கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 5, 2017

வேண்டுதல்

வேண்டுதல் 



இதயத்தில் பிறக்கின்ற எண்ணங்கள் யாவுமே 
இனிமையாய் இருக்க வேண்டும் 
நிலத்தில் நான் செய்யும் செயல்கள் யாவுமே 
நலத்தையே விதைக்க வேண்டும் 
பொய்மையை சூதினை பொழுதில் மறந்து 
புவனத்தை ஆள வேண்டும்
நல்லதை நண்பனை நன்றியை என்றும்
நான்  நழுவாதிருக்க வேண்டும்
இத்தனை நலன்கள் பெற்று நான் வாழ்ந்திட 
அம்மா உன்னருள் வேண்டும்
மனதை காயத்தை மாண்புரச் செய்ய 
உன் நினைவதில் வேண்டும்  

சாருவும் நானும் - 5

சாருவும் நானும் - 5 


பில்லர் ராக் அருகே வரும் பொழுது கார் ஒன்று பழுதாகி நிற்க, உதவிக்கு யாருமில்லாமல் ஒரு பெண் தனியே நின்று கையைப் பிசைந்து கொண்டிருந்தாள்.

" ஹை! நம்ம(??) ராகினிஸ்ரீ! ட்ரைவர், டிரைவர்  வண்டியை நிறுத்துங்க. பாவம் நம்ம ராகினிஸ்ரீ தனியா நிக்கிறாங்க.." சாறு பேசிக் கொண்டே கார் கதவை திறந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கருகே ஓடினாள். 

"கட்! கட்! கட்!.." யாருமா அது.."? குறுக்க வரது? இப்போ ஹீரோவோட காரு இல்ல வரணும்..?"

காலம் காலமாக சினிமாவில் காதல் பிறக்கும் விதம் படமாக்கப்பட்டுக் கொடிதிருப்பது தெரியாமல் நடுவே புகுந்து விட்டோம். மன்னிப்பு கேட்டுக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். 

சாருவுக்கு கொடைக்கானல் ட்ரிப் பிளாப்  ஆன வருத்தம் ராகிணிஸ்ரீயைப் பார்த்ததில் எங்கேயோ பறந்து போய் விட்டது. "சினிமாவில் பார்க்கறதுக்கும்,நேரில் பார்க்கறதுக்கு வித்தியாசமே இல்லையே.. கலர்தான் கொஞ்சம் மட்டு. யார் ஹீரோன்னு தெரியலயே..சே! இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாம்.." பேசிக் கொண்டே வந்தவள், "வயிற்றை பிரட்டறது.." என்றாள். 

கீழே இறங்குவதால் இருக்கும். இந்த எலுமிச்சம்பழத்தை..." நான் சொல்லி முடிப்பதற்குள் குபுக்கென்று வண்டிக்குள்ளேயே வாந்தி எடுத்தாள். வண்டியை ஓரமாக நிறுத்தி சுத்தம் செய்தேன். அதற்குப் பிறகு வண்டியை இரண்டு,மூன்று இடங்களில் நிறுத்த வேண்டி இருந்தது. 

"கடவுளே,என்னை ஏன் இப்படி சோதனை பண்ற..? அவ்வளவுதான், நான் பிழைக்க மாட்டேன், கடைசியா ஒரு தடவ எங்க அம்மா முகத்தை பார்ப்பேனா..? நான் செத்துப் போயிட்டா என் சாம்பலை கூவத்தில் கரைச்சுடுங்கோ.."

"சார், அம்மாக்கு ரொம்ப முடியல போல, மதுரைல நல்ல நர்சிங் ஹோமுக்கு வண்டிய விடறேன்.." சாருவுக்கு சாதாரண ஜலதோஷம் பிடித்தாலே இந்த டயலாக்குகளைத்தான் பேசுவாள் என்பது பாவம் அந்த டிரைவருக்கு எப்படி தெரியும்?

கார் ஒரு புதிய கட்டிடத்தின் முன் வந்து நின்றது. அது ஒரு நர்ஸிங் ஹோம். தைரியமா இருங்க சார், ஒண்ணும் ஆகாது. என்று எனக்கு அனாவசிய ஆறுதல் கூறிவிட்டு சென்றார் அந்த டிரைவர். 

