கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, January 25, 2017

தேசிய கீதம்!

தேசிய கீதம்!



சமீபத்தில் துருவங்கள் பதினாறு படம் பார்க்கச் சென்ற பொழுது, திரைப்படம் துவங்கும் முன், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்கவும் என்ற அறிவிப்பை போட்டுவிட்டு, தேசிய கீதத்தை ஒளி பரப்பினார்கள். திரை அரங்கில் எல்லோரும் எழுந்து நின்றது மட்டுமல்லாமல் தேசிய கீதத்தை பாடவும் செய்தார்கள், நானும் என் தோழியும் உட்பட. திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும்  இருந்தது. 1972 வரை திரைப்படம் முடிந்து தேசிய கீதம் போடப் படும். மூன்று மணி நேரம் உட்கார்ந்திருந்த மக்களால் இன்னும் 52 நொடிகள் செலவழிக்க முடியாததால் அந்த பழக்கம் நிறுத்தப் பட்டது. இப்போது மீதும் துவங்கப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம்தான்!

தேசிய கீதத்தை பள்ளியில் இசைத்ததோடு சரி. இப்போதெல்லாம் பள்ளிகளில் கூட USB PORT ஐ சொருகி விடுகிறார்கள். ஒரு முறை சுகி சிவம் அவர்கள் இதைப் பற்றி," இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் நடக்கும் விழாக்கள் உட்பட எல்லா நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதத்தை சி.டி.யில் போட்டு விடுகிறார்கள். யாரும் பாடுவதில்லை. ஜெயஹே! ஜெயஹே!ஜெயஹே! அதாவது வெற்றி!வெற்றி!வெற்றி! என்பதை மக்கள் சொல்ல வேண்டாமா? பலர் கூடி ஒரு வார்த்தையை சொல்லும் பொழுது அந்த வார்த்தையே பலம் பெற்று மந்திரம் போல ஆகி விடும். ஆகவே மக்கள் இதை பாட வேண்டாமா?" என்றார். 

உண்மைதான், சிறு வயதில் இதன் அர்த்தம் புரியாமல் பாடுவது வேறு, இப்போது அதன் பொருளை உணர்ந்து பாடுவது வேறு.  நண்பர் ஒருவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற பொழுது.அந்த டூர் ஆர்கனைஸர் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்தவர்களை அவரவர் தேசிய கீதத்தை இசைக்கச் சொன்னாராம். "அப்போது நான் நம்முடைய தேசிய கீதத்தை பாடினேன், அந்த தருணத்தில் எனக்கேற்பட்ட உணர்வுகளை வர்ணிப்பது கடினம்.." என்று உணர்ச்சி பொங்க கூறினார்.  நம் நாட்டில் இருக்கும் வரை நாம் தமிழர், தெலுங்கர், மராட்டியர், பெங்காலி என்று பிரிந்து நிற்போம். ஆனால் நம் நாட்டை தாண்டினால் நாம் அனைவரும் இந்தியர் என்னும் உணர்வுதான் மேலோங்கி இருக்கும். உண்மையும் அதுதானே.? நாம் எல்லோரும் முதலில் இந்தியர்கள்,பிறகுதான் மொழி,மதம், இனம், ஜாதி போன்ற அடையாளங்கள். ஆகவே திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்பப்  பொழுது நீங்களும்
உடன் பாடுங்கள். உங்கள் குழந்தைகளையும்  பாடச் சொல்லுங்கள்.

நாளை குடியரசு தினம், எல்லோரும் ஒற்றுமையாக கொண்டாடலாம்! நம் தெருவிலோ, காலனியிலோ கொடியேற்றும் நிகழ்ச்சி இருந்தால் தவறாமல் அதில் கலந்து கொண்டு தேசிய கீதத்தை எல்லோருடனும் சேர்ந்து பாடலாம். ஜெய் ஹிந்த்!