Sunday, August 20, 2017

வரமா? சாபமா?

வரமா? சாபமா?

என்னுடைய 'நாள்  நல்ல நாள்' என்னும் பதிவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது விடுமுறை அளிப்பது என்பதை பற்றி நகைச்சுவையாக எழுதியிருந்தேன். ஆனால் சமீபத்திய குமுதம் சிநேகிதி இதழில் இதைப் பற்றிய செய்தி ஒன்றை படித்த பொழுது அதே விஷயத்தை கொஞ்சம் சீரியசாக யோசிக்கலாமோ என்று தோன்றியது. மேற்கண்ட செய்தியை மேலெழுந்தவாரியாக பார்த்தால் பெண்களுக்கு மிகவும் உதவும் ஒரு திட்டமாகத்தான் தோன்றும். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால்...?

மேலும் இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. பள்ளியில் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆசிரியைக்கும் மாதம் மூன்று நாட்கள் விடுமுறை என்பது எவ்வளவு பெரிய சிக்கல்? அன்றைக்கு தேர்வு இருந்தால் அதிலிருந்தும் விலக்கு கோருவார்களா ?  தவிர பெண்களின் அந்த வலியையும், வேதனையையும் உணர முடியாத விடலை பருவ ஆண்கள், "இவர்களுக்கு வேறு வேலை கிடையாது," என்றோ, "உங்களுக்கு என்ன மாதம் மூன்று நாள் ஜாலியாக லீவு போட்டு விடுவீர்கள்" என்றோ கேலிதான் பேசுவார்கள்.  

மாத விலக்கின் பொழுது எல்லா பெண்களுக்கும் வயிற்று வலி வரும் என்று கூறி விட முடியாது. அப்படியே வந்தாலும் அது இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நீடிக்காது. அப்பொழுது, சூடாக ஏதாவது குடித்து விட்டு,கொஞ்சம் தூங்கினால் சரியாகி விடும். எனவே பள்ளிகளில், ரிட்டயரிங் ரூம் ஒன்று கட்டி, வயிற்று வலியால் அவதிப் படும் பெண்களை ஓய்வெடுக்கச் சொல்லலாம். வேண்டுமென்றால் வலி நிவாரணி மருந்துகளை தரலாம். இன்னும் நிஜமான அக்கறை இருந்தால் யோகா பயிற்சிகள் கொடுத்து வயிற்று வலியை சமாளிக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்க வேண்டுமே ஒழிய, விடுமுறை அளிப்பது பயன் அளிக்காது. 

என்னுடைய இரண்டாவது அக்கா கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். அவர் வயதுக்கு வந்த புதிதில் ஒவ்வொரு மாத விலக்கின் பொழுதும் பள்ளி செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டாராம். ஒரு முறை ஊரிலிருந்த வந்திருந்த எங்கள் பெரிய மாமா,(அவருக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு) என் அக்காவுக்கு கவுன்சிலிங் கொடுத்து பள்ளி செல்ல வைத்தாராம். அதுதான் முறையான செயல். 

அலுவலகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு பணி புரியும் பெண்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டால் அவர்கள் செயல் திறன் குறைவாக மதிப்பிடப்படாதா? கட்டிட வேலை, வயல் வேலை, ஏன் திரைப்பட துறையில் கூட ஆண்களுக்கு வழங்கப் படும் சம்பளம் பெண்களுக்கு கிடையாது. காரணம், ஆண்கள் செய்யும் அளவிற்கு, பெண்களால் வேலை செய்ய முடியாது என்பதுதான். மாதம் மூன்று நாள் விடுமுறை என்பதை ஒப்புக் கொண்டால், எல்லா துறைகளிலும் ஆண்கள் அளவு பெண்கள் செயலாற்றுவதில்லை என்று குறிப்பிட்டு, பெண்களுக்கு சம்பளத்தை குறைத்தால் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியுமா?

பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது இப்போது மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. காடு,கழனிகளில் வேலை செய்யும் பெண்களுக்கும், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் இந்த தொந்திரவுகள் கிடையாதா? இந்த திட்டத்தை வரவேற்பவர்கள் அவர்கள்  வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கத் தயாரா?

