கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, December 11, 2011

mayakkam enna - review

மயக்கம் என்ன? - விமர்சனம்


தமிழ் சினிமாத் தனங்களை தைரியமாக தாண்டும் மற்றும் ஒரு செல்வராகவன் படம்.

வைல்ட் லைப் போடோக்ராபெராக ஆசைப்படும் கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) அவருடைய ஆதர்ச புகைப்பட கலைஞர் மாதேஷ்  கிரிஷ்ணச்வாமியால்  (ரவி பிரசாத்)  வஞ்சிக்கப்பட்டு விபத்துக்குள்ளாகி, குடிக்கு அடிமையாகி பாதை மாறுவதும், சகிப்பு தன்மையும், காதலும்,பெருந்தன்மையும் கொண்ட மனைவியால் தன் இலட்சியத்தை அடைவதும் பொறுமையாக செல்வராகவன் வழியில் சொல்லப்பட்டிருக்கின்றது.

தனுஷின் கலைப் பயணத்தில் ஒரு முக்கியமான  படம். படம் முழுவதும் அவரைச் சுற்றியே சுழுல்கிறது.  சும்மா சொல்லக்கூடாது அவரும் தொழில் வேட்கை, நண்பனின் தோழியை காதலியாக்கிக் கொள்ளும் போது குற்ற உணர்ச்சி, தான் ஆதர்சமாக கொண்டவரே தன்னை வஞ்சிக்கும் பொழுது கழிவிரக்கம், குடி வெறி, இறுதியில் அமைதி என்று அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி தேசிய விருதை நியாயப்படுத்துகிறார்!  ரிச்சா..?  ம்ம்ம் ...ம்ஹூம்! ஏன் எப்பொழுதும் வெறித்த பார்வையோடு இருக்கிறார் என்று புரியவில்லை, குரல் கொடுத்தவரும் உலர்ந்த குரலில் பேசுகிறார்.

முதல் காட்சியில் தனுஷும் அவருடைய நண்பனும் குடித்து விட்டு,அவ கலீஜுடா, உன் கிட்டேயும் சரி என்று சொல்லிவிட்டு என் கிட்டேயும் சரி என்று சொல்ரா. அவ வேண்டாம்ட, என்று பேசிக் கொண்டே இருக்கும் பொழுது வெளியே யாமினியின்(ரிச்சா) குரல் ஒலிக்கிறது, கண்களில் காதல் தவிப்போடு ஜன்னல் வழியே தனுஷ் பார்க்கிறார், அடுத்த காட்சி தனுஷுக்கும் ரிச்சாவுக்கும்  திருமணம்....  வழக்கமான சினிமா போல இது கனவு என்று காட்சி முடியும் என்று நினைக்கிறோம், நல்ல வேளை அப்படி இல்லை. அதே போல தான் எடுத்த புகைப் படங்களை ரவி பிரசாத் தன் பெயரில் பிரசுரித்துக் கொள்ளும் போழ்து வழக்கமான சினிமா கதா நாயகன் போல அவருடைய சட்டை காலரை பிடித்து உலுக்காமல் யதார்த்தமாக கெஞ்சும் பொழுதும் செல்வராகவன் பளிச்சிடுகிறார்.

படத்தின் குறிப்பிடத்தக்க இன்னும் இருவர் ஒளிப்பதிவாளர், மற்றும்  இசை அமைப்பாளர் ஜி.வீ.  பிரகாஷ் ! இயக்குனரோடு கை கோர்த்து அருமையாக பணியாற்றி உள்ளனர்.

நாலு டூயெட், ரெண்டு பைட், தனியாக காமெடி ட்ராக் என்றெல்லாம் இல்லாத, நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான படம்! ரசிக்கலாம் கொஞ்சம் பொறுமை வேண்டும்!