கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 16, 2014

கேட்ட ஞாபகம் இல்லையோ..?

கேட்ட ஞாபகம் இல்லையோ..?




ஏப்ரல் 24 ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த நாளாம். எப்.எம்.ரேடியோ ஒன்றில் சொன்னார்கள். அதைக் கேட்டதும் பல பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.  நான் சிறுமியாக இருந்த பொழுது அதாவது 1960களில் ரேடியோ என்பது ஒரு ஆடம்பர பொருள். அப்பொழுதெல்லாம் ரேடியோ  வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் லைசென்ஸ் வாங்க வேண்டும். எங்கள் தெருவில் ராமையா மாமா என்பவர் வீட்டில்தான் ரேடியோ உண்டு. நல்ல கச்சேரிகள், கிரிகெட் மேட்ச் கமெண்ட்ரி இவைகளை அவர்கள் வீட்டு வாசல் திண்ணையில் ஸ்டூல் போட்டு அதில் ரேடியோவை வைத்து பெரிதாக ஒலிக்க வைப்பார்கள், விருப்பமுள்ளவர்கள் உட்கார்ந்து கேட்பார்கள். ஆனால் அவர்களுக்கு சினிமா பாடல்களில் விருப்பம் இல்லாததால் சினிமா பாடல்கள் கேட்க முடியாது. அந்த பாக்கியம் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் ரேடியோ வாங்கியவுடந்தான் கிட்டியது. அவர்கள் வீட்டில்தான் நேயர் விருப்பம், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிச்சித்திரம் அல்லது  நாடகம் இவைகளை கேட்போம். விடுமுறைகளில் ஊருக்குச் செல்லும் பொழுது தாத்தா வரும் வரை சினிமா பாடல்கள் அதுவும் வால்யும் குறைவாக வைத்து கேட்கலாம்.


எழுபதுகளில் நிலைமை மாறி ரேடியோ எல்லா வீடுகளிலும் ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்டது. எழுபதுகளின் துவக்கத்தில் தொலை காட்சி பெட்டி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து விட்டாலும் இப்போது அங்கு அது அடம்பர வஸ்து! மேலும் தொலை காட்சியில் ஒளி பரப்பு மாலை ஆறு மணிக்குத்தான் துவங்கும் ஆகவே ரேடியோ தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்தக் காலத்தை ரேடியோவின் பொற்காலம்  என்றே கூறலாம்.  சிறிய  ட்ரான்சிஸ்டர் ரேடியோ பாத்ரூம் உட்பட எல்லா இடங்களுக்கும் எங்களோடு வரும். இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் அந்த காலங்களில் ரேடியோவில் தண்ணீர் தெளிக்காமல் குளிக்க கூடிய அளவிற்கு குளியல் அறை அத்தனை பெரிதாக இருந்திருக்கிறது!!

வியாழக் கிழமைகளில் காலை 5:30க்கு சிலோன் ரேடியோவில் சாய் பஜன், கலை 7:20 க்கு விவித பாரதியில் 'சங்கீத் சரிதாவில் கேட்ட லதா மங்கேஷ்கர் பாடிய  சில மீரா பஜன்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. வெள்ளி கிழமைகளில் திருச்சி ரேடியோவில் காலை 8:30க்கு மங்கள வாத்தியம் என்று நாதஸ்வரம் ஒலிபரப்புவார்கள். அதைத் தவிர ரேடியோ விழா மற்றும் இசைவிழா கச்சேரிகள், சங்கீத உபன்யாசங்கள் கேட்க தடை எதுவும் கிடையாது. சினிமா பாடல்கள் மட்டும் பெரிதாக வைத்து விட முடியாது. "என்ன டீ  கடை மாதிரி அலறுகிறது .." என்று பட்டென்று ரேடியோவை நிறுத்தி விட்டு போய் விடுவார்கள் வீட்டு  பெரியவர்கள்.  நல்ல வேளை இளையராஜா வந்தார், அவருடைய காம்போசிஷன் என் அப்பாவுக்கு பிடித்தது. "இளையராஜா ஜீனியஸ்தான்" என்று அப்பா மெச்சிக் கொண்டதால்,'ஆயிரம் தாமரை மொட்டுகளே'வையும், செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலையும் பெரிதாக வைத்து ரசிக்க முடிந்தது.

இசை கச்சேரிகள் மட்டுமல்ல காரைக்குடி கம்பன் விழா பட்டிமன்றங்களும் ரசித்த விஷயங்கள். அவர்களில் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தவிர திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் திரு. ராதா கிருஷ்ணன், திரு. திருமேனி, திரு.சத்தியசீலன், குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

