கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, April 24, 2012

அது ஒரு வேனிற் காலம்

அது ஒரு வேனிற் காலம்!

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்றல் உடனே அவர்களை எந்த சம்மர்  கோர்ஸில்  சேர்க்கலாம்  என்று ஆலோசித்து  அமல் படுத்துகிறார்கள், கூடவே  குழந்தைகளையும்  விடுமுறையை  அனுபவிக்க விடாமல்  படுத்துகிறார்கள்.  நாங்கள்  குழந்தைகளாக  இருந்த பொழுது  இதெற்கெல்லாம்  அவசியம் கிடையாது.  எல்லோருக்கும் கிராமத்தில்  தாத்தா பாட்டி இருந்தார்கள்.  அங்கு சென்று விடுவோம். ஒன்றரை மாதத்தை கிராமத்தில் சந்தோஷமாக
கழித்து விட்டு திரும்புவோம்.

மார்ச் மாதம் பிறந்த உடனேயே எங்கள் தாத்தா குழந்தைகளுக்கு எப்பொழுது பள்ளிக்கூடம் லீவு விடுகிறார்கள்? என்று கேட்டு கடிதம் எழுதி
விடுவார். அடுத்த கடிதத்தில் நாங்கள் ஊருக்குச் செல்ல நல்ல நாள் எது என்றும்
குறித்து அனுப்பி விடுவார். பரீட்சை முடிந்ததும் அந்த நாளில் நாங்கள் பெரும்பாலும்
ஒரு அம்பாசிடர் வாடகை கார் எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்புவோம்.
அந்த காரில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர்களோடு பாட்டி, பெரும்பாலும்
ஒரு மாமா மற்றும் டவுனில் வசித்து வந்த எங்கள் அத்தையும் சேர்ந்து கொள்வார்.
கால் வலிக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. கொஞ்ச நேரம் பொறுத்துக்
கொள்ள முடியாதா? என்று அம்மா அதட்டுவாள். பெரும்பாலும்  காரை  விட்டு  இறங்கும் பொழுது கால் மரத்து போய் விடும்.

சில சமயம் புகை வண்டியிலும் சென்றிருக்கிறோம். அது ஒரு பெரிய ப்ராசெஸ். திருச்சியிலிருந்து பூதலூருக்கு புகை வண்டியில்
சென்று விட்டு அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு பேருந்தில் செல்ல வேண்டும்.
பிறகு திருவையாறு அல்லது தஞ்சாவூர்  செல்லும் மற்றொரு  பேருந்தில்
பயணித்து எங்கள்  ஊரின்  மெயின்  ரோடில்  இறங்கிக்  கொள்ள  வேண்டும்.  அங்கே நாங்கள் வருவது தெரிந்திருந்தால் மாமா மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து எங்களுக்காக காத்திருப்பார். அப்படி இல்லாவிட்டால் மெயின் ரோடில் இறங்கிக் கொண்ட நாங்கள் வந்திருப்பதை அங்கிருக்கும் யார் மூலமாவது சொல்லி அனுப்பினால்
கொஞ்ச நேரத்தில் மாமா வண்டி கட்டிக் கொண்டு வருவார். அவர் வரும் வரை கும்மிருட்டில் காத்துக்கொண்டு இருப்போம். அப்படி காத்துக்கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் இருக்கும் டீ கடையிலிருந்து மினுக் மினுக் என்ற வெளிச்சமும், ரேடியோவில் 'மாலை பொழுதின் மயக்கத்திலே.. ' பாடலும் வரும். இப்பொழுது கூட அந்தப் பாடலை கேட்க நேரும் பொழுதெல்லாம் ஒரு அமானுஷ்ய உணர்வு என்னை ஆட்கொள்ளும்.

நாங்கள் ஊருக்குச் சென்றதும் வண்டியில் இருந்து இறங்கும் எங்கள் ஒவ்வருவரையும் குறட்டில் (குறடு என்பதை போர்டிகோ என்று கூறலாம்)நின்று கொண்டிருக்கும் தாத்தா  தனித்தனியாக பெயர் சொல்லி வாஞ்சையோடு வரவேற்பார்.

மறு நாள் முதல் எங்கள் கோடை விடு முறை தொடங்கும். அப்பொழுதெல்லாம்
அகிரஹாரங்களில் காலையில் பிரேக் ஃபாஸ்ட்  பெரும்பாலும் கிடையாது. ப்ரெட்? (அதெல்லாம் ஜுரம் வந்தால்தான் சாப்பிடனும்.), ஓட்ஸ் (அப்படினா..?) போன்றவைகளும் பழக்கம் கிடையாது.   குழந்தைகளுக்கு பழைய  சாதத்தைதான்  பிசைந்து போடுவார்கள்.  சமையல்  அறையில் பழையது மேடை என்றே தனியாக ஒன்று இருக்கும்.முதல் நாள் இரவு மீந்து போகும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கல் சட்டியில் வைத்து விடுவார்கள், ஒரு வேளை சாதம் மீறவில்லை என்றால்  மறு நாள் குழந்தைகளுக்கு  போடுவதர்க்காகவே  சாதம்  வெடித்து  அதில் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அடுத்த நாள் ஊறிய சாதத்தில் கெட்டி தயிர்  ஊற்றி பிசைந்து கோடை கால  சிறப்பு  ஊறுகாய்   வகைகளான  வடு மாங்காய், ஆவக்காய்,   மாங்காய்  தொக்கு  இவைகளோடு  சேர்த்து   போடும் வேலை அம்மா  வீட்டில்  மாமிகளுள்  ஒருவருக்கு,  அப்பா  வீட்டில்  கடைசி  அத்தைக்கு.  நாங்களெல்லாம் அப்பொழுது குழைந்தைகளாக இருந்தோம் இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை ஒரு வேளை சம்பாதிக்க   ஆரம்பித்திருந்தால் எங்கள் சம்பளத்தை அந்த பழையது,ஊறுகாய் சுவைக்கு அப்படியே கொடுத்திருப்போம்!

