிங் மெஷினும் வழங்கப் பட்டு விட்டதாம். 

அடுத்த முறை ஊருக்கு செல்லும் பொழுது கதிர்வேலு கடையில் ஒரு சோடா குடித்து விட்டு, கார்டை தேய்த்து விடலாம். முன்னோடி கிராமமாக இருப்பதில் சந்தோஷம்!!:))))