கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, October 28, 2017

கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்ற கந்த சஷ்டி விழா

கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்ற கந்த சஷ்டி விழா

மேலத்தெரு எனப்படும் மேற்குத் தெருவில் உள்ள பெருமாள் கோவில் 
எங்கள் மாமா வீட்டில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி அன்று காவடி எடுக்கும் பழக்கம் உண்டு. எங்கள் ஊர் கண்டமங்கலம் சற்று பெரிய கிராமம். அக்கிரஹாரமே நான்கு தெருக்கள். சாதாரணமாக மங்கலம் என்று முடியும் ஊர்கள் எல்லாம் அரசர்களால் அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட  இறையிலி கிராமங்களாக இருக்கும். அப்படிப்பட்ட ஊர்களில் அக்கிரஹாரம் பெரிதாக இருக்கும். ப்ராசீன அமைப்பின்படி ஊரின் மேற்கே பெருமாள் கோவிலும், வட கிழக்கில் சிவன் கோவிலும் உண்டு. 

சிவன் கோவிலில் உள்ள விநாயகர்
சிவன் கோவில் கொஞ்சம் படிகள் ஏறி செல்லும்படி அமைந்திருக்கும். மூலவர் கைலாசநாதர் கிழக்கு பார்த்தும், ராஜராஜேஸ்வரி அம்மன் நின்ற கோலத்தில் தெற்கு பார்த்தும் இருக்கின்றனர். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தியும், பிரகாரத்தில் விநாயகரும், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய ஸ்வாமி மயில் வாகனத்தில் தனித்தனி சன்னதிகளிலும் வீற்றிருக்கின்றனர். ஸ்வாமி சன்னதிக்கும், அம்பாள் சன்னதிக்கும் இடையே இருக்கும் மேடையில் ஊரின் எல்லை தெய்வமான வாத்தலை நாச்சியம்மனின் உற்சவ விக்கிரகம் இருக்கின்றது. அமர்ந்த கோலத்தில் ஒரு கையில் கிண்ணமும், மறு கையில் வாளும் ஏந்தி, நெருப்பு கீரிடத்துடன், புன்சிரிப்போடு விளங்கும் அம்மன் வெகு அழகு!. அம்மனின் கிரீடத்தின் பின் பகுதியில் ஸ்ரீ சக்கரம் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பு. 

இங்கிருக்கும் முருகன் சந்நிதியில் ஒரு சிறப்பு என்னவென்றால், நேரே நின்று தரிசிக்கும் பொழுது முருகன் மட்டும் தனியாகவும், வலது புறத்தில் நின்று பார்த்தால் தெய்வானையோடும், இடது புறம் நின்று பார்த்தால் வள்ளியோடும் காட்சி அளிப்பார். 





வீட்டிலிருந்து பூஜிக்கப்பட்ட காவடியை சுமந்து சிவன் கோவிலில் இருக்கும் முருகன் சந்நிதிக்கு வந்து, அங்கு அபிஷேகம், ஆராதனைகள் முடித்து, பின்னர் வீடு திரும்பி ஊரில் உள்ளோருக்கு விருந்து. பெரிய கூடத்தில் நான்கு வரிசை இலை போடப்பட்டு, இரண்டு பந்திகள் ஆண்கள், ஒரு பந்தி பெண்கள் என்று சாப்பாடு போடப்பட்ட காலங்கள் மாறி, இன்று இரண்டு வரிசை ஒரு பந்தி ஆண்கள், அரை பந்தி பெண்கள் என்று சுருங்கி விட்டது. மாலையில் சூர சம்ஹாரம் மற்றும் ஸ்வாமி புறப்பாடு உண்டு. அப்போது பொங்கல், சுண்டல் பிரசாத விநியோகம் உண்டு. 

பல வருடங்களுக்குப் பிறகு கந்த சஷ்டி விழாவுக்கு ஊருக்கு சென்றிருந்தேன். 
ஊர் வெகுவாக மாறியிருக்கிறது. ஊருக்குள் நுழையும் முன் 'கண்டமங்கலம் டிஜிட்டல் கிராமத்திற்கு உங்களை வரவேற்கிறோம் என்னும் பெரிய பிளக்ஸ் போர்ட் நம்மை வரவேற்கிறது. எங்கள் ஊர் டிஜிட்டல் கிராமமாகியிருக்கிறது என்பதை பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதி இருந்தேன். 

சில உறவினர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டு இருக்கின்றன. சில வீடுகள் இடிந்து பாழாகி விட்டன, சில வீடுகள்தான் அப்படியே இருக்கின்றன. 





