கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 14, 2011

thambattam: vasantha navarathri

thambattam: vasantha navarathri: "வசந்த நவராத்திரி தேவி உபாசகர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை நவராத்திரி. ஒரு வருடத்தில் நான்கு ..."

Wednesday, April 13, 2011

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி



தேவி உபாசகர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை நவராத்திரி.
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் அவர்களால்
கொண்டடப்பட்கின்றன. அவைகள் ஆஷாட நவராத்திரிசாரதா நவராத்திரி, பௌஷ்ய அல்லது மக நவராத்திரி,  மற்றும்  வசந்த  நவராத்திரி.


இவற்றில் ஆஷாட நவராத்திரி  என்பது  ஆடி மாத  அமாவாசைக்குப்  பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். ஆஷாட நவராத்ரியில் உபா சிக்கப்பட வேண்டிய தேவி மாதங்கி! மதுரை மீனாக்ஷி  மாதங்கியின்  வடிவே!  சாரதா  நவராத்ரியில்  சிறப்பாக  வழிபடப்படுவது  மகிஷாசுரமர்தினி.  பௌஷிய நவராத்ரி வாரஹிக்கு உரியது. ஜம்புகேஸ்வரம்  என்னும் திருவானைகோவிலில் குடி கொண்டிருக்கும் அகிலாண்டேஸ்வரி 
வாரஹியின் அம்சமே! வாரஹி வழிபாடு இரவில் செய்யப்பட வேண்டியது.


பங்குனி மாத  அமாவாசைக்குப்பிறகு  வரும்  பத்து  நாட்கள்  வசந்த  நவராத்ரி ஆகும். தென் இந்தியாவில் சாரதா நவராத்ரியும் வட இந்தியாவில் வசந்த நவராத்ரியும்  சிறப்பாக  கொண்டாடப் படுகின்றன.  சாரதா நவராத்ரியின்  முக்கிய அம்சம் பொம்மை கொலு என்றால், வசந்த நவராத்ரியின்  சிறப்பு  விரதமும்  பூஜையும்.  தெற்கே  நவராத்திரியின் கடைசி நாளான நவமி அன்று கல்விக்  கடவுளான  சரஸ்வதி  தேவியை  பூஜிக்கிறார்கள்,  வட இந்தியர்களோ வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை செய்கிறார்கள்.  

இனி வசந்த நவராத்ரியின் சிறப்பை விளக்கும் கதையைப் பார்போம்: 

கோசல நாட்டை ஆண்டு வந்த த்ருவசிந்து என்னும் மன்னன் வேட்டைக்குச் 
சென்ற போது சிங்கத்தினால் கொல்லப்படுகிறான். அவனுக்குப் பிறகு அவனுடைய இரு மனைவிகளுள் ஒருத்தியான மனோரமாவிர்க்குப் பிறந்த 
சுதர்சனனை அரசனாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்பொழுது  துருவசிந்துவின் மற்றொரு மனைவி லீலாவதி மூலம் பிறந்த மகனுக்கே 
பட்டம் சூட்டப் பட வேண்டும் என்று லீலாவதியின் தகப்பனாரான 
உஜ்ஜைனி அரசர் யுதாஜித் கலகம் செய்கிறார். அவரோடு போரிட்ட
மனோரமாவின் தந்தை  கலிங்க  தேச  அரசர்  வீரசேனர்  யுத்தத்தில்  மாண்டு போகிறார். இதை கேள்விப்பட்ட  மனோரமா  தன்  மகன்  சுதர்சனனையும் உதவிக்கு ஒரு அடிமையையும் அழைத்துக் கொண்டு கானகம் சென்று பரத்வாஜ முனிவரிடம் தஞ்சம் அடைகிறாள்.

