கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 19, 2017

மாறிவரும் மதிப்பீடுகள் - திருமண உறவு

Thanks google for picturesமாறிவரும் மதிப்பீடுகள் - திருமண உறவு 



முகநூலில் பலரும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலவற்றை பகிர்வதால் வரும் ஆபத்துகளை பற்றி அவ்வப்பொழுது எச்சரிக்கைகள் வந்தாலும் எல்லா குடும்ப நிகழ்வுகளையும் பகிர்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கது கல்யாண நிச்சயதார்த்த புகைப்படங்கள். 

சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு நிச்சயதார்த்த புகைப்படங்கள் மிகவும் அதிர்ச்சி அளித்தன. அவை நிச்சயதார்த்த புகைப்படங்களா? அல்லது தேனிலவு புகைப்படங்களா? என்று தோன்றும் அளவிற்கு நெருக்கமான, கட்டி அணைத்தபடியும், முத்தம்கொடுப்பது போலவும்... கடவுளே! என்ன நடக்கிறது இங்கே?

இதை வீட்டில் சொன்ன பொழுது என் மகன், "எந்த காலத்தில் இருக்கிறாய் அம்மா?, இப்போதெல்லாம் என்கேஜ்மென்ட், திருமணம் போன்ற எல்லாவற்றிற்கும் டீசர் போடுகிறார்கள், இது கேண்டிட் போட்டோகிராஃபி காலம்" என்று கூறி விட்டு, அவனுடைய நண்பர், உடன் வேலை பார்ப்பவர் இவர்களின் என்கேஜ்மெண்ட் மற்றும் திருமண டீசர் வீடியோவை காண்பித்தான். இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இப்படி எல்லாம் செய்பவர்கள் கொஞ்ச காலத்தில் விவாகரத்து செய்து விடுகிறார்களே, அதுதான் கவலை அளிக்கிறது. 

மேலை நாடுகளுக்கும் நம் நாட்டிற்கும் இருக்கும் வித்தியாசம் நம் நாட்டில் திருமணம் என்பது வாழ்வின் மிகப் பெரிய நிகழ்வு, மணமக்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களுக்கும் கூட. குறிப்பாக பெண்ணை பெற்றவர்கள். பெண் பிறந்தது முதலே அவளின் திருமணத்தை எதிர் பார்க்க தொடங்கி விடுகிறார்கள். தங்களின் பல சௌகரியங்களை குறைத்துக் கொண்டு குழந்தைகளை படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பதில்தான் தங்களின் வாழ்வின் அர்த்தமே அடங்கியுள்ளதாக இன்றைக்கும் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகளோ அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் அல்ப காரணங்களுக்காக விவாகரத்து செய்வது அச்சமும் கவலையும் அளிக்கிறது.

ஆடம்பரமாக நடத்தப்படும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமே என்றும், திருமணங்களுக்குச் செல்லும் பொழுது இந்த திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமே என்றும் தோன்றுகிறது. ஏனென்றால் நிச்சயமான திருமணங்கள் நின்று போவதும், நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிவதும் வெகு சகஜமாகிவிட்டது.



முன்பெல்லாம் வீட்டில் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் நடந்து சிறிது நாட்களில்,"என்ன விசேஷம்"? என்று விசாரிப்பார்கள். அதற்கு பொருள் வேறு. இன்று அப்படி கேட்டால், "டைவர்ஸ் ஆகி விட்டது", என்றோ. "டைவர்ஸுக்கு அப்ளை செய்திருக்கிறார்கள்" என்றோ பதில் வருவது ஆச்சர்யமில்லை. உண்மையில் எங்களின் இரண்டு நண்பர்கள் ஒருவருக்கு பெண், மற்றவருக்கு பிள்ளை அப்படித்தான் சொன்னார்கள். இருவருமே விவாகரத்திற்கு சொன்ன காரணம் அவர்களுக்குள் compatibility இல்லை என்பது. திருமணம் ஆன ஒரே வருடத்திற்குள் தங்களுக்குள் கம்பட்டபிலிட்டி இல்லை என்றும் அதற்கு விவகாரத்துதான் தீர்வு என்றும் எப்படி முடிவு எடுக்கிறார்கள்? இத்தனைக்கும் இப்போதெல்லாம் திருமணம் நிச்சயமானதிலிருந்து தினசரி போனில் மணிக்கணக்கில் பேசுகிறார்கள், சேர்ந்து வெளியே போகிறார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு தங்களுக்குள் கம்பட்டபிலிட்டி இல்லை என்று தெரியவில்லையா?

