கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 20, 2016

வராக நதிக்கரை ஓரம்

வராக நதிக்கரை ஓரம்

ஏப்ரல் 8,9,10 குட் ப்ரை டே ஐ ஒட்டி வந்த மூன்று விடுமுறை நாட்களில் தங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வர முடிவு செய்த எங்கள் சம்பந்தி எங்களையும் தங்களோடு வரச் சொன்னார்.  11ஆம் தேதி எங்களுக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், முதலில் தயங்கினோம். ஞாயிறு இரவே திரும்பி வந்து விடலாம் என்று அறிந்து கொண்ட பின் எங்களுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை.

எட்டாம் தேதி காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம். தாம்பரம் வசந்த பவனில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மயிலம் நோக்கி சென்றோம். 

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 15 KM தொலைவில் உள்ளது மயிலம். அங்கு ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது முருகன் கோவில். புராதனமான, சிறிய கோவில். கோவிலும், கோவிலைச் சார்ந்த குளமும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாம். 

சூர பத்மனை முருகன் போரிட்டு அழிக்க முற்பட்டபொழுது அவன் இறக்கும் தருவாயில் தன்னை முருகனின் வாகனமாக கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, முருகப் பெருமான் அவனை மயில் வடிவமெடுத்து தன்னை குறித்து தவம் செய்யும்படி கூறுகிறார்.  அதன் படி சங்கராபரணி நதி என்னும் வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த குன்றின் மீது மயில் வடிவமெடுத்து சூர பத்மன் தவம் செய்கிறான். அவன் தவத்திற்கு இறங்கி முருகப் பெருமான் அவனுக்கு காட்சி அளித்து அவனை ஏற்றுக் கொள்கிறார். தனக்கு காட்சி அளித்த கோலத்திலேயே முருகன் இங்கே எழுந்தருள வேண்டும் என்ற சூர பத்மன் வேண்டுகோளுக்கு இணங்கி முருகன் இங்கே எழுந்தருளியதாக தல வரலாறு. கர்ப்ப க்ரஹத்தில் வள்ளி, தேவ சேனையோடு நின்ற திருக் கோலத்தில் கட்சி அளிக்கும் முருகனை வணங்கினோம்.

அங்கிருந்து திருவக்கரை நோக்கி சென்றோம். திருவக்கரை என்றதும் பலருக்கும் வக்கிர காளிதான் நினைவிற்கு வரும். ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கோவில் என்னும் சிவன் கோவில்தான் பிரதானம். அங்கிருக்கும் பரிவார தேவதைகள் சந்நிதிகளில் ஒன்றுதான் வக்கிரகாளி சந்நிதி. பிரபலமான அரசியல்வாதி ஒருவர் அம்மாவாசையிலும், பௌர்ணமியிலும் யாகங்கள் செய்து பலன் அடைந்ததால், கோவிலுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் வக்கிர காளியை தரிசனம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதித்த சோழனால் கட்டப்பட்ட  கிழக்கு நோக்கி அமைந்த ஏழு நிலைகளை கொண்ட புராதனமான பெரிய கோவில். இக்கோவில் பல சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது. தமிழ் நாட்டில் ஆவுடையாருக்கு மேல் லிங்கத் திரு மேனியாக இல்லாமல், மூன்று முகங்களோடு காட்சி அளிக்கும் சிவ பெருமானை இங்குதான் வணங்க முடியும். கிழக்கே தத் புருஷ முகம், வடக்கே வாம தேவ முகம், தெற்கே அகோர முகம். தெற்கு நோக்கி உள்ள அகோர முகத்தில் இரண்டு கோரை பற்களை பால் அபிஷேகம் செய்யும் பொழுது மட்டும் காண முடியும் என்கிறார்கள். 

அதிகாலையில் தத் புருஷ முகத்தை மஞ்சள் பூசியும், உச்சி வேளையில் வாம தேவ முகத்தை சந்தனம் பூசியும், மாலையில் அகோர முகத்தை குங்குமம் பூசியும் வணங்க நம்மை இன்பம் சூழும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. 

கருவறைக்கு தென் புறம் குண்டலினி முனிவரின் ஜீவ சமாதி உள்ளது. இங்கே  பத்து நிமிடங்களாவது அமர்ந்து தியானம் செய்ய மனம் எளிதில் ஒருமைப் படும் என்கிறார்கள். எங்களுக்குத்தான் அப்படி அமர முடியவில்லை. அடுத்த முறை முயற்சி செய்யலாம் என்று வந்து விட்டோம். 