சினிமா பாடல்களை ஒலி பரப்பியதில் சிலோன் ரேடியோவுக்கு தனி இடம் உண்டு. பாடல்களை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை, "கலா,மாலா பாலா,லீலா... ராஜேந்திரன், மகேந்திரன், கிருபாகரன்.. என்று ரைமிங்காக அவர்கள் படிக்கும் அழகு..!  பாடல்களை மட்டும் ஒலி பரப்பாமல், அந்தப் பாடல்களை  எழுதிய கவிஞர்களின் கற்பனைத் திறன், சந்த சிறப்பு, இவைகளையும் நடு நடுவே விளக்குவார்கள். நிகழ்ச்சி முடியும் பொழுது, "ஐயோ ராஜா என்னை விட்டு போயிடீங்களா.."? என்று நீயா படத்தில் ஸ்ரீ பிரியா பேசும் டயலாக்கை ஒலி பரப்பி, உடனே, "இல்லை ஸ்ரீ பிரியா மீண்டும் அடுத்த வாரம் இதே நேரத்தில் சந்திக்கலாம்" என்று கூறிய ராஜாவின் சாதுர்யம் யாருக்குத்தான் பிடிக்காது !! ரேடியோ சிலோனின் ராஜாவும் மயில்வாகனனும் பலரைக் கவர்ந்த ரேடியோ ஜாக்கிகள்.

அப்படி நம்மூரில் பலரைக் கவர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் என்று சரோஜ் நாராயணசுவாமி, விஜயம், மற்றும் பத்மநாபன் இவர்களை குறிப்பிடலாம். "தனது அறிக்கையில் பிரதமர் திட்ட வட்டமாக அறிவித்தார்" என்று விஜயம்  செய்தி வாசிக்கும் பொழுது திட்டத்திலும், வட்டத்திலும் அவர் கொடுக்கும் அழுத்தம் இன்னும் என் நினைவு அடுக்குகளில் இருக்கிறது. வீட்டு பெரியவர்கள் ரேடியோவில் நியூஸ் கேட்கும் பொழுது கை குழந்தை கூட அழக் கூடாது என்பது அப்போது பல வீடுகளில் எழுதப்படாத சட்டம்.

ஞாயிற்று கிழமை மதியம் ஒலி பரப்பாகும் போர்ன்விட்டா க்விஸ் கான்டெஸ்ட், வெள்ளி இரவு ஒலி பரப்பான பின்னிஸ் டபுள் ஆர் க்விட்(Binny's double or quit) வினாடி வினா நிகழ்சிகளில் சரியான விடை அளித்து விட்டால் அப்பா லேசாக சிரித்தபடி தலை அசைப்பார்.

இரவு 9:30க்கு விவித பாரதியில் வண்ணச்சுடர் என்று மேடை நாடகங்களை ஒலி பரப்புவார்கள். அதில் மனோகர் உட்பட விசு, மௌலி, ஒய்.ஜி.பி., எஸ்.வி.சேகர், பூர்ணம் விஸ்வநாதன், காத்தாடி ராமமூர்த்தி, போன்ற எல்லா பிரபல நாடக குழுக்களின் நாடகங்களையும் கேட்டு ரசிப்போம். வண்ணச்சுடர் ஒலிபரப்பாகும் நேரத்தில்தான் அப்பா சாப்பிட உட்காருவார். அப்போது ஏதாவது அழுகை வசனம் கேட்டது என்றால் அப்பாவுக்கு கோபம் வரும். "சாப்பிடும் நேரத்தில் என்னமா? அதை நிறுத்துங்களேன்.." என்று சத்தம் போடுவார் அதனால் ஒலி மிகவும் குறைந்து விடும்.

1981இல் டில்லியில் ஏஷியன் கேம்ஸ் நடந்த பொழுது கலர் டி.வி இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டது. கொடைக்கானலில் சாட்டிலைட் அமைக்கப் பட்டு ஹிந்தி நிகழ்சிகளை பார்க்கலாம் என்று வகை செய்யப் பட்டது. பெரும்பாலான வீடுகளில் தொலைகாட்சிப் பெட்டி ஒரு விருந்தினரைப் போல வந்தது. சென்னை வாசிகளைப் போல நாங்களும் மதியத்தோடு ரேடியோவுக்கு விடை கொடுத்து விட்டு மாலைகளில் தொலை காட்சி முன் உட்கார்ந்து புரிகிறதோ இல்லையோ ஹம் லோக், கர் ஜமாய், ஏக் கஹானி(இது நிஜமாகவே ஒரு நல்ல சீரியல்) போன்றவற்றை ரசிக்க ஆரம்பித்தோம். 87இல் தமிழ் நிகழ்சிகளையும் பார்க்கலாம் என்ற நிலை வந்தது. இனிமேல் ரேடியோவுக்கு என்ன வேலை? அது மட்டுமில்லை தொழில் நுட்பம் வளர வளர சினிமா பாட்டோ, கச்சேரியோ, புராண சொற்பொழிவோ ரேடியோவைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை மாறி விட்டது. இன்றைக்கு கைபேசியிலேயே நாம் கேட்க விரும்பிகிறவைகளை அப்லோட் செய்து கொள்ள முடியும். திடீரென்று ரேடியோ மிர்ச்சியின் தயவால் ஏகப்பட்ட எப்.எம்.கள்.  பெயர்தான் வேறு வேறாக  இருக்கின்றதே ஒழிய செயல்பாடு எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். ஓவர் டாகிங்+கலாய்ப்பு+சினிமா=எப்.எம். என்றாலும் அவ்வப்பொழுது கேட்பேன். சில நிகழ்ச்சிகளில் கலந்தும் கொள்வேன்.


      
பின் குறிப்பு:
இது ஒரு மீள் பதிவு.