கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 1, 2012

திருச்சேறை சரநாதப் பெருமாள்



திருச்சேறை சரநாதப் பெருமாள் 




அடுத்து நாங்கள் சென்றது திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலுக்கு.
108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று.  சார பெருமாள்,சார நாயகி(தாயார்),சார விமானம், சார புஷ்கரிணி என்னும் பெருமைகளை உடையது! இதைத் தவிர இங்கு ஐந்து தாயார்களை சேவிக்கலாம்.

தனி சந்நிதி கொண்டுள்ள சரநாயகி, உற்சவரோடு ஸ்ரீ தேவி, பூதேவி,
அகலகில்லேன் என்று பெருமாளின் திருமார்பில் உறையும் திருமகள்,அவர்
அணிந்திருக்கும் பதக்கத்தில் மஹா லக்ஷ்மி இப்படி இந்த ஒரு கோவிலில் மட்டும் தாயார் ஐந்து வடிவங்களில் எழுந்தருளி நமக்கு அருள் செய்ய காத்திருக்கிறாள்! இந்த கோவிலின் தல புராணமும் மிகச் சுவையான ஒன்று!

ஒரு முறை கங்கை, காவேரி, யமுனை, கோதாவரி போன்ற புண்ணிய
நதிகள் யாவும் பேசி, விளையடிக்கொண்டிருந்தன! அப்போழ்து அவ்வழியே வந்த முனிவர் ஒருவர் உனக்கு வணக்கம் என்று கூறிச் சென்றார். அவர்
தன்னைத்தான் வணங்கினார் என்று  கங்கையும்  காவிரியும்  தங்களுக்குள்  வாக்குவாதம் செய்து கொண்டனர். அந்த சமயத்தில் அதே முனிவர்  மீண்டும்    அவ்வழியே திரும்பி வர அவ்விரு நதிப் பெண்களும் அந்த முனிவரிடம் சென்று," நீங்கள் யாரை வணங்கினீர்கள்"? என்று வினவ அவர், "உங்கள் இருவரில் யார் உயர்ந்தவரோ அவரை வணங்கினேன்" என்று  சாமர்த்தியமாக பதில் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவ்விருவரும் ப்ருஹ்மாவிடம் சென்று தங்களுள் உயர்ந்தவர் யார் என்று கேட்க, அதற்கு பிரம்மா, "கங்கை  தேவ லோகத்தில் இருந்து வந்தது, சிவ பெருமான் தன் சிரசில் அதை சூடிக் கொன்டுள்ளார், திருமால் வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக  உயர்ந்த  பொழுது விண்ணுலகுக்கு சென்ற அவர் திருவடியை நான் ஆகாய
கங்கையால்தான் நீராட்டினேன், எனவேதான் கங்கையில் குளிப்பது சகல பாபங்களையும் போக்க வல்லது, இத்தகைய புண்ணிய தன்மைகளால் உங்கள் இருவரில் கங்கையே உயர்ந்தவள்" என்று கூறிவிட, இதனால் வருத்தம் அடைந்த காவிரி தானும் கங்கையைப் போல் புனிதத் தன்மை அடைய என்ன செய்ய வேண்டும் என்று வினவ, திருமாலை குறித்து தவம் புரிய வேண்டும் என்றார். உடனே காவேரி இங்குதான் திருமலை குறித்து தவம் இயற்றத் தொடங்கினாள் அவளது தவத்தில் மகிழ்ந்த திருமால் அவள் விரும்பும் வரத்தை கேட்க,காவிரி தானும் கங்கைக்கு ஈடான புனித தன்மையைப் பெற வேண்டும் என்று வேண்ட திருமால் அதை அருளியதோடு துலா  மாதத்தில் (ஐப்பசி   மாதத்தில்) காவிரியில் நீராடுவதால் கங்கையில் நீராடிய பலனை அடையலாம் என்று அருளியதோடு தான் ஒரு சிறு குழந்தையாக மாறி அவள் மடியில் தவழ்ந்து விளையாடினார். இன்றும் கருவறையில் சாரநாத பெருமாளுக்கு அருகே தவம் செய்யும் காவிரியின் திருவுருவச் சிலையையும் தரிசிக்கலாம். அதோடு மட்டுமல்ல காவிரியின் மடியில் குழந்தையாக பெருமாள் தவழும் அற்புத சிறிய மூர்த்தத்தை நம் கையில் கொடுத்து வணங்கச் சொல்கிறார்கள். நெக்குருக வணங்குகிறோம்! பெருமாளை மட்டுமல்ல இத்தனை விஷயங்களையும் எங்களுக்கு அழகாக விளக்கி சிறப்பாக தரிசனம் செய்துவித்த பட்டாசாரியாரையும்தான்!

தை பூசத்தன்று இங்கு தீர்த்தவாரி விசேஷம்! திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இக்கோவில் கும்பகோணம் திருவாரூர் சாலையில் திருநாரையூரிலிருந்து   3  km  தொலைவில் உள்ளது.குடந்தையிலிருந்து ஏராள பேருந்து,கார் மற்றும் ஆட்டோ வசதி உண்டு. ஒரு முறை சென்று சாரநாத பெருமாள், ஐந்து  தாயார்கள் மற்றும் காவேரி அம்மனை வழிபட்டு வாருங்கள்.