கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, February 22, 2013

viswaroopam - review

விஸ்வரூபம்!


பெரிதும் சர்ச்சைக்குள்ளான  அதனால்  அளவுக்கு  அதிகமாக  பப்ளிசிட்டி  பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்தேன்! மிகச் சமீபத்தில் நடந்த மிக முக்கியமான ஒரு சரித்தர சம்பவத்தை படமாக்க முயற்சித்திருக்கிறார் கமல்ஹாசன்! ஆனால் அதை நடு நிலையோடு அணுகாமல் அமெரிக்காவுக்கு வால் பிடித்திருப்பதால்
இந்தப் படம் ஏற்படுத்தி இருக்க வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது  மட்டுமில்லை மருத்துவம் பார்க்க வந்த பெண்ணின் மரணமும், ரசித்து ஊஞ்சல் ஆடும் இளைஞன்  சூசைட் பாம்பராகி இறக்கும் சோகமும் மனதைத் தொடவே இல்லை.

 கதக் நடனக் கலைஞர் வேடத்தில் இருக்கும் இந்திய ரா உளவாளியான விஸ்வநாத்தை
(கமலை) அவர்  மனைவியாக  வரும்  பூஜா  குமார்  சந்தேகப்பட்டு  உளவறிய  ஒரு ஆளை அனுப்புவதில் படம் தொடங்குகிறது.  ஆனால் அவர்  எதற்காக  கமல் மேல் சந்தேகம் கொள்கிறார் என்பது தெளிவாக காட்டப்படவில்லை. அதே போல கணவனிடம் பொய் சொல்லிவிட்டு தன் பாசோடு வெளியே சுற்றி விட்டு வீடு
திரும்பும் பூஜா கணவனின் குறட்டை ஒலி கேட்டு அவர் தூங்கி விட்டதாக நினைத்து  நிம்மதியாக படுத்துக்கொள்ளும்
போது  வேறு பக்கம் திரும்பி படுத்திருக்கும் கமல் தூங்காமல் உக்கிர பார்வை (பயங்கர பின்னணி இசையோடு) பார்கிறாரே  பிறகு என்ன செய்தார்?

ஆண்ட்ரியவுக்கு வேலையே இல்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள், ஆனானப்பட்ட சேகர் கபூரும் நாசரும் வீணடிக்கப்பட்டிருப்பது அவர்கள் கண்களில் படவில்லை போலிருக்கிறது.

இந்தப் படத்தில் பிரமாதமான விஷயங்கள் என்றால் முதலாவது ராகுல் போசின் நடிப்பு, இரண்டாவது செட் அமைப்பு, கமலஹாசன் பேட்டியில் சொல்லியிருக்க விட்டால் நாம் நிஜமாகவே
ஆப்கானிஸ்தானில்தான் படம் பிடித்திருக்கிறார்கள் என்று நம்பி இருப்போம். இசை
இரையாமல், உறுத்தாமல் இழைகிறது. பிறகு அந்த முதல் சண்டை காட்சி, வாவ்!

இந்தப் படத்தின் நல்ல விஷயங்கள்: 1. பூஜா குமார் பத்து வருடங்களுக்கு முன்பே ஏதோ ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம் நல்ல
வேளை நமக்கு அது தெரியாது எனவே வெல்கம் பூஜா!
2. கமல் அறிமுகமாகும் காட்சி! ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கும் நடிகர்கள் கூட காலின் கீழ் நெருப்பு பொறி பறப்பது போல அறிமுகமாகும் பொழுது பெண்மை மிளிரும் ஒரு கதா பாத்திரத்தில் அறிமுகமாகும் துணிச்சல் மற்றும் இறுதிக் காட்சி.

தவிர்த்திருக்க கூடியவை:
"என் கடவுளுக்கு நான்கு கைகள் உண்டு"
"அப்படி என்றல் அவரை எப்படி சிலுவையில் அறைவீர்கள்'?
நாங்கள் சிலுவையில் அறைய மாட்டோம், கடலில் மூழ்கடித்து விடுவோம்"
என்பது போன்ற தேவையில்லாத குசும்புகளை விட்டு விட்டால் நன்றாக இருக்கும். தளர்வான, கொடூரமான முதல் பாதி  இன்னும் கொஞ்சம் க்ரிப்போடு இருந்திருக்கலாம். தீவிர வாதத்தின் தீமையை  காட்ட வேண்டும் என்றால் ரத்தம் ஆறாக ஓட வேண்டும் என்பது கிடையாது. சட்டிலாக அதை உணர்த்தக் கற்றுக் கொண்டு விட்டால் கமல் நல்ல இயக்குனரும் ஆகி விடுவார்.