கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 31, 2014

அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே...!

அரபிக் கடலோரம்  ஓர் அழகை கண்டேனே...!

ஒரு குடும்ப விசேஷத்திற்காக கேரளா செல்ல வேண்டி இருந்தது. அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்றோம். முப்பது வருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்ற பொழுது, "என்ன இது ஒரு மாநில தலை நகர் போல இல்லாமல் வெகு சாதாரணமாக ஒரு சிறு நகரம் போல இருக்கிறதே..?" என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுது மேம்பாலங்கள், வாசல் எது? ஜன்னல் எது? என்று தெரியாத நவீன கட்டிடங்கள் வந்து ஓரளவிற்கு பெரு நகரங்களுக்கு நெருங்கி வந்து விட்டது.

விஸ்தாரமான கொட்டார(அரண்மனை)வளாகம், அந்தக் கால கேரள பாணி ஒட்டு வீடுகள், வளைந்து வளைந்து செல்லும் குறுகலான தெருக்கள், இவற்றோடு நவீன கட்டிடங்கள், என்று  ஜீன்ஸ்,டீ ஷர்ட், கொலுசு, உச்சி பொட்டு இவற்றோடு காட்சி அளிக்கும் பெண் போல பழமையும் புதுமையும் கலந்து காட்சி அளிக்கிறது திருவனந்தபுரம்!

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் வாசலிலேயே எங்களை மடக்கிய ஒரு ஆட்டோ ஓட்டுனர் நாங்கள் பார்க்க வேண்டிய இடங்களை தீர்மானித்தார். அதன்படி முதலில் மியூசியம், ராஜா ரவிவர்மா ஆர்ட் காலரிக்கு சென்றோம். 

விஸ்தாரமான மைதானத்தில் கம்பீரமான கேரள பாணி கட்டிடங்களில் அமைந்துள்ளன அருங்காட்சியகமும், ஓவியக் கூடமும். அருங்காட்சியகத்தில் நான்காம் நூற்றாண்டு சிற்பங்களிலிருந்து வைக்கப் பெற்றுருக்கின்றன. இதில் சேரநாட்டு சிற்பங்கள் மட்டுமல்லாமல் சோழ நாட்டு சிற்பங்களும் இருக்கின்றன. 


மியுசியத்தின் முன் நானும் என் கணவரும் 






















ரவி வர்மா ஓவிய கூடத்தை பார்க்க நான் மிகவும் விரும்பினேன். சில ஓவியங்கள் பிரமாதமாகவும், பல மிக சாதரணமாகவும் இருந்தன.  

அங்கிருந்து புது ஆறு என்னும் இடத்தில் போட்டிங் போவது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறினார். சமீப காலத்தில் கேரள அரசு சுற்றுலாவை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதில் ஒன்றுதான்  back water படகு சவாரிகள் . புதாற்றில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் மாங்க்ரூவ் காடுகளிடையே(இங்குதான் அனகோண்டா பார்ட் 3 படமாக்கினார்களாம்,)  போட்  ஹௌஸில் பயணித்து புதாறு கடலோடு கலக்கும் இடத்தில் ஒரு சிறு திட்டு உள்ளது. அங்கு இறக்கி விடுகிறார்கள். அதில் சிறிது நேரம் கழித்து விட்டு திரும்பி வரலாம். போகும் வழியில் உள்ள மிதக்கும் உணவு விடுதியில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் கொடுத்து விட்டு போனால் வரும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம். ராமேஸ்வரம் தவிர மற்ற இடங்களில் சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும் என்றால் அது ஒரு நதி கடலோடு கலக்கும் இடமாக இருக்க வேண்டும் என்பது சாஸ்திரம் கூறும் விதி. ஆனால் எங்களின் இந்த பயணம் திட்டமிடப் படாததால் அங்கு குளிக்க முடியவில்லை. திரும்பி வரும் வழியில் மிதக்கும் விடுதியில் சுவையான ப்ரைட் ரைஸை பைனாப்பில் ராய்தாவோடு சாப்பிட்டு விட்டு திரும்பினோம். கொஞ்சம் காஸ்ட்லியான நல்ல அனுபவம்.

Add captionபுதாற்றில் படகு சவாரி 
புதாறு கடலோடு சங்கமிக்கும் இடத்தில் நீரை தலையில் ப்ரோஷித்து கொள்கிறார் என் கணவர் 


நாங்கள் பயணித்த படகிலிருந்து, மிதக்கும் உணவு விடுதிக்கு மாறும் பொழுது, கால் தடுக்கி படகிற்கும்,விடுதிக்கும் இடையே விழ இருந்தேன். எப்படியோ சமாளித்து மற்றவர்கள் உதவியோடு விடுதிக்கு சென்று விட்டேன். நல்ல வேலை தப்பித்தோம் என்று நினைத்தேன். "இரு இரு உன்னை வைத்துக் கொள்கிறேன்" என்று காலம் கருவியது என் காதில் விழவில்லை.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் வழியில் உணவு விடுதியில்(இங்கும் உணவு விடுதி) உணவு அருந்தி விட்டு படியில் இறங்கும் பொழுது கால் இடறி கீழே விழுந்து ஹேர் லைன் கிராக் ஆகா வைத்து தன வஞ்சத்தை தீர்த்துக் கொண்டது காலம்.:( 

அங்கிருந்து திரும்பி வரும் வழியில் கோவளத்திற்குச் சென்று கடலில் கால் நனைத்து விட்டு வந்தோம். அன்று சனிக்கிழமை என்றதால் நல்ல கூட்டம். குறிப்பாக இளைஞர்,யுவதியர் கூட்டம். 

அங்கிருந்து திருவனந்தபுரம் திரும்பி வரும் வழியில் ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றோம். ஆற்றுக்கால் பகவதி என்பது மருவி ஆட்டுக்கால் பகவதி என்றாகி விட்டது. 

தன கணவன் கோவலனை அநியாயமாக கொன்ற பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு, மதுரையை எரித்து விட்டு சேர நாட்டிற்கு வந்த கண்ணகி கொடுங்கல்லூர் செல்லும் முன்  இங்கிருக்கும்'கிள்ளி' ஆற்றங் கரையில் தங்கி தன் கோபத்தை தணித்து கொண்டதாகவும் (அதனால்தான் ஆற்றுக் கால்) அவளுக்கு சாப்பிட பொங்கல் கொடுத்த குடும்பத்தை வாழ்த்தி மறைந்ததால் ஒவ்வொரு  வருடமும்  அந்த நாளில் அவளுக்கு பொங்கல் படைப்பது மிகப் பெரிய உற்சவமாக இங்கு கொண்டாடப் படுகிறது. 

மாசி அல்லது பங்குனி மாத கார்த்திகையில் துவங்கி பத்து நாட்கள் நடக்கும் 'பொங்கல' உற்சவத்தில் ஒன்பதாம் நாள் அம்மனுக்கு பொங்கல் படைக்கப் படுகிறது. இதில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கு பெறுவது ஒரு சிறப்பு. இதனால் இந்தக் கோவில் பெண்களின் சபரி மலை எனப்படுகிறது. லட்ச கணக்கில் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விழா மிக அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது.

தமிழக கேரள பாணியில் அமைந்திருக்கும் விஸ்தாரமான கோவில். பிரகாரத்தில் விநாயகருக்கும் வீர பத்திரருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. அதற்கு அருகில் ஒரு மேடையில் அரச மரத்தின் கீழ் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. மூல ஸ்தான அம்மன் விக்ரஹத்தின் முன் ஒரு பாலகனின் சிலை உள்ளது. கண்ணகி இங்கு வரும் பொழுது ஐந்து வயது சிறுவன் ஒருவன் உடன் வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் சிலப்பதிகாரப்படி கண்ணகிக்கு குழந்தைகள் இருந்ததாக செய்தி இல்லை.

வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! அடுத்த பதிப்பில் தொடரலாம்...

Monday, December 29, 2014

எல்லே இளம் கிளியே!

எல்லே இளம் கிளியே!





திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம், "எல்லே இளங்கிளியே... " என்று துவங்கும் இந்த பாடல். பாவை நோன்பு நோற்க ஒவ்வொரு பெண்ணாக எழுப்பி அழைத்து வரும் ஆண்டாள் மற்றும் அவள் தோழிகளுக்கும்  இன்னும் எழுந்து வராமல் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் நடக்கும் உரையாடலை அப்படியே பாடலாக்கி இருக்கிறாள்
  
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

வாசலில் நிற்கும் பெண்கள்,"இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்"?  என்று கேட்க, "சில்லென்று பேச வேண்டாம், வந்து விட்டேன்" என்கிறாள் உள்ளே இருக்கும் பெண். வார்த்தையை கவனியுங்கள், "சில்"லென்று அழைக்க வேண்டாம்" என்கிறாள்.. சாதாரணமாக கோபமாக பேசுவதை "சுள்" என்று பேசுவது என்றுதான் சொல்வோம். ஆனால் குளிரான மார்கழி மாதத்தில் அதிகாலையில் "சுள்" என்று பேசுவதை விட, "சில்" என்று பேசுவதுதானே பொறுக்க முடியாமல் இருக்கும்?

வா.நி.பெ.: உன்னுடைய வாய் சவடால் எங்களுக்குத் தெரியும் (தெரியாதா ? என்பது உட் கிடை)அடுத்து வரும்   'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'  என்னும் இந்த இரண்டு வரிகளும் மிக முக்கியமானவை.

"என்னை வாய் சவடால் என்று கூறும் நீங்கள் மட்டும் என்ன?, சரி அப்படியே இருக்கட்டும்" இதுதான் சண்டையை வளர்த்தாமல், சமாதானமாக போகும் வைணவ கோட்பாட்டை விளக்குகிறது.

வா.நி.பெ.: சரி, வேறு எதையும் பற்றி எண்ணாமல் சீக்கிரம் கிளம்பேன்..

உ.இரு.பெ.: என்னை விரட்டுகிறீர்களே, மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?  - இதுதானே, நம்முடைய வழக்கம். நம்மை யாராவது ஒரு நல்ல செயலுக்கு தூண்டும் பொழுது, நான் மட்டும்தான் கிடைத்தேனா? மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்பதுதானே நம் பழக்கம்? 

வா.நி.பெ.: எல்லாரும் வந்தாச்சு, சந்தேகம் இருந்தால் வந்து எண்ணிக்கொள்..

குவலய பீடம் என்னும் யானையை கொன்றவனும், தீயவர்களை அழிக்கக் கூடியவனுமாகிய, மாயவனை பாட வாராய் என்று முடியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் வைணவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழி முறைகளை வலியுறுத்துவதால் இது மிக முக்கியமான பாசுரம்(அத்தனை விரிவாக நாம் பார்க்கவில்லை). பாடல் வடிவில் ஒரு ஓரங்க நாடகத்தையே நம் கண் முன் நிறுத்தும் ஆண்டாளின் திறமை மனதை கொள்ளை கொள்கிறது! 




