கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 13, 2011

yuthum sei - review


ஒரு நகரில்  திடீர் திடீரென காணாமல்  போகும்  இளம்  பெண்கள்  ஒரு புறம்,  பொது மக்கள் நடமாடும் இடங்களில், குறிப்பாக  காவல்  துறையை  சேர்ந்தவர்கள்  கண்ணில்  படும்  படியாக  அட்டைப்    பெட்டியில்  வைக்கப்படும்  துண்டிக்கப்பட்ட இரு கரங்கள் இன்னொரு புறம், இந்த இரண்டு வகையான குற்றங்களுக்கும் என்ன தொடர்பு,  பின்னணி என்ன என்பதை மர்மமான முறையில் காணாமல் போன தன்  தங்கை  கேசை  சரியாக விசாரிக்காமல் மூடிவிட்ட குற்றப்  பிரிவின் மேல்  கோபமாக  இருக்கும் சி பி சி ஐ டி அதிகாரி சேரன் துப்பு துலக்கும் கதை.

முதலில் இயக்குனர் மிஷ்கினுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துவிட வேண்டும். ஹீரோயிசம் இல்லாமல், டூயெட் இல்லாமல், தனி காமெடி ட்ராக் இல்லாமல் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் முதன் முறையாக கதா நாயகியே இல்லாமல் ஒரு படம் எடுத்திருப்பதோடு கிளைமாக்ஸில் கதா நாயகன் விலகி நிற்க துணை கதா பத்திரங்களை   முக்கிய  பங்கு  வகிக்க  வைத்த துணிச்சலுக்காக! 

ஹீரோயின் வேண்டாம்  என  முடிவு  செய்ய  முடிந்த  மிஷ்கினால்  ஐடெம்  டான்ஸ் வேண்டாம் என்று முடிவு செய்ய முடியாததற்கு காரணம் வியாபார நிர்பந்தமா? 

ஆக்க்ஷன் ஹீரோவாக சேரன்..! தங்கை காணாமல் போனதால் சோகமாக இருக்கட்டும்.. ஆனால் தான் கண்டு பிடித்தவைகளை மேல் அதிகாரியிடம் தெரிவிக்கும் போது ஏன் குற்ற உணர்ச்சி உள்ளவர் போல தலை குனிந்து கொண்டு பேச வேண்டும்?

இடை   வேளை வரை படம் மெதுவாகத்தான் நகர்கிறது. அடுத்த  பாதியில்  Y.G. மகேந்திரனும் அவர்  மனைவியாக  வரும்  லக்ஷ்மியும்  படத்தை  தங்கள்  தோள்களில் தாங்கிச் செல்கிறார்கள். லக்ஷ்மி ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம்  நாடகத்தனமாக  நடித்தாலும் போகப் போக சுதாரித்து விட்டார். மகேந்திரன்..! வாவ்!.. வசனமே பேசாமல் பாடி லாங்குவேஜிலும் முக பாவங்களிலும்  பின்னி எடுத்து விட்டார்! ஒரு  நல்ல  நடிகரை  வெறும்  காமெடியனாகவே  இத்தனை நாட்கள் வீணடித்து விட்டோமோ? 

நடிப்பில் குறிப்பிடத்தக்க இருவர் கிட்டப்பாவாக வருபவரும், சேரனின்  மேல் அதிகாரியாக வருபவரும்..முதலில் சேரனிடம் இறங்கி வந்து கேசை ஒப்படைக்கும் போதும் கடைசியில் சேரனுக்கு உதவ மறுக்கும் போதும் சிறப்பாக செய்திருக்கிறார்!       

கொட்டும் மழையில் ஒரு ஆட்டோ நின்றிருக்க குடை  பிடித்துக்கொண்டு  வரும் பெண்ணை ஏரியல் வியூவில் காண்பிக்கும்   முதல் காட்சி முதல் இறுதி வரை ஓளி ஒகே,  ஒலி... ?திகிலை கூட்ட இன்னும்  கொஞ்சம்  முயன்றிருக்கலாம்!           

ஆடோப்சி செய்யும் டாக்டராக வரும் ஜெயப்ரகாஷ் மீது அறிமுக காட்சியிலேயே சந்தேகம் வந்து விடுகிறது. 

குண்டடி பட்டு விழுந்து கிடக்கும் ஜெயப்ரகாஷ் மூச்சு விட திணறியபடியே நடந்தவைகளை விவரிப்பது, கடத்தும்  எல்லா  பெண்களையும்  வைத்து  லைவ்  ஷோ  நடத்தும்  வில்லன்  கோஷ்டி  சேரனின்  சகோதரியை  மட்டும்  விட்டு வைத்திருப்பது, சேரனை தாக்க வரும் அடியாட்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து அடி வாங்கி கொள்வது போன்ற மாமூல் சினிமாத்தனங்களை தவிர்த்திருக்கலாம்.   

இட்லி, வடை, பொங்கல் என்றே சாப்பிட்டு  பழகியவருக்கு  திடீரென்று  சாண்ட்விச், பாஸ்தா என்றெல்லாம் கொடுத்தால் சாப்பிட்ட  நிறைவு  இல்லாமல் தவிப்பார். அதைப்போல ஒரு மாதிரி  மசாலா  படங்களையே  பார்த்து  பழகிவிட்ட  சராசரி ரசிகனுக்கு இந்த படம் ஒரு புது அனுபவமாக இருக்கும்.