உண்மையில் கம்பட்டபிலிட்டி என்று ஒன்று இருக்கிறதா? இவர்கள் ஏதோ கற்பனையில் வாழ்கிறார்களோ? எது இவர்களை விவாகரத்திற்கு துரத்துகிறது? அப்புசாமி சீதா பாட்டியைப்போல தினசரி சண்டை போட்டுக் கொண்டே பொன்விழா கொண்டாடிய தம்பதியினர் இருந்திருக்கிறார்களே..! இதற்கு முந்தைய தலைமுறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று, நான்கு பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்பது ப்ரம்ம ப்ரயத்தனம்தான். பெற்றோர்களின் சிரமத்தையும், தங்கள் கணவன் வீட்டில் வாழா விட்டால் அது தன் உடன் பிறந்தவர்களையும் பாதிக்கும் என்று அஞ்சியே பெரும்பாலான பெண்கள் தங்கள் துயரங்களை பொறுத்துக் கொண்டார்கள்.  எனக்கு தெரிந்த என் வயதை ஒத்த  ஒரு பெண்மணி திருநெல்வேலி சைவ பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர். பிறந்து வளர்ந்தது எல்லாம் டில்லியிலும், மும்பையிலும், திருமணம் செய்து கொண்டதோ திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து அங்கேயே வசித்த ஒருவரை. அவர் தன்னுடைய ஆரம்ப கால திருமண வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும் பொழுது, ஒரு 'கல்ச்சுரல் ஷாக்' என்பார். அதற்க்காக விவாக ரத்து செய்துவிடவில்லை. "நான் அந்த முடிவு எடுத்திருந்தால், என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் என்னும் பயமே என்னை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வைத்தது" என்பார்.  இன்றைய பெண்களுக்கு அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் எதுவும் இல்லை, அதோடு பொருளாதார சுதந்திரம்.

திருமண வாழ்க்கைக்கு மற்றொரு வில்லன், செல்போன். இப்போதெல்லாம் ஒரு வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ,அத்தனை செல்போன்கள். திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண் காலையில் எழுந்ததும் அம்மாவுக்கு குட்  மார்னிங்கும், இரவு படுக்கைக்கு போகும் முன் குட் நைட்டும் சொல்வது தவறு கிடையாது. ஆனால் அன்று நடக்கும் அத்தனை விஷயங்களையும் ஒப்பிப்பது சரியா? தகவல் தொடர்பு இத்தனை விரிவடையாத காலத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்ன சின்ன மனஸ்தாபங்களை உடனே அம்மாவுக்கு சொல்ல முடியாது, அதை கடிதமாக எழுதலாம் என்று நினைக்கும் பொழுது அதன் வீரியம் குறைந்திருக்கும். ஆனால் இன்று எல்லாம் உடனக்குடன் அம்மாவுக்கு தெரியப்படுத்தப்படுவதால், பிரச்சனை பெரிதாக்கப் படுமே ஒழிய குறையாது. 

நாற்பது வருடங்களில் பெண்களின் வளர்ச்சி, ஆண்களின் வளர்ச்சியை விட அதிகம். ஆண்களின் பக்கத்தில் என்ன தவறு என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஏனென்றால், இப்போது நகர்புற ஆண்கள் நிறைய மாறி இருக்கிறார்கள். கிராமங்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. 

நாற்பது வருடங்களுக்கு முன் குழந்தைகளை பார்த்துக் கொள்வது முழுக்க முழுக்க பெண்களின் வேலையாகத்தான் இருந்தது. ஒரு திருமணத்தில் தான்  சாப்பிட்டு வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு சென்ற மனைவி திரும்ப வருவதற்குள் குழந்தை கணவரின் மடியில் சிறுநீர் கழித்து விட்டான் என்பதற்காக எல்லோர் முன்னாலும் மனைவியை கண்ணா பின்னாவென்று கத்திய கணவர்மார்களை நான் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் ஆண்கள் அப்படியெல்லாம் குரூரமாக நடந்து கொள்வதில்லை. பொறுமையாக டயாபர் மாற்றுகிறார்கள். வீட்டு வேலைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  ஆனாலும் டபுள் ஸ்டாண்டர்டும், எல்லா பிரச்சனைகளையும் படுக்கையில் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நினைப்பதையும் இந்தக் கால பெண்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. 

பிறந்த நாளையும், திருமண நாளையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாதது ஆண்களின் பிறவிக்கோளாறு. தவிர சினிமா, விளம்பர கணவர்களைப் போல வெளிப்படையாக தன் காதலை வெளிச்சம் போடுவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. இந்தக்குறைகளை பெரிது படுத்தாமல் விட்டு விட வேண்டும். 