மேலே உள்ளது எங்கள் வீடு. உயரமாக இருந்த அந்த திண்ணை ரோடை உயர்த்தியதால் குட்டையாகி விட்டது. இதிலிருந்து எத்தனை முறை கீழே விழுந்திருக்கிறோம்..! திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, பல்லாங்குழி, கல்லாங்காய்(ஏழு கல்) முதல் பாண்டி வரை அத்தை குழந்தைகளோடு விளையாடியிருக்கிறோம்.

கதவுக்கு மேல் உள்ள வளைவில் கே.விஸ்வநாத ஐயர், முத்திராதிகாரி, காஞ்சி மடம் என்னும் போர்ட் இருக்கும்.

நடையில் அல்லது ரேழியில் உள்ள மாப்பிள்ளை திண்ணை.

இந்த திண்ணையில் சின்ன தாத்தா இரவில் கொசுவலை கட்டிக்கொண்டு படுத்துக் கொள்வார் 


 

கூடத்தில் உள்ள ஊஞ்சல். இதில்தான் எங்கள் அப்பாவின் அத்தை உறங்குவார். அவர் பகலில் தூங்கி நான் பார்த்ததில்லை. இரவில் பதினோரு மணிக்குத்தான் இதில் வந்து உட்கார்ந்து கொண்டு மெதுவாக ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே இருப்பார். எப்போது தூங்குவார்? அவரின் இறுதி மூச்சு அடங்கியதும் இந்த ஊஞ்சலில்தான்.

நான் சிறுமியாக இருந்த பொழுது இந்த ஊஞ்சலின் கம்பிகளை பிடித்துக் கொண்டு நின்றபடி நான்தான் ஜெயலலிதா என்று கூறி, 'ஒரு நாள் யாரோ, என்ன பாடல் சொல்லிதந்தாரோ..' என்று பாட முயற்சிக்க, பின்னாலிருந்து யாரோ ஊஞ்சலை வேகமாக உதைக்க, எப்படியோ விழாமல் தப்பித்தேன்.

ஊஞ்சலுக்கு பின்னால் தெரியும் கதவைத் திறந்தால் இருக்கும் அறைக்குள்தான் பலசரக்கு சாமான்கள் இருக்கும். அன்றாட சமையலுக்கு  தேவையானவற்றை அத்தைதான் எடுத்து கொடுப்பார். ஊஞ்சலை ஒட்டி ஒரு அலமாரி தெரிகிறதே, அது மருந்து அலமாரி எனப்படும். அதை திறந்தாலே குப்பென்று மிக்ஸர், டர்பன்டைன் போன்றவைகளின் நெடி அடிக்கும். ஊஞ்சலுக்கு பக்கவாட்டு சுவரின் மேலே வினொலியா சோப்பின் காலண்டர் பட லட்சுமி, சரஸ்வதி, தஞ்சாவூர் பட காளிங்க நர்த்தன கிருஷ்ணன் போன்ற பெரிய படங்கள் மாட்டப்பட்டிருக்கும்.

கூடத்தை ஒட்டியிருக்கும் முற்றம் 
வாசலிலிருந்து ரேழியைத் தாண்டியதும் வரும் முற்றம். நீல வண்ணம் பூசப்பட்டிருக்கும் தொட்டியில் தண்ணீர் நிரப்பப் பட்டிருக்கும். உள்ளே வரும் பொழுது அங்கு கால் அலம்பிக்கொடு வர வேண்டும் என்பது விதி. சாக்கு போட்டு மூடப்பட்டிருப்பது தாத்தா உட்கார்ந்து பூஜைக்கு சந்தனம் அரைக்கும் கல்.





இது எங்கள் மாமா வீடு. இதில் ஒரு பகுதியை மாற்றி கட்டிக்க கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பகுதி அப்படியே இருக்கிறது. படத்தில் இருப்பது வடவண்டை தாழ்வாரம். நல்ல காற்று வரும் இங்குதான் பெரும்பாலும் எங்கள் கோடை விடுமுறை நேரங்கள் கழியும்.






மாமா வீட்டின் புதுப்பிக்கப்பட்ட பகுதியில் நூறு வருடங்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம்.
(படத்தில் இருப்பது என் மன்னி(மாமா மகள்)





இந்த கண்ணாடி பீரோவுக்கும் நூறு வயதுக்கு மேல் ஆகி விட்டது. எங்களின் சிறு வயதில் 'ஐ ஸ்பை' விளையாடும் பொழுது இந்த பீரோவுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் பார்த்தால் திட்டுவார்கள்.
புகைப்படத்திற்கு போஸ்  கொடுத்திருப்பது மாமாவின் மருமகள். 