Thursday, December 25, 2014

உறவுகள்

உறவுகள் 

திரு.G.M. பாலசுப்ரமணியன் தன் வலைப்பூவில் 'உறவுகள்' என்னும் பதிவில் முன்பு போல் இல்லாமல் தற்காலத்தில் உறவுகள் இருக்கின்றனவே தவிர அதில் ஒட்டுதல் இல்லை அதற்கு காரணம் பெண்கள் பிறந்த வீட்டு சொந்தங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை புகுந்த வீட்டினருக்கு அளிக்காததுதான் என்று முடித்திருப்பதோடு  இதை  ஒரு தொடர் பதிவாக்க விரும்புவதாகவும், குறிப்பாக பெண் பதிவாளர்களை தொடரும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஒரு வேளை நம்மை(அதாங்க பெண்களை) சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாரோ என்றும் ஒரு சந்தேகம் வந்தது.  எப்படி இருந்தாலும் பதில் சொல்லலாம் என்று முடிவு எடுத்து விட்டேன்.. 

Disclaimer: இது பெண்ணிய கட்டுரை அல்ல 

உலகம் முழுவதிலுமே திருமணத்திற்கு பின் ஒரு ஆணோடுதான் பெண் வர வேண்டி இருக்கிறது. தன்னுடைய தாய்,தந்தை,உடன் பிறந்தவர்கள் என்று எல்லோரையும் துறந்து கணவனை மட்டும் உறவாக கொண்டு புகுந்த வீட்டிற்குள் வாழ வரும் அவளை எத்தனை வீட்டில் தன் குடும்ப உறுப்பினராக முழு மனதோடு சேர்த்துக் கொள்கிறார்கள்? மருமகள் என்று கூறினாலும் மகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் மருமகளுக்கு பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. பேரன், பேத்திகளை கொண்டாடும் குடும்பங்கள் அவர்களை பெற்றுத் தந்த மருமகள்களை பெரும்பாலும் மதிப்பதில்லை. சில குடும்பங்கள் இன்னும் மோசம், மறுமகள் மேல் உள்ள த்வேஷத்தை பேரக் குழந்தைகள் மேலும் காண்பிப்பார்கள். 

பல பெண்களுக்கு வருத்தம் தரும் ஒரு விஷயம் என்னவென்றால், புகுந்த வீட்டினர் சில விஷயங்களை டிஸ்கஸ் செய்யும் பொழுது, மாமனார், மாமியார், கணவன்,மைத்துனர்,நாத்தனார் என்று எல்லோரும் கூடி பேசுவார்களே தவிர அந்த கூட்டத்தில் மருமகள்கள் ஓரங்கட்டப்படுவதுதான். இப்படி இருக்கும் பொழுது அந்தப் பெண்ணிற்கு எப்படி புகுந்த வீட்டினர் மீது பாசம் வரும்? சிறு வயதில் தாயோடு அதிக நேரத்தை கழிக்கும் குழந்தைகள் தாய் சிறுமை படுத்தப் படுவதை உணரும் பொழுது அவர்களின் அடி மனதில் தந்தை வழி உறவினர் மீது ஒரு கோபம் பதியலாம். 

தான் எதிர்பார்த்த பாசமும் நேசமும் புகுந்த வீட்டில் கிடைக்காத பொழுது அந்த ஏக்கத்தை தன் கணவனிடம் சொல்லி ஆறுதல் தேட முயலும் பொழுது கணவன்மார்கள் மனைவியின் குறையை காது கொடுத்து கேட்டால் போதும்.  ஆனால்  எத்தனை கணவன்மார்கள் இதை செய்கிறார்கள்? "ஆரம்பித்து விட்டாயா உன் புலம்பலை?" " என் வீட்டு மனிதர்களை குறை சொல்லா விட்டால் உனக்கு தூக்கம் வராதே" "ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு" என்றெல்லாம் இவள் மீதே குற்றத்தை திருப்ப, வேறு வழியில்லாமல் அவள் தன் பிறந்த வீட்டையே தஞ்சம் அடைகிறாள். அங்கு அவளுக்கு ஆறுதலும், தேறுதலும், அரவணைப்பும் கிடைக்க எங்கு தாய் சந்தோஷமாக இருக்கிறாளோ,அங்கு குழந்தைகளும் பாசமாக இருக்கின்றன.

கணவன்மார்கள் நினைத்தால் உறவுகளை மேம்படுத்த முடியும். மனைவிக்கு மனிதர்களை அனுசரித்துச் செல்லும் குணம் இல்லை என்றாலும் அவளுக்கு தெரியாமல் அவன் தன் தாய் தந்தையோடும், உடன் பிறந்தவர்களோடும் உறவைத் தொடர வாய்ப்பும்,வசதியும் உண்டு. மனைவி வராவிட்டாலும் தன் உறவினர் வீடுகளுக்கு தான் செல்வதோடு, தன் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது, அவர்களைப் பற்றி நல்ல விதமாக குழந்தைகளிடம் பதிய வைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் உறவுகளை மேம்படுத்தலாம். இப்படி செய்த பல ஆண்களை எனக்கு தெரியும். நாளாவட்டத்தில் அவர்களின் மனைவியரும் மனம் மாறி புகுந்த வீட்டினரோடு பாசமாக மாறினர்.

திருமணத்திற்கு முன் புகைபிடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டவன் மனைவி எத்தனை சொல்லியும் அந்த பழக்கத்தை விடுவதில்லை. திருமணத்திற்கு முன் மது அருந்த ஆரம்பித்தவன், மனைவி சொல்லி அதை விடுவதில்லை, ஆனால் பெற்ற தாய்,தந்தையர்,சகோதர,சகோதரியரை மாத்திரம் மனைவி சொல்லி விட்டு விடுவது என்ன நியாயம்?

ஆனால் தற்காலத்தில் நிலைமை கொஞ்சம் மாறி வருவது சற்று ஆறுதல்.

Wednesday, December 17, 2014

காவியத் தலைவன் (Review)

காவியத்  தலைவன் 





இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்தில் நம் நாட்டில் கொடி கட்டி பறந்த பாய்ஸ் கம்பெனியை நிலை களமாக வைத்து புனையப்பட்டிருக்கும் கதை.
 
நாசர் நடத்தும் பாய்ஸ் கம்பெனியில் சிறு வயது முதலே சேர்ந்து பயிற்சி பெரும் காளியப்பன்(சித்தார்த்),கோமதி நாயகம்(பிரித்விராஜ்) இருவருக்கும் இடையே நிலவும் நட்பு ,பொறாமை , பகை இவைகளை சுற்றியே படம் நகர்கிறது. 

ப்ரித்விராஜின் பாத்திரப் படைப்பில் இருக்கும் தெளிவு சித்தார்த்தின் பாத்திரப் படைப்பில் இல்லாதது ஒரு குறை. ராஜபார்ட் சித்தார்த்தா? குருவி தலையில் பனங்காய்! அதற்கேற்ற உடல் அமைப்பும் அவருக்கு  இல்லை. குரலிலும், உடல் மொழியிலும் அவரையும் அறியாமல் கான்வென்ட் வந்து விடுகிறது.  மைல்ஸ் டு கோ.

பிரித்விராஜ் பின்னி எடுக்கிறார். ஆரம்பத்தில் பொன் வண்ணனின் நடிப்பை மறைந்திருந்து பார்த்து தானும் ஒரு நாள் ராஜ பார்ட் வேஷம் கட்ட வேண்டும் என்று ஆசைப் படுவதாகட்டும், ராஜ பார்ட் வேஷத்தை ஆசானுக்கு முன் நடித்து காட்டிவிட்டு தனக்குத் தான் அந்த வேடம் கிட்டப் போகிறது என்று எதிர்பார்போடு நிற்பதாகட்டும், அது கிட்டதா போது குமைவதாகட்டும், பின்னால் கம்பெனி முதலாளியாக தானே மாருவதாகட்டும், ஒரு இடத்திலும் சோடை போகவில்லை. சித்தார்த் மீது அவருக்கு வரும் பொறாமை கூட தனக்கு கிட்ட வேண்டிய அங்கீகாரம் கிட்டாததால் அவர் அடையும் தாபம் போல தோன்றுவது இயக்குனரின் திறமையா? அல்லது நடிகரின் திறமையா? அந்த தமிழாளத்தை மன்னித்து விடலாம்.

கொஞ்ச நேரமே வந்தாலும் பொன் வண்ணனும், தம்பி ராமையாவும்   மன்சூர் அலிகானும் கச்சிதம். முத்திரை நடிப்பு நாசருடையது! திருப்புகழை மனப்பாடம் செய்ய சொல்லும் காட்சியும், படத்தின் முன் பாதியில் ப்ரித்விராஜை ஒருமையில் அழைக்கும் தம்பி ராமையா,பின் பாதியில் முதலாளி என்று விளிப்பதும் அந்தக்  கால நடை முறையை எடுத்துக் காட்டுகிறது. அரங்க அமைப்பும் உடைகளும் கூட நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லுகின்றன. பாடல்கள் இனிமை என்றாலும் 1940களின் இசை போல இல்லை. 

ஜமீன்தாரின் மகளாக வந்து, சித்தார்த்தை காதலித்து இறந்து போகும் அனைகா மனதில் ஒட்டவே இல்லை. ராணி வேஷம் போட்டுக் கொண்ட பள்ளிக் கூட மாணவி போல இருக்கிறார். வேதிகா பரவாயில்லை. 

ரத்தம் பீரிடும் சண்டை இல்லை, அடி உதை,இரட்டை அர்த்த காமெடி இல்லை. வித்தியாசமான கதை களத்தில், போரடிக்காமல் ஒரு படத்தை எடுத்திருக்கும் வசந்த பாலனை உற்சாகப்படுத்த இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்க்கலாம். பார்க்க வேண்டும் 

Friday, November 21, 2014

நீடித்த சந்தோஷம் எது?


நீடித்த சந்தோஷம் எது?


முகநூல்(face book) தோழி திருமதி காயத்ரி  சுந்தரேசன் சமீபத்தில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். 

Pleasure- what is it that gives one pleasure? Physical?mental?emotional? which is lasting pleasure? 

நான் தமிழில் சிந்திப்பதால் இதை தமிழ் படுத்துகிறேன். ஒருவருக்கு எது சந்தோஷத்தை கொடுக்கிறது? புலனின்பமா? அறிவு சார்ந்த இன்பமா? இல்லை உணர்வு சார்ந்த இன்பமா? எந்த இன்பம் நீடித்திருக்கும்?

நல்லது! முதலில் புலனின்பத்தை எடுத்துக் கொள்வோம். கண்டு,கேட்டு, உற்று,உணர்ந்து.முகரும் இந்த ஐவகை இன்பங்களும் பெண்ணிடம் உண்டு. சாப்பாட்டிலும் உண்டு. இந்த இரண்டு வகை இன்பங்களை தேடித் தேடி ஓடாதவர்கள் உண்டா? இதனால் கிடைக்கும் இன்பம் நிச்சயமாக நிலையானது கிடையாது. 

மேலும் இந்த புலனின்பத்தை அனுபவித்து தீர்த்து விட முடியாது. மகாபாரதத்தில் வரும் யயாதி கதையில் யயாதி கூறியதைப் போல, உலக இன்பங்களை அனுபவித்து தீர்த்து விடலாம் என்று நினைப்பது எரிகின்ற கொள்ளிக்கு நெய் வார்த்து அதை அணைத்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பானது. எனவே நீடித்த இன்பத்தை ஒரு போதும் தராது. அதனால்தான் நம் முன்னோர்கள் இது ஒரு வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதர்காகத்தான் அவ்வப்பொழுது விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அடுத்து அறிவார்ந்த சந்தோஷம்: அறிவார்ந்த சந்தோஷம் என்று ஒன்று உண்டா என்று தெரியவில்லை. ஏனென்றால் அறிவு செயல் பட ஆரம்பிக்கும் பொழுது சந்தோஷம் விடை பெற்று விடும். சிறு வயதில் மயலின் இறகை நோட்டு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடும் என்று நம்பும் சந்தோஷம் வளர்ந்த பிறகு இருக்குமா?  