எங்கள் அம்மாவிற்கு பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டுமே ஒரே ஊரிலேயே அமைந்து விட்டதால் எங்களுக்கு இரண்டு தாத்தா  வீடுகளுமே அதே ஊராகி விட்டது. அதில் இருந்த ஒரு சௌகரியம் ஒரு தாத்தா வீட்டில் கீரை மசியல், அரிசி உப்புமா போன்ற பிடிக்காத ஐட்டம்கள் இருந்தால் மற்றொரு வீட்டிற்க்கு சென்று விடுவோம். சில சமயங்களில் இரண்டு வீடுகளிலுமே அரிசி உப்புமா செய்து எங்களுக்கு
பல்ப் கொடுப்பார்கள்.

அம்மா வீட்டில் (தெற்குத் தெரு) காலை சமையல் சீக்கிரம் ஆகி விடும். அங்கு சாப்பிட்டு விட்டு அப்பா வீட்டிற்கு (வடக்குத் தெரு) சென்றால் அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருப்பார் கள். "வா சாப்பிட உட்கார்" என்று அழைக்கும் சின்னத் தாத்தாவிடம் "அந்தாத்தில் சாப்பிட்டு விட்டேன்" என்றால் கோபம் வந்து விடும். "அங்கே சாப்பிட்டு விட்டு இங்கே எதற்கு வருகிறாய்?" என்று கோபிப்பார். அதனால் பேசாமல் சாப்பிட உட்கார்ந்து விடுவோம். அம்மாவிற்கு நாங்கள் அங்கு சாப்பிட்டிருப்போம் என்பது தெரியும். அதனால் கொஞ்சமாக பரிமாறுவார்.

ஸ்நாக்ஸ்...? முறுக்கு, பொருவிளங்கா உருண்டை, மனோகரம் போன்றவைதான். பாட்டியின் மனோகரம் டென்னிஸ் பந்து சைஸில் இருக்கும். அம்மா வீட்டில் ஆணோ, பெண்ணோ தலைக்கு இரண்டு முறுக்கு, ஒரு பொ.வி.உருண்டை கிடைத்து விடும். அப்பா வீட்டில் கொஞ்சம் பாரபட்சம் உண்டு. ஆண் பிள்ளைகளுக்கு இரண்டு முறுக்கு ஒரு பொ.வி.உருண்டை என்றால் பெண் குழந்தைகளுக்கு ஒரு முறுக்கு, ஒரு பொ.வி. உருண்டைதான். எங்கள் அத்தையின் பையன்கள் பட்டத்தை வினியோகிக்கும் பெரிய அத்தையை (அப்பாவின் அத்தை) ஏமாற்றி எங்களுக்கும் இரண்டு முறுக்கு கள் வாங்கித் தருவார்கள்.

பகல் வேளைகளில் வீட்டிற்குள் புளியங்காய், பல்லாங்குழி, தாயகட்டம்(இதில் சண்டை வராமல் இருக்காது), கேரம், பெரியவர்களுக்கும் தெரியாமல் சீட்டாட்டம், சிறிது நாட்களுக்குப் பிறகு பெரியவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அதில் ட்ரம்ப் விளையாடும் பொழுதும் சண்டை வரும்.  மாலையில் ஐ ஸ்பை, நொண்டி போன்றவை விளையாட ஊரில் இருக்கும் குழந்தைகள், விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் குழந்தைகள் என்று ஒரு பட்டாளம் களத்தில் இறங்கும். 

இரவு ஏழரைக்கு சாப்பாடு ஆகி விடும். பெரும்பாலும் ஒரு துவையல் சுட்ட அப்பளம், அல்லது வற்றல் குழம்பு, வதக்கல் கறி இதுதான் மெனு.  சில நாட்கள் இரண்டு பெரிய அடுக்குகளில் ஒன்றில் ரசம் சாதம், இன்னொன்றில் தயிர் சாதத்தை மாமி பிசைந்து கொண்டு வந்து வைக்க, பாட்டி கையில் உருட்டி போடுவார். 

அதன் பின்னர் சாயங்காலமே தண்ணீர் கொட்டி காய்ந்த முற்றத்தில் ஜமக்காளத்தை விரித்துப் படுத்தால் வானில் கொட்டிக் கிடக்கும் ஆயிரம் நட்சத்திரங்களும் நமக்குத்தானே..!

கோடைக்கால இன்னும் சில சுவாரஸ்யங்கள் அடுத்த பதிவில்.