பிரகாரத்தை வலம் வந்தால் கோஷ்டத்தில் அழகிய தக்ஷிணாமூர்த்தி, பின்புறம் மேற்கு நோக்கி ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் வரதராஜ பெருமாள் பிரயோக சக்கிரத்தோடு அருள் பாலிக்கிறார். அவருக்கு எதிரே தனி சந்நிதியில் கருட பகவான். சிவன் கோவிலில் பெருமாள் எங்கிருந்து வந்தார் என்று தோன்றுகிறதா? அதற்கு தல புராணம் தெரிந்து கொண்டே ஆகா வேண்டும். 

வக்ராசுரன் என்னும் அசுரன் சிவா பெருமானை குறித்து கடும் தவம் இயற்றி வரம் பெறுகிறான். அந்த இறுமாப்பில் எல்லோரையும்  துன்புறுத்த, அவர்கள் அவனை அழித்து, தங்களை காக்க வேண்டும் என்று சிவ பெருமானிடம் சென்று வேண்டுகிறார்கள். தன்னிடம் வரம் பெற்றவனை தானே அழிக்க முடியாது என்று கூறிய சிவபெருமான், வக்கிராசுரனை அழிக்கும் பணியை திருமாலிடம் ஒப்படைக்கிறார். அதன் படி தன் 
சக்ராயுதத்தால் அவனை அழிக்கிறார் பெருமாள்.  அதனால்தான் இங்கு பெருமாள் பிரயோக சக்கிரத்தோடு காட்சி அளிக்கிறார். 

வக்ராசுரனின் சகோதரியான துர்முகி என்பவளும் தேவர்களுக்கு தொல்லை தந்ததால் அவளை அழிக்கும் பொறுப்பை பார்வதி தேவியிடம் ஒப்படைக்கிறார் சிவன். அந்த சமயத்தில் துர்முகி கர்ப்பமாக இருக்கிறாள், கர்ப்பிணியை  கொல்லக் கூடாது என்பதால் பார்வதி தேவி கற்பதில் இருந்த சிசுவை எடுத்து தன காதில் குண்டலமாக அணிந்து கொண்டு துர்முகியை அழிக்கிறாள். பின்னர் அதே கோலத்தில் வக்கிர காளியாக இங்கே குடி கொண்டு பக்தர்களுக்கு அருளுகிறாள்.

தலையில் தீச்சுடரும், கபால ஓடும் க்ரீடமாகவும், வலது காதில்  
சிசுவை குண்டலமாக அணிந்து கொண்டு, வலது புறம் இருக்கும் நான்கு கரங்களில் பாசம், சக்கரம், வாள், கட்டாரி, முதலியவை கொண்டு இடது புறம் இருக்கும் கரங்களில் மூன்றில் உடுக்கை, கேடயம், கபாலம் தாங்கி நான்காவது கரத்தில் எல்லா விரல்களையும் மடக்கி ஆள் காட்டி விரலை மட்டும் நிலத்தை நோக்கி நீட்டியபடி ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை தொங்க விட்டபடியும் அமர்ந்திருக்கிறாள்.

அமாவாசை அன்று பகல் பன்னிரெண்டு மணிக்கும், பௌர்ணமி அன்று இரவு பன்னிரண்டு மணிக்கும் வக்கிர காளியின் கோபுரத்தின் மேல் ஐந்து கிலோ கற்பூரம் ஏற்றப்படுமாம் அந்த ஜோதி தரிசனத்தை காண்பது சிறப்பு என்கிறார்கள். மேலும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஏதாவது கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் இங்கு வந்து வக்கிர காளியை தரிசிப்பது அந்த தோஷத்தை போக்குமாம். 

வடிவுடை அம்மன் தனி சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறாள்.

இந்த கோவிலின் பிற சிறப்புகள், நவகிரக சந்நிதியில் உள்ள சனி பகவானின் வாகனமான காக்கை எல்லா கோவில்களிலும் போல் இல்லாமல் தென் புறம் திரும்பி உள்ளது. அதே போல நடராஜரும் கால் மாற்றி ஆடுகிறார். மேலும் சாதாரணமாக எல்லா சிவன் கோவில்களிலும் சிவ லிங்கம், நந்தி, கொடி மரம் இவை எல்லாம் ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கும், ஆனால் இங்கு அப்படி இல்லாமல் அவையும் வக்கிரமாகத்தான் இருக்கின்றன. இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலை தரிசிக்க கிடைத்தது பாக்கியம்தான்!

-தொடர்ச்சிக்கு காத்திருக்கவும்