மணிக்கொடி எழத்தாளர்களில் ஒருவரான கு.ப.ராஜகோபால் ஒரு அருமையான சிறு கதை எழுதி உள்ளார்.  அதில் சித்தார்த்தன் என்னும் இளவரசன் ஏன் புத்தனானான்  என்பதற்கு ஒரு காரணம் கூறியிருப்பார். 

இரவில் மனைவி யசோதராவோடு சுகிக்கிறான் சித்தார்த்தன். அதற்குப் பிறகு அவள் உறங்கி விட, இவ்வளவுதானா? இதற்குத்தானா? என்னும் கேள்விகள் அவனை வாட்ட, அன்றிரவே அரண்மனையை விட்டு வெளியேறுகிறான். என்று  முடித்திருப்பார்.

அடுத்தது உணர்வு பூர்வமான சந்தோஷம்: இது சற்று உயர்ந்த ரகம்: மேலே சொன்ன இரண்டு ரகங்களும் அனுபவிக்கும் ஒருவருக்கு மட்டும் சந்தோஷத்தை தரும் என்றால், இதில் நாம் மற்றவரையும் சந்தோஷப்படுத்தலாம். எப்படி என்றால் ஒருவர் பாடுகிறார். அது அவருக்கு சந்தோஷம், அது நன்றாக இருக்கும் பட்சத்தில் கேட்பவருக்கும் சந்தோஷம். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி  இன்று இல்லை. ஆனால்  அவருடைய சங்கீதம் இன்றும் நம்மை சந்தோஷப் படுத்துகிறது. 

ஸ்வாமி ஏ.பார்த்தசாரதியின் உரையில் ஒரு முறை குறிப்பிட்டார். இந்த உலகில் மூன்று  விதமான உதவிகள் உண்டு. ஒன்று பணத்தால் ஒருவருக்கு உதவுவது. இது அதமம் (கடைசி). இரண்டாவது உடலால் ஒருவருக்கு உதவுவது இது மத்யமம்(இடை நிலை). மூன்றாவது உணர்வு பூர்வமாக ஒருவருக்கு உதவுவது, இதுதான் உத்தமம் (உயர்ந்த நிலை). 

முன்பெல்லாம் எல்லா மகான்களும் பாடகர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற செலிப்ரிடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நான், "எல்லா இடங்களிலும் பெரிய மனிதர்கள் என்றால் ஒரு தனி கவனிப்புதான்" என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் அவர்கள் தங்கள் திறமையால் எத்தனை பேர்களை உணர்வு பூர்வமாக சந்தோஷப் படுத்துகிறார்கள்? அதற்கான அங்கீகாரம்தான் அவர்களுக்கு  கொடுக்கப்படும் முக்கியத்துவம். மேலும் இந்த உணர்வு பூர்வமான சந்தோஷத்தை தெய்வீகமாக மாற்றுவது எளிது. 

இதில் எதுவுமே நிலைத்த சந்தோஷத்தை தராது என்பதுதான் உண்மை. எதுவுமே நீடித்த சந்தோஷத்தை தராது என்பதை கண்டு கொள்வதுதான் சந்தோஷத்தை தரும்.  

யாதனின் யாதனின் நீங்கியாங்கு நோதல் 
அதனின் அதனின் இல 

எதில் எதில் இருந்தெல்லாம் விலகி இருக்கிறோமோ அவைகளால் துன்பம் கிடையாது என்று இதைத்தான் வள்ளுவர் சொன்னார். நீங்குதல் என்பது  புறக்கணித்தல் அல்ல எட்டி இருத்தல், டிடாச்மென்ட். இதை பழக்கிக் கொண்டோமானால் வாழ்கை இனிக்கும்! 

Sunday, October 19, 2014

Be Positive!

Be Positive

முன்பெல்லாம்,அதாவது ஏழெட்டு  வருடங்களுக்கு முன்பு வரை யாராவது, "அந்த கோவிலில் என்ன ஒரு வைப்ரேஷன்!" என்றால் எனக்கு அது புரியவே புரியாது. பாலகுமாரன் வேறு நல்ல அதிர்வுகள் என்று எழுதுவார். நல்ல அதிர்வா? அது எப்படி இருக்கும்? உடல் ஆடுமா? என்றெல்லாம் யோசிப்பேன். 

அந்த கட்டத்தில்தான் சுதர்சன் க்ரியா கற்றுக் கொண்டேன். அடடா என்ன அதிர்வு!! கற்றுக் கொண்டதோடு நிற்காமல் தினசரி செய்வதை பழக்கமாக்கிக் கொண்டேன்! நல்ல அதிர்வுகளை உணர ஆரம்பித்தேன். இந்த நல்ல அதிர்வுகளை கோவில்களில் மட்டுமல்லாமல் நல்ல மனிதர்களிடமும், நல்ல வீடுகளிலும், ஏன்? பூக்கள், பழங்கள், காய்கறிகளிலும் உணர முடிந்தது. 

இவை எல்லாம் உணரத் தொடங்கிய பொழுதுதான் .எதற்காக கோவில்களில் சுவாமிக்கு(சுவாமி சிலைகளுக்கு) பால்,தயிர்,தேன், பஞ்சாமிர்தம்(பழங்கள்)  இவைகளால் அபிஷேகம் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. பசும் பால், தயிர் இவைகளில் அபரிமிதமான நல்ல அதிர்வு உண்டு. அதைப் போலவே இயற்கை பொருள்களான தேன், சந்தனம் இவைகளிலும் நல்ல அதிர்வுகள் உண்டு. இவைகளைக் கொண்டு சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது அந்த நல்ல அதிர்வுகளை அந்த விக்ரகங்களும் பெற்று அதிக சக்தி உடையதாக ஆகின்றன. 

இதைப் போலவே ஆன்மீகத்தில் முன்னேற விரும்புகிறவர்கள் வெங்காயம், பூண்டு போன்றவைகளையும், முதல் நாள் சமைத்த பண்டங்களையும் தவிர்ப்பது நல்லது என்று கூறுவதற்கும் அர்த்தம் இருக்கிறது. மேற் சொன்ன காய்கறிகளில் நல்ல அதிர்வுகள் இருக்காது. அதே சமயம், திவசத்தன்று சமைக்க வேண்டிய காய்கறி களான அவரை, புடலை,பாகல் போன்றவற்றில் மிக நல்ல அதிர்வுகள் உண்டு. நாம் உண்ணும் உணவு வெறும் உடல் பலத்தை மட்டும் பெருக்காமல் ஆன்மீக பலத்தையும் பெருக்க வேண்டும் என்பதனால்தான் உணவில்  இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள் நம் முன்னோர்.

நாதஸ்வரம், வீணை போன்ற கருவிகளின் ஓசையும் நல்ல அதிர்வுகளை உண்டாக்குவதால்தான் நாதஸ்வரத்தை மங்கள வாத்தியம் என்பதோடு சுப நிகழ்ச்சிகளின் பொழுது அதை இசைக்கிறோம். வீணைக்கும் தெய்வீகத்திற்கும் உள்ள சம்பந்தத்தை பற்றி தனி கட்டுரை எழுத வேண்டும். மணி ஓசைக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு என்பதால்தான் பூஜை சமயத்தில் மணி ஓசை ஒலிக்கச் செய்கிறோம். தினசரி மணி அடித்தபடி வீட்டை சுற்றி வருவது வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும். 

முடிந்த வரை பாசிடிவ் எனெர்ஜியை பெருக்கிக் கொள்வோமே!

Wednesday, October 1, 2014

இனித்திடும் இரவுகள்!

இனித்திடும் இரவுகள்!




ஒவ்வொரு பண்டிகையுமே அதனதன் அளவில் நமக்கு எதையோ போதிக்கின்றன.  நவராத்திரியோ வாழ்க்கைக்கு மிக மிக அவசியமான சகிப்புத் தன்மையையை வலியுறுத்துகிறது. ஆம், நவராத்திரியில் நாம் எத்தனை விஷயங்களை சகித்துக் கொள்கிறோம்..! 

முதலில் இடம்...! 
எங்களின் இளம் வயதில் பெரும்பாலான வீடுகளில் ரெடிமேட் படி இருக்காது. கட்டும் படிதான். வீட்டில் இருக்கும் பலகை, பெட்டி, ட்ரம்கள் மற்றும் ரேழியில் நாளை எண்ணிக் கொண்டிருக்கும் தாத்தா படுத்திருக்கும் பெஞ்ச் உட்பட.. இவற்றை கொண்டுதான் படி அமைக்கப் படும். தாத்தா கயிற்று கட்டிலுக்கு மாற்றப் படுவார். 
  
கிச்சனில் சாமான்கள் அடுக்க போடப் பட்டிருக்கும் பலகை உருவப் பட்டு ஒரு படியாகி விடும். சாமான்கள்? ஒரு வாரம்தானே கீழே இருந்தால் என்ன? கிச்சன் வரை யார்  வரப் போகிறார்கள்? அப்படியே வந்தாலும்தான்  என்ன? அவர்கள் வீட்டிலும் இதே நிலமைதனே?   இதில் ஒரே ஒரு கஷ்டம் கொலுவை எடுக்கும் வரை கருவடாம் பொரித்து சாப்பிட முடியாது. கருவடாம் டின் அடியில் மாட்டிக் கொண்டிருக்குமே!! 

பலகைகள் ஏறத்தாழ இல்லாமல் சமன் படுத்த சமயத்தில் குழந்தைகளின் நோட்டு புத்தகங்களை வைத்து விடுவார்கள். குழந்தைகளுக்கு சந்தோஷம்தான், பெரியவர்கள் அவர்களை படி படி என்று திட்ட திட்ட முடியாதே..! blessing in disguise!

இப்போது போல மூட்டு வலியால் பெரும்பாலனோர் அப்போது அவதிப் படவில்லை போலிருக்கிறது ஆகவே தரையில் ஒரு ஜமக்காளத்தை விரித்து விட்டால் வருபவர்கள் கீழே உட்கார்ந்து  விடுவார்கள். 

இப்போது, இருக்கும் இடத்தில் கொலுவிர்க்காக  கணிசமான இடத்தை ஒதுக்கிய பிறகு, மிஞ்சி இருக்கும் இடத்தில் சோபா, கட்டில், வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ்  இவற்றோடு நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.  