மேலும் கணவன் மனைவிக்குள் ஒரு இடைவெளி வேண்டும்(space). கணவனோ,மனைவியோ அவரவருக்கென்று தனிப் பட்ட விருப்பங்கள், பொழுது போக்குகள் இருக்கலாம். கல்யாணம் ஆகிவிட்ட ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் உதறி விட வேண்டும் என்று நினைப்பது தவறு. 

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும், நீ காணும் 
பொருள் யாவும் நானாக வேண்டும் ..." என்பதெல்லாம் சினிமாவில் பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கும். ஆனால் நடை முறையில் எப்படி மூச்சு திணறும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

நான் பேச நினைப்பதை என்னை பேச விடு, உனக்கு என்ன பேச வேண்டுமோ அதை பேசிக்கொள் என்று சொல்வதுதான் ஆரோக்கியமான மண வாழ்க்கை. 
காதல் என்பது ஒருவரை ஒருவர் மதிப்பது, விட்டு கொடுப்பது. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்  போவதில்லை. 


20 comments:

  1. மிகவும் அருமையாக அழகாக ஒவ்வொன்றையும் யோசித்து அலசி ஆராய்ந்து அற்புதமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் நீங்களே சொல்லி விட்டீர்கள். என் நட்பு வட்டத்தில் ஒரே வருடத்தில் பிரிந்த ஜோடி ஒன்றையும் தெரியும். அதே நட்பு வட்டத்திலும், உறவு வட்டத்திலும் பொறுத்துக் கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகும் ஜோடியையும் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. //கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்.// பாராட்டுகிறீர்களா இல்லை,"மற்றவர்களுக்கு சான்ஸ் தராமல் நீயே பேசிக் கொண்டிருக்கிறாய்" என்று என் கணவர் கூறுவது போல் கூறுகிறீர்களா? anway let me take it in a positive sense and thank you.

      Delete
  3. மிக அருமையான அலசல் ..பொறுமையும் விட்டுக்கொடுக்கும் மனோபாவமும் இக்கால இளைஞர் இளைஞிகளிடம் இல்லை என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை ..பெற்றோர் அவர்கள் விஷயத்தில் திருமணத்துக்குப்பின் தலையிடாதிருத்தல் நல்லது ..
    இதில் வேடிக்கை என்னனா காதலித்து மணம் புரிவோரே விரைவில் கோர்ட்டுக்கு செல்கிராங்க ..
    ..இங்கே வெளிநாட்டினர் 50,60 வருட மண வருடங்களை கொண்டாடிய அன்பான பல தம்பதியரை நான் சந்தித்துள்ளேன் ..மிக சந்தோஷமா இருக்கும்..இந்த விட்டுக்கொடுத்தல் அன்பும்தானே அவர்களை இறுக்கி பிடித்து வைத்திருக்கு ..நம்ம மக்கள் ரமணி சந்திரன் நாவல் கதாநாயகர்களையே எல்லா ஆண்களிலும் எதிர்பார்க்கிறாங்க :)

    ReplyDelete
    Replies
    1. //இதில் வேடிக்கை என்னனா காதலித்து மணம் புரிவோரே விரைவில் கோர்ட்டுக்கு செல்கிராங்க ..//
      100% உண்மை ஏஞ்சலின். அதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!

      Delete
  4. ஒரு காலத்தில் திருமண உறவில் விரிசல் வந்தால் தமப்திகள் மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் விரிசலை சேர்த்து ஒட்ட வைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் ஆனால் இன்றைய காலத்தில் சிறிது விரிசல் வந்தாலும் அதை சொந்த பந்தங்கள் அதை பெரிசுபடுத்தி, விட்டு கொடுத்து வாழ முயற்சிப்பவரை இகழ்வாக பார்க்கும் சமுகமாக இன்றைய சமுகம் இருப்பதால் மணமுறிவுகள் அதிகம் ஆகிவருகின்றன

    ReplyDelete
    Replies
    1. விரிசலை பெரிது படுத்துவதில் உறவுகளை விட நண்பர்களே அதிகம் பங்கு வகிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

      Delete
  5. சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்
    பாராட்டுகள்!

