கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, March 6, 2017

என் மகன் யார் முகம்?

என் மகன் யார் முகம்?


மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஹரி, அடுத்தது நீங்கள்தான். பைல் வைத்திருக்கிறீர்களா? எப்படி பே பண்ண போகிறீர்கள்? கார்ட்? பேங்க் ட்ரான்ஸ்பார்? அல்லது போன் பேமெண்ட்?

"பேங்க் ட்ரான்ஸபார்." 

"அப்படியென்றால் நீங்கள் முழு தொகையையும் இப்போதே செலுத்தி விடுங்கள். ஒரு வேலை நீங்கள் செலுத்திய தொகை அதிகமாக இருந்தால் நாங்கள் உங்கள் வாங்கி கணக்கிற்கே இரண்டு வேலை நாட்களுக்குள் திருப்பி அனுப்பி விடுவோம்". 

"ஓகே" ஹரி தன்னுடைய கை பேசியிலிருந்து அந்த மருத்துவ மனையின் கணக்கிற்கு அந்த ரிஷப்ஷனிஸ்ட் கூறிய தொகையை டிரான்ஸ்பார் செய்து விட்டு இருக்கையில் மீண்டும் வந்து அமர்ந்தவுடன். ஒரு டிரேயில் நான்கு பிஸ்கெட்டுகள், டீ, மற்றும் ஜூஸ் எடுத்து வந்த பெண் இவர்கள் முன் நீட்ட, ஹரியும் மாயாவும் மறுத்தார்கள். 

"உங்கள் முறை வருவதற்கு எப்படியும் நாற்பது நிமிடங்கள் ஆகும். எனவே எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் தனியாக பே பண்ண வேண்டாம்". 

ஹரி டீ கோப்பையை எடுத்துக் கொள்ள, மாயா பழச்சாற்றை தேர்ந்தெடுத்தாள்.

ஜுஸை உறிஞ்சியபடி," இவர்கள் நிஜமான பெண்களா? அல்லது ரோபோக்களா"? என்றாள்.

"பெண்கள்தான்..."

"எப்படி சொல்கிறாய்"?

"தெரியும்.." 

"உனக்கு தெரியும் என்பதுதான் தெரிகிறதே.. எப்படி தெரிந்து கொண்டாய்"?

"வீட்டில் போய் சொல்கிறேனே.."

"இல்லை இப்போதே சொல்.. இன்னும் முப்பத்தைந்து நிமிடங்கள் கடத்த வேண்டும்.."

"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் இருக்கு என்று சென்ற நூற்றாண்டு பாடல் ஒன்று உண்டு..."

"வெய்ட்! வெய்ட்!  சேலை கட்டும்... அப்படீன்னா"?

"மை காட்! இதுக்குதான் வீட்டில் போய் சொல்றேன் என்றேன்". என்றவன், செல்லை நோண்டி ஒரு படத்தை அவளுக்கு காண்பித்த,"தோ, இந்தப் படத்தில் உள்ள பெண் அணிந்திருக்கும் உடைதான் சேலை" என்றான்.

" ஏய், இது சாரி, நான் கூட நம் திருமணத்தன்று அணிந்து கொண்டேனே.."!

"சபாஷ்! கண்டு பிடித்து விட்டாயே.. அதேதான்.."

"நீ வேறு ஏதோ பேர் சொன்னாயே.."?

"சேலை.. சாரியை சேலை என்றும் சொல்வார்கள்".

"ஓகே"
"இப்போது வந்த பெண் எங்கே சாரி கட்டிக் கொண்டிருக்கிறாள்"?

"இப்போ யார்தான் சாரி கட்டிக்கிறா? உன்னோட எள்ளு கொள்ளு பாட்டி தினமும் கட்டிக்கொண்டிருக்கலாம்.."

"இதையா? தினமுமா...? ஓ காட்.."

"சரி அதை கட்டிக்க கொண்டால் என்ன"?

அவன் பதில் சொல்ல துவங்குவதற்குள், "மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஹரி.. "என்று அழைப்பு கேட்டது.

அவர்கள் இருவரும் எழுந்து, டாக்டர் அறைக்குள் சென்றார்கள்.
"வெல்கம் ஹரி வெல்கம் மாயா", என்று வரவேற்ற டாக்டர் ஐம்பது வயதை நெருங்கி கொண்டிருக்கலாம்.. ஆனால் நாற்பது என்றுதான் பார்ப்பவர்கள் கூறுவார்கள். 

"ஸோ! யூ ஹாவ் டிசைடட் டு ஹவ் எ கிட்? ரைட்"?

"எஸ் டாக்டர் "

"உங்களுக்கு அதற்கான அரசாங்க அனுமதி கிடைத்து விட்டதா"? 

"ஓ எஸ்"! என்ற ஹரி, தன் செல்போன் மெமோரியில் இருந்த ஒரு கடிதத்தை அவரிடம் காண்பிக்க, அதை படித்த அவர்," குட்! இதை என்னுடைய மெயில் ஐ.டிக்கு அனுப்பி விடுங்கள். நீங்கள் எந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள போகிறீர்கள்? இயற்கையாகவா  இல்லை செயற்கை கருத்தரிப்பா"?