13 comments:

  1. இனிய நினைவுகள். இந்த முறை தமிழகம் வந்திருந்த போது ஒரு பயணத்தில் டிஜிட்டல் கிராமம் என்ற பதாகைகள் பார்க்க முடிந்தது - தஞ்சை அருகே....

    பழைய வீடுகள் எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்! நீண்ட விடுமுறைக்குப் பிறகு தலை நகர் திரும்பியாச்சா? நீங்கள் பார்த்த பதாகை எங்கள் ஊராகத்தான் இருக்கும், ஏனென்றால் தமிழகத்தில் எங்கள் ஊர் மட்டும்தான் டிஜிட்டல் ஆகியிருக்கிறது.
      //பழைய வீடுகள் எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்றன.// ஆம், கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் வசதிகள் வேண்டாமா? ஆனால் நமக்குத்தான் பழைய அழகை இழந்து விட்டதோ என்று தோன்றுகிறது.

      Delete
  2. பிள்ளையார், முருகன் படங்கள் ஏற்கெனவே பார்த்தோம். மற்றபடி உங்கள் வீடு அதன் படங்கள் எல்லாம் பழைய காலத்திற்கே இட்டுச் செல்கின்றன. அந்தக் கடிகாரம் மாதிரி ஒன்று எங்க மாமனாரிடமும் இருந்தது. ஊர் மாற்றிப் போகையில் எங்க கடைசி நாத்தனாரிடம் வைச்சிருக்கச் சொல்லிக் கொடுத்துச் சென்றோம். அவள் எங்கேயோ தொலைத்து விட்டாள் அல்லது அது எங்கேயோ போயிடுச்சு! :( இம்மாதிரிப் பல பொருட்கள்!

    ReplyDelete
    Replies
    1. பழைய பொருள்களை பற்றி நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் எங்கள் வீட்டிலும் நடந்தது. வருகைக்கு நன்றி!

      Delete
  3. கும்பகோணத்தில் எங்கள் வீடும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. கெடிகாரமும் சற்றொப்ப இதுபோலவே. என் இளமைக்காலத்தை நினைவுபடுத்தின இப்பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா!

      Delete
  4. அந்த காலத்து ஓட்டு வீடுகளில் கிடைத்த மகிழ்ச்சியும் நிம்மதியும் இன்றைக்குக் கிடைக்காமல் போயிற்று..

    இப்படிச் சொன்னாலும் தகும் -

    மகிழ்ச்சியும் நிம்மதியும் இன்றைக்குக் கிடைக்க விடாமல் செய்து கொண்டோம்..

    ReplyDelete
    Replies
    1. //அந்த காலத்து ஓட்டு வீடுகளில் கிடைத்த மகிழ்ச்சியும் நிம்மதியும் இன்றைக்குக் கிடைக்காமல் போயிற்று..//
      நாம் அப்போது சிறுவர்களாக இருந்ததால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் மட்டும் நமக்கு நினைவில் இருக்கின்றன. அப்போது வாழ்ந்த பெரியவர்கள் துக்கம், கஷ்டம் எல்லாவற்றையும் அனுபவித்திருப்பார்கள் இல்லையா?
      வருகைக்கு நன்றி.

      Delete
  5. அருமையான மலரும் நினைவுகள்.

    ReplyDelete
  6. அருமையான மலரும் நினைவுகள்.

    ReplyDelete
  7. துளசிதரன்: நான் பிறந்த ஊர் ராசிங்கபுரம் கிராமம் இப்போது மிக மிக மாறிவிட்டது. ஒரு வீடு கூட நான் இருந்தது போல் இல்லை. நான் பிறந்து வளர்ந்து விளையாடிய இடத்தையே தேட வேண்டியுள்ளது. கெப்பமா எனும் மரத்தடி கோயில் மட்டும் அப்படியே உள்ளது. நல்ல நினைவுகள்

    கீதா: எங்கள் ஊர் நினைவு வந்துவிட்டது. எங்கள் கிராமத்திலும் வீடுகள் இப்படித்தான் இருக்கும். இப்போது மாறிவருகிறது. உங்களுக்கும் உங்கள் பழைய நினைவுகள் அந்தப் பழைய பெண்டுலக் கடிகாரம் போலவும், ஊஞ்சல் போலவும் அங்குமிங்கும் அசைந்தாடும் இல்லையா...பானுக்கா

    ReplyDelete
  8. Thanks Thulasidharan.
    Yes Geetha, very true!

    ReplyDelete