அடுத்தது டிரஸ்! 
நாங்கள் சிறுமிகளாக இருந்த பொழுது, ஒரு நாள் ராதா, ஒரு நாள் கிருஷ்ணர், ஒரு நாள் மடிசார்,இதிலும் (ஐயர் கட்டு, ஐயங்கார்  கட்டு என்று இரண்டு நாள் கட்டி விடுவார்கள்). அப்படியெல்லாம் இப்போது சிறுமிகளுக்கு யாரும் வேஷம் போட்டு விடுவதில்லையே ஏன்? அம்மாக்களுக்கே மடிசார் யாரோ ஒருவர் கட்டி விட வேண்டும் என்னும் போது அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு கட்டி விட முடியும் என்கிறீர்களோ? வாஸ்தவம்தான். இப்படி வேஷம் போட்டுக் கொள்ளாத நாளில் பட்டு பாவாடை  அணிந்து கொள்வோம். இருக்கும் இரண்டு பட்டுப் பாவாடைகளையே தினசரி கட்டிக் கொள்ள முடியுமா? "தரையில் புரள விடக் கூடாது, "அழுக்காக்கி விடக் கூடாது" என்று ஏக கண்டீஷன்களோடு  தன் பாவாடையை அக்கா ஒரு நாள் தருவாள். அதில்  எக்கச்சக்க எண்ணை தாளித்து பேப்பரில் கட்டி தந்த யார் வீட்டு சுண்டலோ   சர்வ நிச்சயமாக கொட்டும். அக்காவிற்கு தெரியாமல் நைசாக அவிழ்த்து வைத்து விடலாம் என்றால், நைட் ஷிப்ட் முடித்து வீடு திரும்பும் அப்பாவி ஐ.டி  இளைஞனை "ஊது" என்று ரவுசு பண்ணும் ராத்திரி ரோந்து போலிஸ் மாதிரி, "எங்க பாவாடையை அழுக்கு பண்ணிக்காமல் இருக்கியான்னு பார்க்கலாம்" என்று பாவாடையை அவிழ்க்கும் நேரத்தில் எங்கிருந்தோ ஆஜராவாள் அக்கா! சில நாட்கள் அம்மா தன்னுடைய பட்டுப்  புடவையை எங்கள் உயரத்திற்கு தோதாக மடித்து, இடுப்பில் ஒரு நாடாவை  கட்டி, அதில் புடவையை பாவாடை போல கொசுவி சொருகி விடுவாள். 

இன்றைய பெண்களுக்கு புடவை கட்டிக் கொள்ள வேண்டும் என்பதே ஒரு டாஸ்க் என்றால் எங்களுக்கு பிரச்சனை ப்ளௌஸ்! இந்த புடவையை கட்டிக் கொண்டு ரொம்ப நாட்களாகி விட்டதே, இன்றைக்கு கட்டிக் கொள்ளலாம் என்று ஒரு புடவையை எடுத்து வைப்போம் . பாழாய்ப் போன ப்ளௌஸ் முழங்கைக்கு மேல் ஏற மாட்டேன் என்கிறதே..!! ஒன்று அவசர அவசரமாக கையை பிரிக்க வேண்டும், அல்லது, வேறு புடவைக்கான ப்லௌசை இன்று போட்டுக் கொண்டு விட்டு, அந்த புடவை கட்டிக் கொள்ளும் போது 'ஞே' என்று முழிக்காமல் ஏதாவது அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். 

மிக மிக டேஞ்சரான அட்ஜஸ்ட்மென்ட் சாப்பாடும்,  சாப்பிடும் நேரமும். 
மஹாலய அமாவாசை அன்று பாயசத்தோடு துவங்கும் சாப்பாடு, புட்டு, ஒக்காரை, வெல்லம் போட்ட காராமணி, சுகியன், வடை, என்று விஜய தசமி வரை தினசரி ஹை கலோரி உணவுகள்,  அதுவும் பெரும்பாலும்  அகாலத்தில்தான். இவற்றை தவிர வாழைப் பழம், வெற்றிலை  பாக்கிற்காக போகும் இடங்களில்  காபி, டீ, ரோஸ் மில்க் வகையறாக்கள் நம் எடையை ஏற்றுவதில் கணிசமான பங்கு வகிக்கும்.  காலை  சாப்பாடு எப்படியோ கிடைத்து விடும். இரவுதான்... எல்லா வீடுகளிலிருந்தும் கலக்ட் செய்யப் படும் சுண்டல், பழங்களை(பழம் கள் இல்லை) ருசி  பார்த்து, ராத்திரிக்கு ஒண்ணும் வேண்டாம், வயிறு புல் என்று ஜம்பமாக கூறியவர்கள் அர்த்த ராத்திரியில் பிரிஜ்ஜை குடைந்து கொண்டு நிற்பார்கள். இல்லாவிட்டால் காலையில் காபி குடிக்கும் பொழுதே பசி பிராண்டும். 



அடுத்த ரொம்ப சிறப்பான அட்ஜஸ்ட்மென்ட் டைம் மானேஜ்மென்ட். 
இந்த ஒன்பது  அல்லது பத்து நாட்களுக்கு மட்டும் நமக்கு எப்படி பூஜை செய்யவும்,கோவிலுக்கு போகவும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு விசிட் செய்யவும், நம்மையும் வீட்டையும் அழகாக அலங்கரித்துக் கொள்ளவும்(அடடா இந்த அழகுணர்ச்சி வருடம் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும்!!) நேரம் கிடைக்கிறதே!! இதில் டி.வீ. சீரியல்களையும் விட்டு வைப்பதில்லை. மேலே குறிப்பிட்ட எல்லாவற்றிலும் நமக்குள் ஒளிந்திருக்கும் திறமை வெளிக் கொணரப் படுகிறது. எப்படியோ அட்ஜஸ்ட் செய்து எல்லாவற்றையும் செய்கிறோம்.

இந்த  நவராத்திரி காலத்தில் நம் தந்தை குலத்தின் சகிப்புத் தன்மையை  பாராட்டியே தீர வேண்டும். இந்த வருடம் சிம்பிளாக கொலு வைக்கலாம் என்று தொடங்கும் கொலு எந்த வருடம் சிம்பிளாக முடிந்திருக்கிறது?  கொஞ்சமாக கொஞ்சமாக சேரும் பொம்மைகள், அலங்கார பொருள்கள், ரிடன் கிப்ட்,  மளிகையில் உபரி செலவு, வெளியே போய் வர ஆகும் செலவு என்று அடுத்தடுத்து மனைவிமார்கள் போடும் குண்டுகளால்  பெரிதும்  பாதிக்கப் படுவதலோ என்னவோ, குடும்பத் தலைவர்கள் வாய் மூடி மௌனியாகி விடுகின்றனர். அப்புறம் என்ன பெண்கள் ஜாம் ஜாமென்று நவராத்திரி கொண்டாடுகிறோம்.

"தந்தது என்தன்னை, கொண்டது நின் தன்னை, சதுரர் எவர் கொலோ சங்கரா?" (குறைகள்  உடைய என்னை உனக்குத்  தந்தேன், நிறைவான,  பூரனனான உன்னை பெற்றுக் கொண்டேன், நம் இருவரில் யார் சாமர்த்தியம் மிக்கவர்கள்?) என்று மாணிக்க வாசகர்  சிவபெருமானிடம் வினவியது போல இந்த பத்து நாட்கள் நாம் சில சின்ன விஷயங்களை விட்டு கொடுத்து அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் பல சந்தோஷங்களையும் புண்ணியங்களையும்{??)  அடைகிறோம். எனவே இனிய நவராத்திரிக்கு நன்றி கூறி மீண்டும் மீண்டும் வருக என்று வரவேற்போம்!

Wednesday, September 10, 2014

சினிமாவில் வராத கவுண்டமணி செந்தில் காட்சி!

சினிமாவில்  வராத கவுண்டமணி  செந்தில் காட்சி!



கவுண்டமணி: ஏண்டா நாயே! என்னடா சொன்ன என்கிட்ட? சொல்லுவியாடா ? சொல்லுவியாடா? (செந்திலை அடிக்க ஓடுகிறார்)

அண்ணே! ஏன் அண்ணே அவனை அடிக்கிறீங்க?

இந்த நாய் கிட்ட நான் என்ன கேட்டேன்,  இவன் என்ன பண்ணியிருக்கான்? கேளுங்க...

அப்படி என்னப்பா செஞ்ச?  அண்ணன் உன்கிட்ட என்னப்பா சொன்னாரு?

அவரு தங்கச்சிக்கு பையன்  பாக்க சொன்னாரு..

அவ்வளவுதானே? பாத்தியா?

பார்த்தேன்,

அவுரு எப்படி  சொன்னாரு, நீ எப்படி பார்த்த?

அவரு சொன்ன மாதிரியே நல்ல ஹீ..

கவுண்டமணி: டேய்! வேணாம் சொல்லாத, படுவா..

அண்ணே, விடுங்கண்ணே, நீ சொல்லுப்பா,  எந்த மாதிரி பையன் பார்த்த..?

நல்ல ஹீரோ மாதிரி மாப்பிளைதான் பார்த்தேன்.

டேய்!  மறுபடியும் அதயே சொல்ற,,?

அண்ணே!  நீங்க சொன்ன மாதிரிதானே பாத்துருக்கான், அப்புறம் ஏன் போட்டு அடிக்கிறீங்க?

கவுண்டமணி(லேசான அழுகையோடு): நீங்களே சொல்லுங்க ஹீரோ இப்படியா  இருப்பான்? அவர் கை காட்டும் இடத்தில், நபர் அழுக்காக, பரட்டை தலை, லுங்கி, வாயில் பீடி, எட்டு நாள்  மீசையோடு, போதையில் சொருகும் கண்களோடு, கேட்ட வார்த்தை பேசியபடி இருக்கிறான். அவனைக்கண்டு அதிர்ந்து போனவர்கள் செந்தில் பக்கம் திரும்பி,

என்னப்பா இது?

என்னங்க? இவர் ஹீரோ மாதிரின்னு சொன்னாரே தவிர, எந்த கால ஹீரோன்னு சொன்னாரா? இப்போல்லாம் ஹீரோ இப்படித்தானே இருக்காங்க?

கவுண்டமணி: டேய்! வேண்டாம், ஓடிப் போயிடு... அடிக்க வர, செந்தில் தப்பித்து ஓடுகிறார்..



   



Monday, August 18, 2014

நினைவலைகள்!

நினைவலைகள்! 

எல்லா பண்டிகைகளின் பொழுதும் அம்மாவின் நினைவு வரும். குறிப்பாக கோகுலஷ்டமியிலும், நவராத்திரியிலும்,  தீபாவளியின் பொழுதும் அம்மாவின் நினைவை தவிர்க்கவே முடியாது. 

அம்மாவின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ குருவாயூரப்பன் என்பதால் அதிக பட்ச ஈடுபாட்டோடு பட்சணங்கள் செய்வாள். அன்று முழுவதும் முழு பட்டினி! ஜுரம் வந்தது போல வித விதமான பலகாரங்கள் அலுக்காமல் சலிக்காமல் செய்து  கொண்டே இருப்பாள். ஓரிரு முறை தானே நெல்லை ஊற வைத்து, உரலில் இடித்து வீட்டிலேயே அவல் கூட தயாரித்திருக்கிறாள்! ஒவ்வொரு செயலிலும் தென்படும் கிருஷ்ணனின் மீதான அம்மாவின் அன்பு! மற்றபடி உட்கார்ந்து  சுலோகம் சொல்வதோ பூஜை செய்வதோ அம்மாவின் வழக்கம் இல்லை. பூஜைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பாள். நாங்கள் பஜனை செய்வோம்! 