லீலாவதியின் தகப்பனார் யுதாஜித்  அவர்  விரும்பியபடி  தன்  பேரனான  ஷத்ருஜித்திர்க்கு பட்டம் சூட்டிய  பிறகு  மனோரமாவையும்  அவள்  மகன் சுதர்சனனையும் கொல்வதற்காக காட்டிற்கு வருகிறான்.  அவர்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி பரத்வாஜரிடம் வேண்ட,
தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்களை தான் கை விட முடியாது என்று 
கூறிவிடுகிறார். அவரோடு  யுத்தம்  செய்ய  முற்பட்டவனை  அவரின்  மகத்துவத்தைக் கூறி அமைச்சர் தடுத்து விட நாடு திரும்புகிறான். 

பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு வருகை புரிந்த சில ரிஷி குமாரர்கள் 
மனோரமாவின் அடிமையை அவனுடைய பெயராகிய   க்லீபன் என்று
அழைக்கிறார்கள். இதை கேட்ட சிறுவனாகிய சுதர்சனனுக்கு க்லீபன் என்று 
கூப்பிட வராததால், 'க்லீம்' என்று அழைக்கத் தொடங்குகிறான். க்லீம் என்பது அம்பாளின் பீஜ மந்த்ரமனத்தால் அதை மீண்டும் மீண்டும் 
உச்சரித்த சுதர்சனனுக்கு அம்பிகை காட்சி அளித்ததோடு சக்தி வாய்ந்த  வில் 
மற்றும் எடுக்க எடுக்க குறையாத அம்புராத்துனியையும் அளிக்கிறாள்.

நாளடைவில் அழகிய யுவனாக வடிவெடுத்த சுதர்சனனைக் கண்ட காசி தேச 
அரண்மனை ஊழியர்கள் காசி தேச  இளவரசியான  சசிகலாவிற்கு  நடக்கவிருக்கும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள அவனுக்கு அழைப்பு
விடுக்கிறார்கள்.

அங்கு சென்ற சுதர்சனனை விரும்பி சசிகலா மாலை இடுகிறாள். அப்பொழது
அங்கு வருகை  புரிந்திருந்த  யுதாஜித்  அதற்க்கு  எதிர்ப்பு  தெரிவிக்கிறான்.  தேவியின் துணையோடு யுதாஜித்தை எதிர்க்கிறான் சுதர்சனன். சுதர்சனனுக்கு உதவி புரியும் அம்பிகையை யுதாஜித் இழிவு படுத்த கோபம்
கொண்ட தேவி அவனை சாம்பலாக்குகிறாள். பிறகு சுதர்சனனையும்  சசிகலாவையும் வாழ்த்திய அம்பிகை தன்னை வசந்த நவராத்ரியில்
முறைப்படி பூஜிக்கும்படி கட்டளை இடுகிறாள்.

சசிகலாவோடு  பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு  திரும்பிய  சுதர்சனனை  வாழ்த்தி கோசல நாட்டு அரசனாக முடி  சூட்டுகிறார்  பரத்வாஜர். பிறகு அரசனான சுதர்சன் தன் மனைவி சசிகலாவோடு  விதிவத்தாக அம்பிகையை  பூஜித்து  சகல  பாக்கியங்களும்  பெற்று  வாழ்ந்தான்.  அவன் வழி தோன்றல்களான ராம லக்ஷ்மனர்களும் வசந்த   நவராத்ரியில் அம்பிகையை  பூசித்திருக்கிரர்கள்.  

வசந்த நவராத்திரியில்தான் ராம நவமியும் வரும். அன்று விசிறி, பலாச்சுளை, பானகம், நீர்மோர் இவை விநியோகிப்பது சிறப்பு.

*இந்த வருடம் ஏப்ரல் 3 தொடங்கிய வசந்த நவராத்திரி ஏப்ரல் 12 ராம 
நவமியோடு முடிந்தது.  இதைப் படிக்கும் எல்லோருக்கும் எல்லாம் 
வல்ல அம்பிகையின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்!

யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:      

*இது 2011இல் எழுதப்பட்டது. ஹேவிளம்பி வருடமான இந்த வருடம்(2018) 18.3.2018 தொடங்கி, 26.3.2018 அன்று முடிகிறது.