கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 13, 2017

தோல்வியே வெற்றியாய்

தோல்வியே வெற்றியாய் 

இன்றைய வெற்றிகரமான ஹீரோ வசந்த் குமாரின் மகன் வருண், ஸ்கூலிலிருந்து வந்ததும் ஷூவை கழற்றி வீசினான். புத்தகப் பையை சோபாவில் தூக்கி எறிந்து விட்டு,"ரொம்ப பசிக்கிறது மம்மி! சாப்பிட ஏதாவது குடு.." என்று சொல்லிவிட்டு அம்மாவின் செல்போனை எடுத்துக் கொண்டு நோண்டத் தொடங்கினான். 

"சரி, சரி, நீ மொதல்ல முகம் கழுவி ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. வந்த உடனே செல்.."  என்று மகனை விரட்டி விட்டு, தம்பி வந்துடுச்சு, டிபன் எடுத்து வையுங்க" என்று சமையல்கார அம்மாவுக்கு வசுந்தரா உத்தரவிட்டாள்.

ஒரு புறம் டி.வி.யை ஓட விட்டு, இன்னொரு புறம் செல் போனை பார்த்துக் கொண்டே டிபனை சாப்பிடத் தொடங்கினான்.

"என்னடா? எக்ஸாம் மார்க்கெல்லாம் வந்தாச்சா?" என்று கேட்ட அம்மாவிடம்,"ஓ! ஐயாதான் முதல், நாளைக்கு பேரன்ட்ஸ்,டீச்சர்ஸ் மீட்டிங்கில்  ரிப்போர்ட் கார்ட் கிடைக்கும்" என்றதும் நிம்மதியான வசுந்தரா, மறுநாள் மிகுந்த நம்பிக்கையோடு பள்ளிக்குச் சென்றாள்.
அங்கு சென்றதும்தான் மகன் சொன்னது அப்பட்டமான பொய் என்று தெரிந்தது. கணிதத்தில் மட்டும் பார்டரில் பாஸ் ஆகியிருந்தான், மற்ற பாடங்களில் எல்லாம் மிகவும் குறைந்த மதிப்பெண்கள். ஆசிரியர்கள் புகார் சொன்ன பொழுது தலை குனிந்து கேட்டுக் கொண்டான். 

வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது,"என்னடா வருண்? என்னமோ 
முதல் மார்க் என்றாய்..? எல்லாவற்றிலும் இவ்வளவு குறைந்த மார்க்? என்று துக்கம் தொண்டையை அடைக்க கேட்டதும், "என்னமா ரொம்ப ஓவர் ரியாக்ட் பண்ற? அப்பாவின் படங்கள் ஓடாவிட்டாலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்... அப்படின்னுதானே விளம்பரம் செய்கிறார்கள்..? என்று கேட்டதும், பதில் பேச முடியாமல் உறைந்தாள்.


புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


வலையுலக நண்பர்களுக்கு விஷு மற்றும் ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும், அன்பும் அமைதியும் ஓங்கவும் இறைவனை வேண்டுகிறேன்.