இதைப் போலவே நவராத்திரி! ஒன்பது படி கட்டி, அழகாக பார்க் அமைத்து கொலு வைப்பாள். வைதீகர் ஒருவரை வைத்து தேவி மஹாத்மியம் பாராயனதிற்க்கு ஏற்பாடு செய்வாள். அந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள். அதைத் தவிர தினசரி வீட்டில் உள்ளவர்கள் செய்யும் பூஜைக்கான ஏற்பாடு, பாயசம் வடையோடு சமையல், மாலையில் சுண்டல், வெள்ளிக்கிழமை அன்று புட்டு, இதற்க்கு நடுவில் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேடம், வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு வழங்குவது, தானும் மற்றவர் வீடுகளுக்கு செல்வது, என்று எத்தனை விஷயங்களை அனாயசமாக செய்திருக்கிறாள்..! இத்தனைக்கும் இப்போது போல மிக்ஸி, கிரைண்டர் போன்ற வசதிகள் கிடையாது.  ஏன் தண்ணீர் கூட வெளியிலிருந்து பிடித்துக் கொண்டு வர வேண்டும். இதில் வெள்ளிக் கிழமை அன்று ஒரு சுமங்கலியை சாப்பிட சொல்லி புடவை வைத்து கொடுப்பதும் நடக்கும். 

தீபாவளி அன்றும் அம்மாவுக்கு பட்சண ஜுரம் பிடிக்கும். அதற்க்கு நடுவில் எங்களுக்கு டிரஸ் கூட தைத்து கொடுத்திருக்கிறாள். விடியல் காலை தீபாவளி மருந்து கிளறி விட்டு, சுடச் சுட மைசூர்பாக் கிளறி கொட்டுவது அம்மாவின் வாடிக்கை. எங்களையெல்லாம் எண்ணை தேய்த்து குளிக்க வைத்து, புதிது அணியச் செய்து, நாங்கள் ஒரு கோர்ஸ் பட்டாசு வெடித்து விட்டு உள்ளே வந்ததும் எங்களுக்கு காபி கொடுத்து விட்டு துலா ஸ்நானம்  செய்ய காவிரிக்கு கிளம்பி விடுவாள். வீட்டில்  வேலை செய்பவர் உட்பட அத்தனை பேருக்கும் புது துணி வாங்கி கொடுக்கும் அம்மா ஒரு முறை கூட புதுசு அணிந்து கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. நாங்கள் யாரும், "உனக்கு என்னம்மா வாங்கிக் கொண்டாய்"? என்று கேட்டதும் இல்லை. 

Saturday, July 19, 2014

அரிமா நம்பி! - review

அரிமா நம்பி!


ஒரு பப்பில்(PUB) முதல் நாள் இரவு அறிமுகம் ஆகும் விக்ரம் பிரபுவும், பிரியா ஆனந்தும் உடனே காதலில் விழுந்து  மறுநாளும் ஒரு ரெஸ்டாரெண்டில் சந்தித்து, "பார் மூடும் நேரமாகி விட்டது சார்" என்று சர்வர் கூறும் வரை குடித்து, குடியைத் தொடர(அடடா!) ப்ரியாவின் வீட்டிற்க்குச் செல்கிறார்கள். அங்கு அவர் கடத்தப் பட, அதன் பின்னணி என்ன? அவரை அரிமா நம்பி மீட்டாரா? என்பதுதான் கதை. அரிமா என்றால் சிங்கம், நம்பி என்பது இளைஞன் என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல்.           

A.R. முருகதாசின் சீடர் ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் முதல் படம். குருவிற்கு ஏற்ற சீடராக படத்தை விறுவிறுவென்று கொண்டு சென்றிருக்கிறார்! படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தீயாக பற்றிக் கொள்ளும் பரபரப்பு இறுதி வரை நீடித்திருப்பது ஒரு சிறப்பு. ட்ரம்ஸ் சிவமணி இசைஅமைப்பாளராக அறிமுகம். பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

பொதுவாக இந்த மாதிரி   படங்களில் கதா நாயகிக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இருக்காது, இதில் கதா நாயகனுக்கும் இல்லை. சமீபத்திய ந ம்பிக்கை நட்சத்திரமான விக்ரம் பிரபு ஓடுகிறார், துரத்துகிறார், சண்டை போடுகிறார். கொஞ்சம் காதலிக்கவும் கற்றுக் கொள்ளலாம்.

அதென்ன பிரியா ஆனந்த் எல்லா படங்களிலும் ஹீரோவோடு சேர்ந்து   மட்டையாகிற அளவுக்கு குடிக்கிறார்? நவீன பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்களா என்ன? 

சின்ன  ரோலில் வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். 

பிரியா ஆனந்த் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் சர்வேயலென்ஸ் காமிராவில் பிரியா ஆனந்தும் விக்ரம் பிரபுவும் பதிவாகாமல் போனது எப்படி? ஒரு பெரிய சேனலின் சி.ஈ.வோ.வின் வீடு இப்படியா கை வைத்ததும் திறந்து கொள்ள கூடியதாய் காவல் எதுவும் இல்லாமல் அனாமத்தாய் இருக்கும்? அதன் வாசலில் பார்க் செய்யப் பட்டிருக்கும் விக்ரம் பிரபுவின் பைக்  வில்லன் கையாட்களின் கண்களில் படாதது எப்படி? எந்த சென்ட்ரல் மினிஸ்டர் ஐ.ஜி. ஆபீசில் உட்கார்ந்து வில்லனைத் தேடுவார்? அங்கு  உண்மைக்கு வெகு அருகில் வந்து விடும் இளம் போலிஸ் அதிகாரியை வெகு அலட்சியமாக கொலை செய்கிறாரே அது அவ்வளவுதானா? 
தனக்கு எல்லாமே தன தந்தைதான் எனும் கதாநாயகி அவர் கொடூரமாக கொலை செய்யப் பட்டிருக்கிறார் என்று அறியும் போது ஏதோ நாலு வீடு  இருக்கும் அங்கிள் இறந்து போனது போல ஏனோ தானோ என்றுதான் கண்ணீர் வடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளை மறக்கடிக்கிறது படத்தின் விறுவிறுப்பு!  

Friday, July 4, 2014

BEAUTY HAS AN ADDRESS 

I have a big list of places I would like to visit in and around the Globe. My first preference will be Oman even though I have visited and lived over there for more than two decades. May be that is the reason I would like to visit Oman again. Yes It is my home away home. 

I landed Oman on 05 Jan 1987 to join my husband who was working over there, and left that place on Dec.2013. During my stay over there.I was watching the growth of Oman as a mother watches her daughter growing and feel proud about her beauty and elegance. 

In '87 Oman was developing. There were no proper roads in Wadi Kabir, Hamriya and Honda road areas. Al-Khuwair was developing. The 'bhs' building was a land mark. When CCC came we were thrilled to visit that. but now...! What a growth!. How many Hyper markets!! Those days only very few parks.. In early '90s Qurum park was developed. I still remember those days we visited that park with our kids. I am curious to know whether it has the same look or changed?   

I would like to visit Rumaiz garden, Nakhal, Rustaq, and Nizwa. Those were our favourite picnic destination those days.. Now I would like to visit agin all those places and see the difference. Nakhal has a small water falls and taking a dip at the hot springs of Rustaq will cure skin diseases...Isn't it? 

My favourite picinic spot in Oman is Yiti beach. I would like to visit Yiti beach during Nov-Feb, because at that time rare birds will come to Yiti. Moreover driving to Yiti beach, and Quriyat are awesome experience. I don't want to miss that. I would like to visit Al-sawadi beach too to collect colourful  and beautiful shells .   

Recently Oman has developed interesting tourist attractions like going deep into the sea and watch dolphins. I enjoyed that twice, Wow! It's really fantastic. Who will not wish to have that splendid experience again? and the next fascinating, thrilling experience is desert safari... I will definitely go for it once more.

One more place I want to visit in Oman is Salalah. When we were there, we planned many times but could not make it. So during my next visit I don't want to miss it. Travelling by road in Oman is awesome, especially the sea side roads in Seeb will be a pleasure. So I will definitely take a l..o..n..g road trip. 

Last but not the least is visiting Shiva temple at Muscat and Krishna temple at Darseit and worship. I suppose there is no need to mention that my trip to Oman will not be completed without relishing Sambar Vada at Oman express and Dokla at Bollywood restaurant. 

Monday, June 23, 2014

VI ANNUAL DAY CELEBRATIONS OF SRI VIGNESWARA LADIES CLUB - RAMAPURAM

 VI  ANNUAL DAY CELEBRATIONS OF SRI VIGNESWARA LADIES CLUB - RAMAPURAM 

ராமாபுரத்தில் இருக்கும்  எங்கள் 'விக்னேஸ்வரா லேடிஸ் கிளப்'ன் ஆறாவது ஆண்டு விழாவை 17.6.2014 செவ்வாய் கிழமை அன்று கொண்டாடினோம். இடம் ராமாபுரம் கே.பி. நகர் மாநகராட்சி பூங்கா. விழாவின் முக்கிய நிகழ்ச்சி ராமாபுரம் அரசு உயர் நிலை பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசும் அதைத் தவிர அதே பள்ளியில் பயிலும் ஐம்பது மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும், இரண்டு மாணவர்களுக்கு சீருடையும் வழங்கியதுதான்.

Displaying IMG_0902.JPG
FROM LEFT TO RIGHT: Mrs.Jayanti, Mrs.Bhanumathy,Mrs.Shyamala, Ms.Bargavi Devandra,Mrs.Kanchana,Mrs.Rajalakshmi
மாலை 4:30 க்கு நிகழ்ச்சி துவங்கும் என்று குறிப்பிட்டிருந்தாலும் நான்கு மணி முதலே சங்க உறுப்பினர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். அதன் பிறகு பள்ளிக் குழந்தைகளும் வந்து சேர்ந்தனர். எல்லோருக்கும் சிற்றுண்டியும், காபியும் வழங்கப் பட்டவுடன் நிகழ்சிகள் திருமதி.சுந்தரி அவர்கள் இறை வணக்கம் பாட இனிதே துவங்கின.   வரவேற்புரையை விக்னேஸ்வரா லேடிஸ் கிளப் ன் தலைவி திருமதி.சியாமளா வெங்கடராமன் அவர்கள் வாசித்தார்கள். அதன் பிறகு விழாவிற்கு தலைமை தாங்கிய, Tamil Nadu Social Welfare Board இல் இணை இயக்குனராக பணி புரிவதோடு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, விமென்ஸ் இந்தியன் அசோசியேஷன், சி.பி. ராமசாமி ஐயர் பௌண்டேஷன் போன்றவைகளில் சிறப்பு செயலாளராக சேவை புரியும்  MS. பார்கவி தேவேந்திரா அவர்கள் உரையாற்றினார்கள். அவருடைய தோற்றத்தைப் போலவே அவரின் பேச்சும் எளிமையாக இருந்தது. அதன் பிறகு மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி. காஞ்சனா அவர்கள் விக்னேஸ்வரா லேடிஸ் கிளப் செய்து வரும் சேவைகளை புகழ்ந்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மாணவர்களுக்கு அறிவுரையும் கூறி ஒரு பெப் டாக் வழங்கினார்.

Displaying IMG_0812.JPG
Gathering of students

Displaying IMG_0792.JPG
 Mrs.Bhanumathy & Mrs. Jayanti compering the evet

Displaying IMG_0889.JPG
Prize distribution

Displaying IMG_0904.JPG
Chief guest with Club members
இதன் பிறகு ராமாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் வேங்கடக்ரிஷனனுக்கு விக்னேஸ்வரா லேடிஸ் கிளப் சார்பில் ரூ.1500/- வழங்கப்பட்டது. இந்த மாணவன் 493/500 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளான் என்பது  குறிப்பிடத் தக்கது.  இரண்டாம் மற்றும்
மூன்றாம் இடத்தை பிடித்த விஜய சாந்திக்கும் கீர்த்தனாவுக்கும் முறையே ரூ.1000/-, ரூ.800/- ரொக்க பரிசுகளாக வழங்கப்பட்டன. இதைத் தவிர அறிவியல் படத்தில் 100/100 மதிப்பெண்கள் வாங்கிய ஐஸ்வர்யா என்னும் மாணவிக்கும், பிரகாஷ் என்னும் மாணவனுக்கும் ரொக்கப் பரிசாக தலா ரூ.100/- வழங்கப் பட்டது.