    ReplyDelete
  6. //ஆனால் அன்று நடக்கும் அத்தனை விஷயங்களையும் ஒப்பிப்பது சரியா? தகவல் தொடர்பு இத்தனை விரிவடையாத காலத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்ன சின்ன மனஸ்தாபங்களை உடனே அம்மாவுக்கு சொல்ல முடியாது, அதை கடிதமாக எழுதலாம் என்று நினைக்கும் பொழுது அதன் வீரியம் குறைந்திருக்கும். ஆனால் இன்று எல்லாம் உடனக்குடன் அம்மாவுக்கு தெரியப்படுத்தப்படுவதால், பிரச்சனை பெரிதாக்கப் படுமே ஒழிய குறையாது. //
    இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். கணவன் கேட்டதை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் அவனுக்கு உணவு சமைக்காத மனைவியையும், அவன் தனக்கு சிசுருஷைகள் செய்தால் கூட அவனை" செத்துத் தொலை" என்று கத்தித் தாலியைக் கழட்டி வீசும் பெண்களையும் பற்றிப் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். :(

    ReplyDelete
  7. கேரளத்தில் இது போன்ற பிரச்சனைகள் வந்திருக்கிறது என்றாலும் இன்னும் பிற தென்னிந்திய குறிப்பாகத் தமிழ்நாட்டளவு வரவில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் வாழ்வியல் மாறியிருப்பதைக் கண்கூடாகக் காண்கிறேன். பகட்டு கூடியுள்ளது, சுயநலம் கூடியுள்ளது. அன்பு நல்ல புரிதல் உள்ள அன்பு மறைந்து வருகிறது. நல்ல அலசல்.

    கீதா: அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள். அத்தனையும் சரியே என் மனதிலும் ஓடும் பிரதிபலிப்புகள். இதற்குக் காரணம் சுயசிந்தனை இழப்பு, மற்றும் பெண்களின் பெற்றோரின் அதீதமான சப்போர்ட் மற்றும் பணம். ஆடம்பர வாழ்க்கை. நான் கூட இதைப் பற்றி ஒரு இடுகை எழுதியிருந்தேன். உறவினர் பிள்ளையின் கல்யாணம் பற்றியும் அதன் ஆடம்பரம் பற்றியும். இப்போதெல்லாம் பல திருமணங்களில் நீங்கள் சொல்லியிருக்கும் கேண்டிட் புகைப்பட கல்சர் தான். அதிலும் கேமரா பறந்து பறந்து வேறு எடுக்கும்....ஹும் திருமணமும் பரபரப்பாக முடிகிறது. விட்டுக் கொடுத்தலும்,புரிதலும் அன்கண்டிஷனல் லவ்வும் இல்லாததன் காரணம்தான்...சொல்ல வேண்டும் என்றால் பெண் குழந்தைகளின் வளர்ப்பு முறையும் சரி ஆண் குழந்தைகளின் வளர்ப்பு முறையும் சரி அடிப்படை நல்ல விஷயங்கள், மாரல் கள் மற்றும் தோல்விகளைப் பக்குவமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையையும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை பல குடும்பங்களில், எதிர்கால சந்ததியினரின் நிலைமை பரிதாபத்திற்குரியது. ஊடகங்களும் அதீதமான ஒழுக்கமற்ற சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களும் மக்களின் மன நிலையை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன என்பதும் உண்மை...

    அருமையான கட்டுரை..

    ReplyDelete
    Replies
    1. @துளசிதரன்: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
      @கீதா: வருகைக்கும்,விரிவான பதிலுக்கும், பாராட்டுக்கும் நன்றி!

      Delete
  8. அனைத்தும் அவசரம்... வாழ்வின் முடிவு கூட.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன், அந்த அவசரம்தான் அச்சமூட்டுகிறது.

      Delete
  9. Replies
    1. முதல் வருகைக்கும், கருத்திடலுக்கும் நன்றி!

      Delete
  10. நான் வேலை பார்த்த ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்கும் போது இன்றைய இளம் பெண்கள் தன் தோழிகளிடம் தன் திருமணத்தில் உள்ள பிரச்னைகளைச் சொல்லும்போது நண்பிகள் பெரும்பாலும் "ஏம்பா உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு ,தேவை இல்லாம எதுக்கு அந்த மாதிரி அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கனும். ஒரு தரம் அட்ஜ்ஸ்ட் பண்ணினால் அதையே ரிப்பீட் பண்ணச்சொல்லுவாங்கப்பா . கவனமா இருந்துக்கோ என்று வெட்டி அறிவுரையைச் சொல்வதை நான் கண் கூடாக பார்த்திருக்கிறேன்

    ReplyDelete
  11. அருமையான அலசல்.

    குழந்தைகளும், ஹார்ட் அட்டாக் அப்பாக்களுமே் பிரதான திருமணக் காப்பாளர்களாக இருக்கிறார்கள்

    ReplyDelete