கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, July 31, 2011

கசக்காத வேப்பிலை! மத்தூர் மகிஷாசுரமர்தினி



கசக்காத வேப்பிலை!  மத்தூர் மகிஷாசுரமர்தினி 



 
சென்னையிலிருந்து திருத்தணி வழியாக திருப்திக்கு செல்லும் வழியில் 
திருத்தணி தாண்டி   வரும்  ஒரு  சிறிய  கிராமம்  மத்தூர்.  பிரதான  சாலையிலிருந்து  இடது புறம் திரும்பி    ரயில்வே  லைனை  தாண்டி 
உடனே  வந்து  விடுகிறது  மஹிஷாசுரமர்தினி   கோவில்.

சிறிய கோவில். அலங்கார வளவைத் தாண்டி உள்ளே நுழைந்தால் 
இடது புறம் அர்ச்சனை  பொருள்களும்  பிரசாதங்களும்  விற்கும்  இரு  சிறிய கடைகள். வலது புறம் பெரிய அரச   மரத்தின்  கீழ் விநாயகர் சந்நிதி. அதைத்தாண்டி   நான்கு  படிகள்  ஏறினால்   ஒரு  பெரிய  மண்டபம் அதன் முடிவில் அம்பாள் சந்நிதி. 

இப்போது கோவில் இருக்கும் இடம் முன்பொரு  காலத்தில் மேடாக  விளங்கி இருக்கிறது. இங்கு வரும் சிலர் உணர்வு மேலீட்டு மயங்கி
விழ இங்கு   ஏதோ தெய்வீக அருள் இருக்கிறது என்று கருதிய கிராமத்தினர் இந்த இடத்தை 'சக்திமேடு'  என்று  அழைத்து  வந்தனர். 
1954  ம்  வருடம்  இரண்டாவது  இருப்பு பாதை போடும்  பணிக்காக  இங்கு  தோண்டிய  பொழுது 'டங் டங்'  என்று  ஒலி  எழும்ப  மேலும்  தோண்டி  அம்மனின்  திரு  உருவச்  சிலையை  அப்படியே  முழுவதுமாக  எடுத்து  அங்கேயே பிரதிஷ்டை செய்து   வழிபட  தொடங்கி  இருக்கிறார்கள்.  மெல்ல மெல்ல அம்மனின் மகத்துவம் பரவ இப்பொழுது தினசரி அன்னதானம் நடைபெறும் அளவிற்கு கோவில் விரிவடைந்துள்ளது.          

எட்டு கரங்களோடு காலடியில் மகிஷனை வதைத்தபடி ஆனால்
அதே சமயத்தில் கருணையும்  சௌந்தர்யமும்   வழியும்  திரு
முகத்தினளாய்  கிட்டத்தட்ட  ஐந்தரை  அடி  உயர  திரு  உருவம்.  மேல் இரண்டு கரங்களில் சங்கு,  சக்கரம்,  அடுத்த  இரு  கரங்கள்  மகிஷன் உடலில் பதிந்திருக்கும் சூலத்தை  பற்றியிருக்க   அடுத்த
இரு கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, கீழ் இரு கரங்களில்  கத்தியும்,  வாளும்  தாங்கி, "பார் மகிஷனை  அழித்து விட்டேன், உனக்கு வேறு  என்ன வேண்டும்?  என்று  கேட்பது  போல  எழுந்தருளி  இருக்கும் அம்பிகையை காணக் காண  நம்  மனதில்  படரும்  சாந்தியை அனுபவித்தே உணர  வேண்டும்.  தரிசனம்  முடிந்து  வெளியே  வந்ததும் அந்தக் கோவிலின் ஸ்தல விருக்ஷமான வேப்ப மரத்தின் வேப்பிலையை சிறப்பு பிரசாதமாக கொடுத்து சாப்பிடச் சொல்கிறார்கள்....  என்ன அதிசயம்! வேப்பிலையில் சிறிது   கூட  கசப்பு  இல்லை..!  மத்துரின்  மகத்துவம் இது என்கிறார்கள். அது மட்டுமா   அதிசயம்?  அன்னையை  வழிபட வழிபட நம் கர்ம  வினைப்பயன்கள்  என்னும்  கசப்பே  மாறி விடுகிறதே..!   அம்பிகையை துதித்து   அருள் பெறுவோம்!    
     
குறிப்பு: அம்மனுக்கு உகந்த ஆடி  மாதத்தில்  அம்மனைப்  பற்றி  எழுத  வேண்டும் என்றெல்லாம் எண்ணவே இல்லை, ஆனாலும் மத்தூர்   மகிஷாசுரமர்திநியைப்பற்றி எழுத நேர்ந்தது அவள் அருளே! அவள் நிகழ்த்திய அற்புதமே!      
        
         
     

No comments:

Post a Comment