"இயற்கை முறைதான்.."

"குட்! இப்போது பெரும்பாலானோர் செயற்கை கருத்தரிப்புக்கு செல்கிறார்கள். கணவனும் மனைவியும் வேறு வேறு இடங்களில் வசிப்பது, வொர்க் பிரஷர் என்று வெவ்வேறு காரணங்கள். உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு விட்டது,  நாற்பது நாட்கள் இல்லையா ?" என்று பைலை புரட்டிக்கொண்டே கேட்டார்.

"ஆம்"!

"வெரி குட்! கங்கிராஜுலேஷன்ஸ்! உங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும்"? 

மாயா தன்னுடைய ஐ புக்கை நீட்ட, அதை பெற்றுக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்.

கருத்த,சுருட்டை முடி, நீண்ட நீல விழிகள். சற்றே பரந்த மூக்கு, கோதுமை நிறம், உயரமாக இருக்க வேண்டும். கொஞ்சம் புஷ்டியாக இருந்தால் தவறு இல்லை...

டாக்டருக்கு சிரிப்பு வந்தது. "ஆப்பிரிக்க, ஐரோப்பிய, இந்திய கலவையாக இருக்கிறதே"? என்றார்.

"எனக்கு அப்படித்தான் வேண்டும். தவிர எனக்கிருக்கும் சைனஸும், கணவர் வழியில் இருக்கும் சர்க்கரை நோயும் வேண்டாம்".

"ஓ! அதெல்லாம் நாம் வாழும் முறையில் இருக்கிறது. எனிவே, முயற்சிக்கலாம்..! என்றவர், ஒரு பட்டனைத் தட்ட, உள்ளே வந்த அசிஸ்டென்டிடம் ப்ரோஸெஸ் ரூம் தயாரா"? என்று கேட்க, அந்த ஜூனியர் டாக்டர் தலை அசைக்க, "கம் மாயா, வீ வில் கோ பார் தி ப்ரொசீஜர்.. என்றுவிட்டு, கொஞ்சம் காத்திருங்கள் ஹரி" என்றார்.

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவர், ஹரியிடம், "நீங்கள் கேட்டிருக்கும் மாற்றங்களை கருவின் டி.என்.ஏ.வில் செய்து விட்டேன். உங்கள் விருப்பப்படியே உங்களுக்கு மகனோ, மகளோ பிறப்பார்கள். என்றார். மாதா மாதம் தவறாமல் பரிசோதனைக்கு வர வேண்டும் என்றார்". 

அவர் கூறியதையெல்லாம் அப்படியே கடை பிடித்தார்கள். குறித்து கொடுத்த தேதிக்கு ஒரு வாரம் முன்பாகவே மாயாவுக்கு குழந்தை பிறந்து விட்டது. அவர்கள் கேட்ட படியே  நீல் கண்களும், சுருட்டை தலை முடியுமாக பிறந்த குழந்தையைப் பார்த்து உறவினர்களும், "நண்பர்களும் ரொம்ப வித்தியாசமாக இருக்கே? யார் மாதிரி"? என்று ஆச்சரியப்பட்டார்கள்.

அது மாயாவுக்கும் ஹரிக்கும் முதலில் கொஞ்சம் பெருமையாக இருந்தது. நாட்கள் செல்லச், செல்ல, "இவன் யார் மாதிரி? நம் குடும்பத்தில் யாரும் இப்படி கிடையாதே"? என்ற விமர்சனங்கள் கொஞ்சம் சங்கடமூட்டின. 

குழந்தை ராமும் தான் மட்டும் கூட்டத்தில் சேராமல் தனியாக இருப்பதை அசௌகரியமாக உணர்ந்தான். அவனை எப்படியோ தேற்றினார்கள்.

பழனியில் பால் அபிஷேகம் செய்ய பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தது இப்போதுதான் அலாட் ஆகியிருந்தது. அவனும், மாயாவும் குழந்தை ராமுடன் பழனி சென்றார்கள். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்தவுடன் யாரோ முதுகைத்   தட்டினார்கள். . 

"நீ ராஜீவ் மகன் ஹரிதானே"?

"ஆமாம், நீங்க"?

என்னைத் தெரியவில்லையா? நான் உங்கப்பாவின் நண்பன் கார்த்திக்..

"ஓ .! அங்கிள்.. நீங்களா? எனக்கு சட்டென்று அடையாளம் தெரியவில்லை. என்னை எப்படி கண்டு பிடித்தீர்கள்"?

"என்ன கஷ்டம்? நீதான் அப்படியே உங்க அப்பா போலவே இருக்கிறாயே? என்றவர் பேசிக்கொண்டிருந்த விட்டு, இது யார்"? என்று குழந்தையை பார்த்து கேட்டார். 

"என் பையன்..ராம்."

"அப்படியா? இவன் உன்னைப் போல் இல்லை, அம்மா மாதிரியும் தெரியவில்லை...வித்தியாசமாக இருக்கிறான்.ஆப்ட் பேபியா?"

"ஆமாம்..  "என்று கூறிய ஹரிக்கு தன் மகனின் அடையாளத்தை தான் அழித்து விட்டோமோ என்று ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.