வேங்கடக்ரிஷ்ணனுக்கு ஒரு ரிஸ்ட்வாட்சினை முதுபெரும் எழுத்தாளரான திருமதி.பத்மா மணி அவர்கள் வழங்கினார்கள். அவனுடைய திறமையை மெச்சி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அவனுடைய +2 படிப்பிற்கான செலவை ஏற்றுக் கொண்டு அவனை அங்கேயே அழைத்துக் கொண்டு சென்று விட்டதால் அவனுக்கான பரிசை அவன் தாயார் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு பொருளாதாரத்தில் நலிவு அடைந்த நிலையில் உள்ள இரு மாணவர்களுக்கு சீருடையும், ஐம்பது மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப் பட்டன. ஐந்து வருடங்கள் முன்பு இரண்டு குழந்தைகளுக்கு புத்தகம் வழங்குவதோடு ஆரம்பித்த இந்த நல்ல விஷயம் இப்போது ஐம்பது குழந்தைகளுக்கு வழங்குவது வரை வந்திருக்கிறது.  இது மேலும் மேலும் வளரும் என்று நம்புகிறோம்!



  

Wednesday, June 18, 2014

பட்டிமன்ற மேடையா? பெண்ணிய மேடையா?

பட்டிமன்ற மேடையா? பெண்ணிய மேடையா?



வழக்கறிஞர் சுமதியின் மேடை பேச்சை மிகவும் விரும்பி ரசிப்பவள் நான். பட்டி மன்ற மேடை களில் தன் தரப்பு வாதத்திற்கான பாயிண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி  நச்சென்று அவர் முடிக்கும் அழகை வியப்பேன். ஆனால் கடந்த ஞாயிறன்று(15.6.2014) சன் டி.வி.யில் ஹூஸ்டனில் நடை பெற்ற 'கல்யாண மாலை' நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமான பட்டி மன்றத்தில் அவர் பேசியதை கேட்ட பொழுது அதிர்ந்து போனேன்! 'திருமண வாழ்க்கை சுவையா? சுமையா'?  என்பதில் சுமையே என்னும் தலைப்பில் பேச வந்த அவர் ஸ்டேஜ் டேகோரம்  என்பதை பற்றி கவலைப் படாமல் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு குழாயடியில்  சண்டை போடுபவர் ரேஞ்சுக்கு பேசியது கொஞ்சம்  கூட ரசிக்கும் படியாக இல்லை.  

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணிடம்  அவள் மாமியார் குளித்து விட்டு சமையல் அறைக்குள் வா என்று கூறுவது சுமையாம். "குளிக்காம வந்தா டிஸ்மிஸ் பண்ணிடுவியா?" என்பது சுமதியின் கேள்வி. இப்பொழுது எந்த மாமியார் அப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.அப்படியே கூறினாலும் என்ன தவறு? ஆசாரம் என்பது முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமானது ஒரு குடும்பம் முழுவதற்கும் உணவு தயாரிக்க வேண்டிய இடத்தில் சுகாதாரத்தை கடை பிடிக்க சொல்வது தவறா? 

திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் அவள் கணவன், "நீ என்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறாயோ இல்லையோ என் அப்பா அம்மாவை அட்ஜெஸ்ட்  செய்து கொள்" என்று கூறுவது அவருக்கு எரிகிறதாம். அதாவது ஒரு நல்ல பையன் தனக்காக கஷ்டப்பட்ட தன் பெற்றோர்களை அனுசரித்து தன் மனைவி நடந்து கொண்டால் போதும்,அதற்காக இவன் அவளை அனுசரித்து போக தயாராக இருக்கிறான். அது கூட இவருக்கு எரியும் என்றால் வேறு எது இவருக்கு குளிர்ச்சி ஊட்டும் என்று தெரியவில்லை. மேலும் நடுவர் பாக்யராஜை தனிப்பட்ட முறையில் தாக்கியதும் பட்டிமன்ற நாகரீகமாக இல்லை.

என்னதான் வாழ்க்கை முறை மாறி இருந்தாலும் பெண்கள் சந்திக்கும் வேதனைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இன்றும் கூட இருக்கின்றன. என்றாலும் பட்டிமன்ற மேடையை பெண்ணியம் பேசும் மேடையாக மாற்றுவது சரியில்லை என்று சுமதிக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம். 

ஒரு வேளை இவை எல்லாமே pre fixingஆக  கூட இருக்கலாம் (இப்பொழுதெல்லாம் பெரும்பாலான ஷோக்கள் அப்படித்தானே நடத்தப் படுகின்றன)  இருந்தாலும் உலகம் முழுவதும் ஒளி பரப்பக் கூடிய ஒரு நிகழிச்சியின் தரம் தாழ்ந்து போகலாமா?           

Monday, June 9, 2014

கும்பகோணத்தைச் சுற்றி ஒரு குறும் சுற்றுலா - II

கும்பகோணத்தைச் சுற்றி ஒரு குறும் சுற்றுலா - II


இந்த முறை நாங்கள் சென்ற கோவில்கள் எல்லாம் பிரபலமானவை என்பதால் அவைகளைப் பற்றி பெரும்பாலனோர் அறிந்திருப்பீர்கள். எனவே அவைகளின் சிறப்பு அம்சத்தைப் பற்றி மட்டும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

திருவிடைமருதூர்:

பெரும்பாலான சோழ  தேச கோவில்களையும் போல இதுவும் மற்றொரு பிரும்மாண்டமான கோவில்.  மிகப் பெரிய சுதை நந்தியும், கர்பக்ரஹத்தில் பெரிய லிங்கமும் பிரமிப்பூட்டுகின்றன. 'மூன்று முழமும் ஒரு  சுற்று,முப்பது முழமும் ஒரு சுற்று' என்னும் சொலவடை உருவாக காரணமான மூன்று கோவில்களுள் இதுவும் ஒன்று. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர்  , திருவிடைமருதூர் மகாலிங்கம்,திருச்சி தாயுமானவர் கோவிலில் இருக்கும்  மாத்ருபூதேஸ்வரர் ஆகிய மூன்றுமே பெரிய லிங்கத் திரு மேனிகள். எனவே இவற்றிற்கு சாற்ற வேண்டிய வஸ்திரம் மூன்று முழமாக இருந்தாலும் சரி முப்பது முழமாக இருந்தாலும் சரி ஒரு சுற்றுதான் வரும் என்பதால் ஏற்பட்ட வசனம்.

கோவிலில் அம்மன் சந்நிதி தவிர மூகாம்பிகைக்கென்று ஒரு தனி சந்நிதி உள்ளது. அங்கு ஸ்ரீ சக்ர மேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நந்தியை தாண்டிச் செல்லும் பொழுது பிரதான வாயிலுக்கு முன் இடது புறம் வரகுண பாண்டியனை பிடிப்பதற்காக காத்திருக்கும் ப்ரஹ்ம்மஹத்தி தம்மை பீடித்து விடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. அம்மன் சந்நிதியில் தரிசனம் தரிசனம் முடித்துக் கொண்டு அப்படியே வெளியே வந்து விடுகிறார்கள்.

மருத மரத்தை(அர்ஜுன மரம்) தல வ்ருக்ஷமாக கொண்ட மூன்று முக்கிய தலங்களுள் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சைலம்  எனப்படும்  மல்லிகார்ஜுன ஷேத்ரம் தலை மருதம் என்றும், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள திருபுடை மருதூர் கடை மருதம் என்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதால் இது இடை மருதம் என்றும் அழைக்கப் படுகிறது. சுவாதி நட்சத்திரக் காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது.

சாதாரணமாக சிவன்  கோவில்களில் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர்,சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். இந்த கோவிலுக்கோ திருவலஞ்சுழி(விநாயகர்), சுவாமி மலை(சுப்பிரமணியர்), ஆலங்குடி(தட்சிணாமூர்த்தி), பட்டீஸ்வரம் (துர்க்கை) சீர்காழி சட்டநாதர் கோவில் (பைரவர்), சிதம்பரம்(நடராஜர்) போன்ற கோவில்களே பரிவார தேவதைகளாக விளங்குவது ஒரு சிறப்பு.

பட்டீஸ்வரம்:

காமதேனுவின் மகள் பட்டியல் வணங்கப்பட்ட தேனுபுரிஸ்வரர் என்னும் சிவன் கோவிலே பிரதானமாக இருந்தாலும், பட்டீஸ்வரம் என்றாலே இங்குள்ள துர்க்கை அம்மனே பெரும்பாலநோர்க்கு நினைவில் வரும். அத்தனை சக்தி வாய்ந்த அம்மன். ராஜராஜசோழனின் மந்திரியாக இருந்த அன்பில் அநிருத்த பிரம்ம ராயரின் இஷ்ட தெய்வம். சாந்தம் தவழும் அழகிய வடிவம். இரண்டு வருடங்கள் முன்பு வரை கூட அம்மனுக்கு மடிசார் புடைவைதான் அணிவித்து வந்தார்கள். இப்போதோ சாதாரண மாம்பழ கட்டு. காலம் போகிற போக்கில் சூடிதார் அணிவிக்காமல் இருந்தால் சரி!

இந்தக் கோவிலில் சிவன் சந்நிதியிலிருந்து பார்த்தால் நேராக வீதி கண்ணில் படுகிறது. நந்தி சிவனுக்கு நேராக இல்லாமல் சற்று நகர்ந்து உள்ளது. ஒரு கோடை காலத்தில் பக்தர்கள் புடை சூழ திருஞான சம்பந்தர் பஜனை செய்தபடி வரும் அழகை காண விரும்பிய சிவா பெருமான் நந்தியை சற்று நகர்ந்து இருக்கும்படி கட்டளை இட்டாராம். அதன்படி அவரும் நகர்ந்து இருக்கிறார்.

திரு நாகேஸ்வரம்:

ராகுவிற்கான பரிகார தலம் இது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மூன்று யுகங்களுக்கான(த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம்) மூன்று சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர்.  தனி கோவிலில் குடி கொண்டிருக்கும் கிரி குஜாம்பாள் சந்நிதியில் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் ச சாமர ரமா வாணி சவ்ய தக்ஷின சேவிதாயை என்னும் நாமத்திர்கேற்ப சரஸ்வதியும்,லக்ஷ்மியும் அம்மனுக்கு இரு புறங்களிலும் எழுந்தருளி இருப்பதை தரிசிக்கலாம். அம்மனுக்கு புனுகு சட்டம் சார்த்தப் பட்டிருக்கிறது, அபிஷேகம் கிடையாது.



திருபுவனம் கோவில் நன்றாக பராமரிக்கப்படுகிறது. அதைப் போலவே கணபதி அக்ரஹாரம் விநாயகர் கோவிலும் அளவில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது.