சாருவை பரிசோதித்த டாக்டர், " நீங்கள்லாம் படிச்சவங்க, நீங்களே இப்படி பண்ணலாமா"? என்றார்.

"என்ன டாக்டர்"?

"என்ன என்ன டாக்டர்? கையில காசு இருந்தா சும்மா இருக்க முடியாம ஊட்டி, கோடைக்கானல்னு எங்கேயாவது போக வேண்டியது, அங்க கண்டதை சாப்பிட்டு, கண்டா தண்ணிய குடிச்சு, ஏதாவது வியாதியை வரவழைச்சுக்க வேண்டியது.. பெட்டெர் டு அட்மிட் ஹர் ஹியர்.. எல்லா டேஸ்டும் எடுத்து பார்த்துடலாம்" என்று கூறி என் வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்தார். 

சாருவுக்கு உடலில் கோளாறு எதுவும் கிடையாது என்று எனக்கு தெரிந்த விஷயத்தை டெஸ்ட் முடிவுகளும் உறுதி செய்தன. சென்னை திரும்ப வேண்டியதுதான்.

ரயிலின் அன் ரிஸர்வ்டை விட பஸ் மேல் என்று நினைத்தது எத்தனை பெரிய மதியீனம்? கல்யாண சீசன் போதாதென்று அரசாங்கமே அறிவித்திருந்த பந்த் நாளை மறுநாள். அந்த பஸ்ஸில் டிரைவர் ஒருவருக்குத்தான் தனியாக ஒரு முழு சீட் கிடைத்தது. இரண்டு பேர் உட்காரக்கூடிய சீட்டில் நான்காவது ஆசாமியாக உட்கார்ந்து வந்த அந்த போஸைத்தான் இப்போது தினமும் யோகாசனமாக செய்து வருகிறேன். ஓட்டுனரோ வேறு எதைப்பற்றியும் கவலைப் படாமல் ஒரு பேரழிவிலிருந்து பிரயாணிகளை காப்பாற்றியாக வேண்டும் என்பது போல ஓட்டிக் கொண்டிருந்தார். எப்படியோ சிங்கராச் சென்னையை அடைந்து விட்டோம்.

"என்ன சாரு, கொடைக்கானல் டிரிப்பெல்லாம் எப்படி"?
பக்கத்து வீட்டு மாமி நாங்கள் உள்ளே நுழைந்த சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக தினத்தந்தி படிக்கும் மாமிக்கு செய்திகளை சுடச்சுட தெரிந்து கொள்ள வேண்டும்.

"கொடைக்கானலில் நான் ராகிணிஸ்ரீயை பார்த்தேன்.." என்ன இருந்தாலும் சாரு கெட்டிக்காரி. எதை, யாரிடம், எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியும்.

"மெட்ராஸில் தண்ணி கஷ்டம்னு சொல்கிறவர்களை ஒரு தடவ கொடைக்கானல் போய் விட்டு வரச் சொல்லணும். அங்க ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சுட்டு நான் பட்ட பாடு..."!

தன் துன்பங்களைக் கூட பெருமைகளாக மாற்றிக் கொள்ளத்தெரிந்த சாருவுக்கு கவலை இல்லை. அடுத்த முறை வெளியூர் போகும்வரை சொல்லிக் கொள்ள விஷயம் இருக்கிறது. நான் இனிமேல்தான் கணக்கு எழுத வேண்டும்.

--முற்றும்

ஒரு பின்னுரை:

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் கொடைக்கானல் சென்று ரூம் கிடைக்காமல் அவதிப்பட்ட அனுபவத்தை நிறைய சரக்கு சேர்த்து எழுதிய கதை. 1992 நவம்பர் மாத மங்கையர் மலரில் நிரஞ்சனா என்ற புனைப்பெயரில் பிரசுரமானது. நான் எழுதி அனுப்பியதை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டிருந்தார்கள். இப்போது படிக்கும் பொழுது அப்போதைய விலைவாசி வியப்பூட்டுகிறது(ஒரு வாழைக்காய் எட்டணா). 

நான் சந்தித்த பல பெண்களிடம் இருக்கும் வேடிக்கையான குணத்தை மொத்தமாக சாருவிடம் ஏற்றிவிட்டேன்.  மீண்டும் ஒரு முறை கொடைக்கானல் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.   

தொடர்ந்து வந்து வாசித்து, பாராட்டியவர்களுக்கு நன்றி!