கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, March 1, 2017

சென்னை - பெங்களூர் - திருச்சி - சென்னை

சென்னை - பெங்களூர் - திருச்சி - சென்னை 

சென்ற வாரம் பெங்களுர், திருச்சி என்று கொஞ்சம் அலைச்சல் வாரம். சென்னை-பெங்களூர், பெங்களூர்- திருச்சி இரண்டுமே இந்த முறை பேருந்து பயணம். ஏ.சி. ஸ்லீப்பர் கோச். போகும் பொழுது கொஞ்சம் தூங்கினேன். அதனால் கஷ்டமாக இல்லை. வரும் பொழுது தூக்கம் வரவில்லை, படிக்க புத்தகம் எதுவும் இல்லை. சம்மணமிட்டு அமர்ந்தபடி கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு வந்தேன். சும்மாயிருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்தது. நீண்ட நாட்களுக்கு முன்பு வாசித்த ரா.முருகனின் ஒரு சிறு கதை நினைவுக்கு வந்தது. பேச்சிலர் மேன்ஷனில் தங்கியிருக்கும் இளைஞன் ஒருவன், விடுமுறை நாள் ஒன்றின் பகல் பொழுதில்
ரூம் மேட் வெளியே சென்று விட தனியாக என்ன செய்வது என்று புரியாமல் தியானம் செய்யலாம் என்று உட்காருவான், அப்பொழுது அடுக்கடுக்காக அவனுள் எழும்பும் எண்ணங்கள்... சற்று நேரம் கழித்து கதவை திறந்து கொண்டு வரும் அறை நண்பன்,"என்னடா சும்மா உட்கார்ந்திருக்கிறாய்? தியானம் செய்வதுதானே..? என்பதோடு கதை முடியும்.

சென்னை பெங்களூர் சாலையைப் போல, பெங்களூர் திருச்சி சாலை அத்தனை நன்றாக இல்லை. நம்மை அவ்வப்பொழுது உருட்டி விடுகிறது, தூக்கி அடிக்கிறது.

திருச்சி செல்லும் போதெல்லாம் மாணிக்க விநாயகரை தரிசிக்காமல் வர மாட்டோம். பெரும்பாலும் ரெங்கநாதரையும், சில சமயங்களில் அகிலாண்டேஸ்வரியையும், சமயபுரம் மாரியம்மனையும் தரிசனம் செய்வது வழக்கம். இந்த முறை நேரம் குறைவாக இருந்த காரணத்தால் முதலில் பெரியம்மாவை பார்த்து விடலாம் என்று முடிவு செய்தோம். நீங்கள் யாரையாவது நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் குறிப்பிடுவது உலகிற்கெல்லாம் படியளக்கும் நம் ரெங்கநாயகித் தாயார்!! பெருமாள் பெரிய பெருமாளாக இருக்கும் பொழுது தாயார் பெரியம்மாதானே?

இப்போதெல்லாம் எப்போதுமே திருவரங்கம் கோவிலில் கும்பல்தான், அதிலும் அன்று வெள்ளிக்கிழமை, ஸ்ரீரங்கம் சுக்கிர க்ஷேத்திரம் அல்லவா? கும்பல் கொஞ்சம் அதிகம்தான். தாயார் சந்நிதியில் தேவை இல்லாமல் நெருக்கினார்களோ என்று தோன்றியது. ஆனாலும் நன்றாக தரிசனம் கிட்டியது.  சேவிக்க முடியுமா என்று யோசித்தோம், அங்கிருந்த வாட்ச்மேன்," மணி இப்போ 4:40தானே? ஐந்து முப்பது வரை தரிசனம் உண்டு" என்றார். ஆனாலும், மிகப் பெரிய வரிசை பயமுறுத்தியது. எனவே ரூ.250/- க்கு டிக்கெட் வாங்கி கொண்டு கொஞ்சம் வேகமாக நகர்ந்த வரிசையில் சென்று, பெருமாளை தரிசித்தோம். எப்போது ரெங்கனைப் பார்த்தது போதும் என்று திருப்தி ஏற்பட்டிருக்கிறது? பார்க்க, 
பார்க்க அலுக்காத ஆராவமுதன் அல்லவா அவன்!! 

வெளியே, இருக்கும் கடைகளில் அல்ப ஷாப்பிங்! எப்பொழுதும் சகோதரிகளில் யாராவது ஒருவர் ஒரு இரும்பு வாணலியோ, தோசை கல்லோ, கல் சட்டியோ வாங்குவோம். இந்த முறை யாரும் எதுவும் வாங்கவில்லை. ரெங்க விலாஸ் புத்தக கடையில் திருவரங்கன் உலா புத்தகத்தை பார்த்து விட்டு, அவர்கள் கார்ட் எடுத்துக் கொள்வதில்லை என்று கூறி விட்டதால் வைத்து விட்டேன். முடிந்தால் கிண்டலில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டியதுதான்.  

கார்ட் என்றதும் நினைவுக்கு வருகிறது. டீ மானிடைசேஷன் விளைவு ஸ்ரீரங்கம் கோவிலில் டிக்கெட் கவுண்டரில் 'All banks credit & debit cards accepted here' என்னும் போர்ட் பார்க்க முடிந்தது. பெங்களூர் இஸ்கான் கோவிலிலும் உண்டியல் அருகே இதே போன்ற அறிவிப்பை பார்த்தோம். பெரும்பாலான கோவில்களில் இப்போதெல்லாம் கார்டு பேமெண்ட் இருக்கிறது போலிருக்கிறது. நல்லதுதான்! 

ஆக, இந்த முறை திருச்சி விசிட் முடிந்தது. அடுத்த விசிட் எப்போது என்று தெரியவில்லை. அடுத்த விசிட்டின் பொழுது இறை அருள் இருந்தால் வை.கோ. அவர்களையும், கீதா சாம்பசிவம் அவர்களையும், ரிஷபன் அவர்களையும்(இவரை சந்திக்க வேண்டும் என்பது நீ...ண் ....ட... வருட கனவு) சந்திக்கலாம்.