இருபது வருடங்களுக்கு முன் அர்ச்சகர் ஒரு நாளைக்கு ஒரு முறை வந்து அர்ச்சனை செய்து விட்டு போன திங்களூர்(நவ கிரக கோவில்களில் சந்திரனுக்கு உரியது) இன்று யத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. கோவிலுக்கு முன்னால் மண்டபம் எடுத்து கட்டப்பட்டு சிறப்பாக இருப்பதை காண சந்தோஷமாக இருக்கிறது. இங்கு நவக்ரகங்களும் சூரியனை பார்த்தபடி இருக்கின்றன.

இன்றைக்கு சிறு கிராமங்களாக இருக்கும் ஊர்களில் அமைந்திருக்கும் பிருமாண்டமான கோவில்களை பார்க்கும் பொழுது ஒரு காலத்தில் அவை பெரிய ஊர்களாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அவைகளில் சில நன்றாக பராமரிக்கப் படுகின்றன. சில கோவில்களில் ஒரே ஒரு அர்ச்சகர் அம்மன் சந்நிதியை பூட்டி விட்டு சுவாமி சந்நிதிக்கும், சுவாமி சந்நிதியை பூட்டி விட்டு அம்மன் சந்நிதிக்கும் வந்து பூஜை செய்கிறார். நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றிருக்கும் பொக்கிஷங்கள் கோவில்கள். அவைகள் காப்பாற்றப் பட வேண்டுமானால் அர்ச்சகர்கள் போஷிக்கப் பட வேண்டும். அதை செய்ய வேண்டியது நம் கடமை.  





Friday, May 16, 2014

கேட்ட ஞாபகம் இல்லையோ..?

கேட்ட ஞாபகம் இல்லையோ..?




ஏப்ரல் 24 ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த நாளாம். எப்.எம்.ரேடியோ ஒன்றில் சொன்னார்கள். அதைக் கேட்டதும் பல பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.  நான் சிறுமியாக இருந்த பொழுது அதாவது 1960களில் ரேடியோ என்பது ஒரு ஆடம்பர பொருள். அப்பொழுதெல்லாம் ரேடியோ  வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் லைசென்ஸ் வாங்க வேண்டும். எங்கள் தெருவில் ராமையா மாமா என்பவர் வீட்டில்தான் ரேடியோ உண்டு. நல்ல கச்சேரிகள், கிரிகெட் மேட்ச் கமெண்ட்ரி இவைகளை அவர்கள் வீட்டு வாசல் திண்ணையில் ஸ்டூல் போட்டு அதில் ரேடியோவை வைத்து பெரிதாக ஒலிக்க வைப்பார்கள், விருப்பமுள்ளவர்கள் உட்கார்ந்து கேட்பார்கள். ஆனால் அவர்களுக்கு சினிமா பாடல்களில் விருப்பம் இல்லாததால் சினிமா பாடல்கள் கேட்க முடியாது. அந்த பாக்கியம் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் ரேடியோ வாங்கியவுடந்தான் கிட்டியது. அவர்கள் வீட்டில்தான் நேயர் விருப்பம், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிச்சித்திரம் அல்லது  நாடகம் இவைகளை கேட்போம். விடுமுறைகளில் ஊருக்குச் செல்லும் பொழுது தாத்தா வரும் வரை சினிமா பாடல்கள் அதுவும் வால்யும் குறைவாக வைத்து கேட்கலாம்.


எழுபதுகளில் நிலைமை மாறி ரேடியோ எல்லா வீடுகளிலும் ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்டது. எழுபதுகளின் துவக்கத்தில் தொலை காட்சி பெட்டி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து விட்டாலும் இப்போது அங்கு அது அடம்பர வஸ்து! மேலும் தொலை காட்சியில் ஒளி பரப்பு மாலை ஆறு மணிக்குத்தான் துவங்கும் ஆகவே ரேடியோ தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்தக் காலத்தை ரேடியோவின் பொற்காலம்  என்றே கூறலாம்.  சிறிய  ட்ரான்சிஸ்டர் ரேடியோ பாத்ரூம் உட்பட எல்லா இடங்களுக்கும் எங்களோடு வரும். இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் அந்த காலங்களில் ரேடியோவில் தண்ணீர் தெளிக்காமல் குளிக்க கூடிய அளவிற்கு குளியல் அறை அத்தனை பெரிதாக இருந்திருக்கிறது!!

வியாழக் கிழமைகளில் காலை 5:30க்கு சிலோன் ரேடியோவில் சாய் பஜன், கலை 7:20 க்கு விவித பாரதியில் 'சங்கீத் சரிதாவில் கேட்ட லதா மங்கேஷ்கர் பாடிய  சில மீரா பஜன்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. வெள்ளி கிழமைகளில் திருச்சி ரேடியோவில் காலை 8:30க்கு மங்கள வாத்தியம் என்று நாதஸ்வரம் ஒலிபரப்புவார்கள். அதைத் தவிர ரேடியோ விழா மற்றும் இசைவிழா கச்சேரிகள், சங்கீத உபன்யாசங்கள் கேட்க தடை எதுவும் கிடையாது. சினிமா பாடல்கள் மட்டும் பெரிதாக வைத்து விட முடியாது. "என்ன டீ  கடை மாதிரி அலறுகிறது .." என்று பட்டென்று ரேடியோவை நிறுத்தி விட்டு போய் விடுவார்கள் வீட்டு  பெரியவர்கள்.  நல்ல வேளை இளையராஜா வந்தார், அவருடைய காம்போசிஷன் என் அப்பாவுக்கு பிடித்தது. "இளையராஜா ஜீனியஸ்தான்" என்று அப்பா மெச்சிக் கொண்டதால்,'ஆயிரம் தாமரை மொட்டுகளே'வையும், செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலையும் பெரிதாக வைத்து ரசிக்க முடிந்தது.

இசை கச்சேரிகள் மட்டுமல்ல காரைக்குடி கம்பன் விழா பட்டிமன்றங்களும் ரசித்த விஷயங்கள். அவர்களில் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தவிர திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் திரு. ராதா கிருஷ்ணன், திரு. திருமேனி, திரு.சத்தியசீலன், குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

சினிமா பாடல்களை ஒலி பரப்பியதில் சிலோன் ரேடியோவுக்கு தனி இடம் உண்டு. பாடல்களை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை, "கலா,மாலா பாலா,லீலா... ராஜேந்திரன், மகேந்திரன், கிருபாகரன்.. என்று ரைமிங்காக அவர்கள் படிக்கும் அழகு..!  பாடல்களை மட்டும் ஒலி பரப்பாமல், அந்தப் பாடல்களை  எழுதிய கவிஞர்களின் கற்பனைத் திறன், சந்த சிறப்பு, இவைகளையும் நடு நடுவே விளக்குவார்கள். நிகழ்ச்சி முடியும் பொழுது, "ஐயோ ராஜா என்னை விட்டு போயிடீங்களா.."? என்று நீயா படத்தில் ஸ்ரீ பிரியா பேசும் டயலாக்கை ஒலி பரப்பி, உடனே, "இல்லை ஸ்ரீ பிரியா மீண்டும் அடுத்த வாரம் இதே நேரத்தில் சந்திக்கலாம்" என்று கூறிய ராஜாவின் சாதுர்யம் யாருக்குத்தான் பிடிக்காது !! ரேடியோ சிலோனின் ராஜாவும் மயில்வாகனனும் பலரைக் கவர்ந்த ரேடியோ ஜாக்கிகள்.

அப்படி நம்மூரில் பலரைக் கவர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் என்று சரோஜ் நாராயணசுவாமி, விஜயம், மற்றும் பத்மநாபன் இவர்களை குறிப்பிடலாம். "தனது அறிக்கையில் பிரதமர் திட்ட வட்டமாக அறிவித்தார்" என்று விஜயம்  செய்தி வாசிக்கும் பொழுது திட்டத்திலும், வட்டத்திலும் அவர் கொடுக்கும் அழுத்தம் இன்னும் என் நினைவு அடுக்குகளில் இருக்கிறது. வீட்டு பெரியவர்கள் ரேடியோவில் நியூஸ் கேட்கும் பொழுது கை குழந்தை கூட அழக் கூடாது என்பது அப்போது பல வீடுகளில் எழுதப்படாத சட்டம்.

ஞாயிற்று கிழமை மதியம் ஒலி பரப்பாகும் போர்ன்விட்டா க்விஸ் கான்டெஸ்ட், வெள்ளி இரவு ஒலி பரப்பான பின்னிஸ் டபுள் ஆர் க்விட்(Binny's double or quit) வினாடி வினா நிகழ்சிகளில் சரியான விடை அளித்து விட்டால் அப்பா லேசாக சிரித்தபடி தலை அசைப்பார்.

இரவு 9:30க்கு விவித பாரதியில் வண்ணச்சுடர் என்று மேடை நாடகங்களை ஒலி பரப்புவார்கள். அதில் மனோகர் உட்பட விசு, மௌலி, ஒய்.ஜி.பி., எஸ்.வி.சேகர், பூர்ணம் விஸ்வநாதன், காத்தாடி ராமமூர்த்தி, போன்ற எல்லா பிரபல நாடக குழுக்களின் நாடகங்களையும் கேட்டு ரசிப்போம். வண்ணச்சுடர் ஒலிபரப்பாகும் நேரத்தில்தான் அப்பா சாப்பிட உட்காருவார். அப்போது ஏதாவது அழுகை வசனம் கேட்டது என்றால் அப்பாவுக்கு கோபம் வரும். "சாப்பிடும் நேரத்தில் என்னமா? அதை நிறுத்துங்களேன்.." என்று சத்தம் போடுவார் அதனால் ஒலி மிகவும் குறைந்து விடும்.

1981இல் டில்லியில் ஏஷியன் கேம்ஸ் நடந்த பொழுது கலர் டி.வி இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டது. கொடைக்கானலில் சாட்டிலைட் அமைக்கப் பட்டு ஹிந்தி நிகழ்சிகளை பார்க்கலாம் என்று வகை செய்யப் பட்டது. பெரும்பாலான வீடுகளில் தொலைகாட்சிப் பெட்டி ஒரு விருந்தினரைப் போல வந்தது. சென்னை வாசிகளைப் போல நாங்களும் மதியத்தோடு ரேடியோவுக்கு விடை கொடுத்து விட்டு மாலைகளில் தொலை காட்சி முன் உட்கார்ந்து புரிகிறதோ இல்லையோ ஹம் லோக், கர் ஜமாய், ஏக் கஹானி(இது நிஜமாகவே ஒரு நல்ல சீரியல்) போன்றவற்றை ரசிக்க ஆரம்பித்தோம். 87இல் தமிழ் நிகழ்சிகளையும் பார்க்கலாம் என்ற நிலை வந்தது. இனிமேல் ரேடியோவுக்கு என்ன வேலை? அது மட்டுமில்லை தொழில் நுட்பம் வளர வளர சினிமா பாட்டோ, கச்சேரியோ, புராண சொற்பொழிவோ ரேடியோவைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை மாறி விட்டது. இன்றைக்கு கைபேசியிலேயே நாம் கேட்க விரும்பிகிறவைகளை அப்லோட் செய்து கொள்ள முடியும். திடீரென்று ரேடியோ மிர்ச்சியின் தயவால் ஏகப்பட்ட எப்.எம்.கள்.  பெயர்தான் வேறு வேறாக  இருக்கின்றதே ஒழிய செயல்பாடு எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். ஓவர் டாகிங்+கலாய்ப்பு+சினிமா=எப்.எம். என்றாலும் அவ்வப்பொழுது கேட்பேன். சில நிகழ்ச்சிகளில் கலந்தும் கொள்வேன்.


      
பின் குறிப்பு:
இது ஒரு மீள் பதிவு. 

Wednesday, April 30, 2014

கும்பகோணத்தை சுற்றி ஒரு குறும் சுற்றுலா!

கும்பகோணத்தை சுற்றி ஒரு குறும் சுற்றுலா!

சுவாமி மலைக்குச் செல வேண்டும் என்று கொஞ்ச நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது, "ஏன் சுவாமி மலை மட்டும் செல்ல வேண்டும்? பக்கத்தில் இருக்கும் வேறு சில கோவில்களுக்கும் சென்று வரலாமே" என்று என் மகன் கேட்க, இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று அப்படியே செய்ய முடிவெடுத்தோம்.

உழவன் விரைவு வண்டியில் பயணித்து காலை 5:45க்கு கும்பகோணத்தை அடைந்தோம். ஏப்ரல் மாத மத்தியல் விடியல் காலையில் மூடு பனி!!! ஆச்சர்யம்! கும்பகோணம் இப்போது சுற்றுலா மையம் ஆகி விட்டது.  நவீன வசதிகளோடு நிறைய ஹோட்டல்கள். குக்கிராமமான  சுவாமி மலையில் கூட நவீன வசதிகளோடு விடுதிகள்..!ஆன் லைனில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சுவாமி மலை என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் கோவிலுக்கு திருவேரகம் என்றும் ஒரு பெயர் உண்டு என்பதும் இது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். சுவாமி மலை என்று அறியப்பட்டாலும் உண்மையில் இது ஒரு மலை கிடையாது,சிறிய குன்றுதான் அதுவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்று என்பதால் கட்டுமலை என்று அழைக்கப்படுகிறது என்பது சிலருக்கே தெரிந்திருக்கும். இந்த கோவில் இரண்டு நிலைகளாக உள்ளது. முதல் நிலையில் மீனாட்சி அம்மன்,சுந்தரேஸ்வர சுவாமி, சண்டிகேஸ்வரர், மற்றும் நவக்ரகங்களுக்கு தனித் தனி சந்நிதிகள் உள்ளன. அங்கிருந்து வருடங்களின் பெயர்களை கொண்ட அறுபது படிகளை ஏறிச் சென்றால் முருகன் சந்நிதி. அதற்கு முன் தென் திசை நோக்கி இருக்கும்விநாயகரை வணங்கி கொள்கிறோம் (வேறு ஏதாவது கோவில்களில் இப்படி தென் திசை பார்த்திருக்கும் பிள்ளையார் உண்டா என்று தெரியவில்லை). நெடிதுயெரெந்திருக்கும் முருகன். கண் குளிர தரிசனம் செய்கிறோம்!


அங்கிருந்து திருவலஞ்சுழி சென்றடைந்தோம். திருவலஞ்சுழி என்றதும் பெரும்பாலானோர்  வெள்ளை விநாயகர் கோவில்தான் பிரதானம் என்று நினைத்துக் கொள்வோம்.  ஆனால் அடிப்படையில் இது பெரிய நாயகி உடனுறை ஜடாமுடிநாதர் என்னும் கபர்தீஸ்வரர் ஆலயமாகும்! பிருமாண்டமான கோவில்! கோவிலில் நுழைந்து கொடிமரத்தை தாண்டியதுமே வெள்ளை விநாயகர் என்னும் ஸ்வேத விநாயகர் சந்நிதி.
இந்திரன் பூஜித்த சிறிய வெண்ணிற விநாயகர்!அவருக்கு முன் பிரசித்தி பெற்ற ஒற்றைக் கல்லினால் ஆன  பலகணி(சாளரம்). அந்த பலகணி மட்டுமல்ல கோவில் முழுவதிலுமே அழகான சிற்ப வேலைப்பாடுகள்! சுவாமியை தரிசனம் செய்து விட்டு தனி கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெரிய நாயகியையும் வணங்குகிறோம். அம்மன் சந்நிதிக்கருகில் அஷ்ட புஜ துர்கைக்கென்று தனி சந்நிதி.   ராஜ ராஜ சோழன் வணங்கிய 'நிசும்ப சூதனி' இதுதான் என்றும் ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும் முன்னும்  இவளை வணங்கிச் சென்றதால்தான் போர்களில் வெற்றி பெற்றான் என்றும் அருகில் வைக்கப் பட்டிருக்கும் அறிவிப்பு பலகை சொல்கிறது. ஆனால் நிசும்ப சூதனி கோவில் தஞ்சாவூரில்தான் இருக்கிறது என்றும் இங்கிருக்கும் அஷ்டபுஜ துர்கையை ராஜ ராஜ சோழன் வணங்கினான் என்பதற்கு ஆதாரம் இல்லையென்றும் எழுத்தாளர்  பாலகுமாரன் கூறுகிறார். எப்படி இருந்தாலும் கண்களில் கருணை வழியும் துர்கையை வணங்கிக் கொள்கிறோம்.

--தொடரும்

பின் குறிப்பு:

திருவலஞ்சுழி தல புராணம்:


குடகு மலையிலிருந்து புறப்பட்ட காவிரி, திருவலஞ்சுழிக்கு முன்னால் ஒரு
த்வாரத்தில்(குழிக்குள்) சென்று மறைந்து  விட்டது. காவேரி தஞ்சையின் இறுதி வரை வரும், தாம் பயன் பெறலாம்,என்று நினைத்த சோழ தேச மக்களும், மன்னனும் ஏமாற்றமடைந்தனர். காவிரியை மீண்டும் வெளியே கொணர்வது எப்படி என்று ஆலோசித்தப்பொழுது, ஒரு அரசன் அல்லது முற்றும் துறந்த முனிவர் ஒருவரை பலியிட்டால், காவேரி மீண்டும் வெளிவந்து ஓடத் துவங்கும் என்று கூறப்பட்டது. உலக மக்களின் நன்மைக்காக ஏரகண்ட முனிவர் தன்னை பலியிட்டுக் கொள்ள காவிரி தான் மறைந்திருந்த பிலத்திலிருந்து வெளிப்பட்டு இவ்விடத்தில் வலப்புறமாக சுழித்துக்கொண்டு ஓடத் துவங்கியது. அதனாலேயே இவ்விடம் திருவலஞ்சுழி என்று வழங்கப்படலாய்ற்று. அப்பொழுதே காவேரியை தஞ்சை டெல்டா பகுதிக்கு வரவழைப்பது பிரச்சனைதான் போலிருக்கிறது!!   


   








Thursday, April 10, 2014

ராகு காலமும் எம கண்டமும்

ராகு காலமும் எம கண்டமும் 





ஒரு முறை சூரியன் முதல் சனி வரை உள்ள கிரகங்கள்  சிவ பெருமானிடம் சென்று தாங்கள் மனிதர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு நாளில் சில நாழிகைகளை(மணித்துளிகளை) தங்களுக்கு தருமாறு வேண்டினர். சிவனும் அவர்களின் நல்ல எண்ணத்தை மதித்து ஒரு நாளில் மூன்று மணி நேரங்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கினார். அந்த மூன்று மணி நேரங்களையும் சேர்ந்தர்போல ஒரே சமயத்தில் கொடுக்காமல் காலையில் ஒரு மணி நேரம். மதியம் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என்று பிரித்து வழங்கினார். அது ஹோரை என்று வழங்கப்படும்! ஒவ்வொரு நாளும் அதற்குரிய ஹோரையில் துவங்கும். உதாரணமாக திங்கள் கிழமையின் முதல் ஹோரை சந்திர ஹோரை ஆகும். ஒவ்வொரு ஹோரையிலும் சில காரியங்கள் செய்வது சிறந்த பலனைத் தரும். இதை விவரித்தால்... 

சூரிய (ஞாயிறு) ஹோரையில் அரசாங்க அலுவல்களை செய்யலாம். 
சந்திர ஹோரையில் பிரயாணங்கள்,திருமண விஷயங்கள் செய்வது நலம். 
செவ்வாய் ஹோரையில் மருந்துண்ணுவதும், சிகிச்சை மேற்கொள்ளுவதும், போருக்கு செல்லுவதும், கடன் அடைப்பதும், நிலம்,வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தொடங்குவதும் வெற்றியைத் தரும். 
புத ஹோரையில் கல்வி, வியாபாரம் போன்ற காரியங்களை ஆற்றுவது நலம் பயக்கும். 
குரு(வியாழன்) ஹோரை எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்தது. குறிப்பாக, கோவிலுக்குச் செல்லுதல், மகான்களை தரிசித்தல், பூஜை போன்ற தெய்வீக விஷயங்களுக்கு சிறப்பானது. 
சுக்ர(வெள்ளி) ஹோரை திருமணம் பேச,திருமணம் நடத்த, நிச்சயதார்த்தம் முடிக்க,ஆபரணங்கள் வாங்க, பூன,க்ரஹ பிரவேசம் சாந்தி முஹுர்த்தம் போன்ற சுப காரியங்கள் நடத்த ஏற்றது. 
சனி ஹோரையில் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை அமைப்பது/இயக்குவது எண்ணெய் ஆட்டுவது போன்ற காரியங்களைச் செய்யலாம்.  

மேற்கண்ட ஏழு கிரகங்களுக்கும் கிடைத்த வரத்தை கேள்விப்பட்ட சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தங்களுக்கும் அதைப் போல  நாளில் மூன்று மணி நேரம் வேண்டும், ஆனால் அந்த மூன்று மணி நேரத்தில் மற்ற கிரகங்களைப் போல மனிதர்களுக்கு நன்மை செய்யாமல் தீமை செய்ய பயன் படுத்துவோம் என்று எண்ணின. அவைகளின் தீய எண்ணத்தை புரிந்து கொண்ட இறைவன், "மற்ற கிரகங்கள் மனிதர்களுக்கு நன்மை செய்ய நினைத்தன, ஆனால் நீங்கள் இருவரும் கெடுதல் செய்ய விரும்புகிறீர்கள், நன்மை,தீமை இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை, ஆகவே உங்களுக்கும் ஒரு நாளில் சில மணித் துளிகளை ஒதுக்குகிறேன், ஆனால் மற்ற கிரகங்களுக்கு போல் மூன்று மணி நேரம் கிடையாது,அதில் பாதியான ஒன்றரை மணி நேரமே.." என்றார். அது முதல் தினமும் ராகுவிற்கான ஒன்றரை மணி நேரம் ரகு களம் என்றும், கேதுவிற்கான ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றும் கடைபிடிக்கப் படலாயிற்று. அந்த நேரத்தில் நல்ல செயல்கள் எதுவும் தொடங்குவது அத்தனை ஸ்லாகியமல்ல என்பது ஒரு நம்பிக்கை
என்றாலும் விருச்சிக லக்னம் மற்றும் விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கும், மகர ராசியில் ராகு இருக்க பிறந்தவர்களுக்கும் ராகு காலம் எந்த வித தீய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதும் அனுபவ ஜோதிட பாடம். மேலும் ரகு காலம், எம கண்டம் இரண்டிற்கும் இடையில் நல்ல ஹோரைகள் வந்து விடுவதும் அவற்றின் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும். இப்படி நல்ல ஹோரைகளால் நம்மை காக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் அவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் துவங்குகின்றன போலும்!