பெண்கள் பணியாற்ற மிகவும் கடினமான துறைகளான ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, திரை உலகில் தொழில் நுட்ப பிரிவுகள் ஆகி இவற்றில் பெண்கள் புகுந்து, சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் சிறகுகளை வெட்டும் முயற்சியாகத்தான் இது எனக்குப் படுகிறது. 

Thursday, August 17, 2017

நாள் நல்ல நாள்

நாள் நல்ல நாள் 


"ஹாய் ரம்ஸ் எப்படி இருக்க?" என்று கேட்டபடியே வீட்டுக்குள் 
சதீஷ் நுழைந்த பொழுதே ரமாவிற்கு கணவன் உற்சாக மூடில் இருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. 

"என்ன ஒரே குஷி? ஆபிஸில் என்ன விசேஷம்?"

"அப்படி கேளு.. என் டீமில் இருக்கிற வித்யா இன்னிக்கு செமத்தியா என்கிட்ட மாட்டிக்கிட்டா.. வெச்சேன் அவளுக்கு சரியான ஆப்பு.."

"என்ன ஆச்சு?"

"இன்னிக்கு லீவு கேட்டா, முடியாதுனு சொல்லிட்டேன்."

"இது ஒரு பெரிய விஷயமா?"

"கண்டிப்பா.. அவ லீவு கேட்டதுக்கு சொன்ன காரணம்தான் முக்கியம்."

"அப்படி என்ன காரணம்? குழந்தைக்கு உடம்பு சரியில்ல.."

"அப்படியெல்லாம் சொல்லியிருந்தா கொடுத்திருப்பேனே.. ஐ  காட் மை சம்ஸ்(பீரியட்ஸ்) னு சொன்னா.. யார் கிட்ட? எங்கிட்ட..?
என்ன மேடம், உங்களோடது டுவெண்ட்டி செவென் டே சைக்கிள், பன்னிரண்டு நாள்தான் ஆகிறது.. அதுக்குள்ள எப்படினு கேட்டேன், பதிலே இல்ல, மரியாதையா ஆஃபீஸுக்கு வந்துட்டா.."

"இந்த விவரம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"

"ஏன் தெரியாம? ஆபிஸில் வேலை பார்க்கும் எல்லோருடைய பீரியட்ஸ் டைமும் பிங்கர் டிப்பில் வெச்சிருக்கேன். தீபிகாவுக்கு தர்ட்டி டே சைக்கிள், அடுத்த வாரம் ட்யூ, சாக்ஷாவுக்குதான் கொஞ்சம் இரெகுலர், ப்ரியா..."

சதீஷ் அடுக்கிக் கொண்டே போக, "வெய்ட்! வெய்ட்! என்று இடை மறித்த ரமா  என்னோட சைக்கிள் தெரியுமா?" என்று கேட்க.

கொஞ்சம் திடுக்கிட்ட சதீஷ், "அது... உனக்கு ட்வெண்ட்டி செவென் டே சைக்கிள் தானே..?" என்க,

"ட்வெண்ட்டி செவென் டே சைக்கிள் தானே..?..தட் மீன்ஸ் யூ ஆர் நாட் ஷுயர்.. எனக்கு எப்போ டியூ? சொல்லு பார்க்கலாம்.."

"வந்து.. இப்படி திடீர்னு கேட்டா எப்படி சொல்றது..?" சதீஷ் சமாளிக்க முயற்சி செய்தான்.

"வித்யா என்ன முன்னாலேயே சொல்லி வெச்சுட்டு லீவ் கேட்டாளா? ஊர்ல இருக்கிறவ டேட் எல்லாம் தெரியறது, பெண்டாட்டி பத்தி தெரியல..."

ரமா விருட்டென்று எழுந்து உள்ளே சென்று கதவை சாற்றிக் கொள்ள.. "உனக்கு தேவையடா இந்த பெருமை?" என்று சோபாவில் சரிந்தான். 

வேறொன்றுமில்லை பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிருந்தா காரத் கூறியதை கேட்டதும், என் கற்பனை பறவை சிறகை விரித்து விட்டது. 

Sunday, August 13, 2017

ஆடி அவஸ்தைகள்!

ஆடி அவஸ்தைகள்!
"ஆடி மாதம் வந்து விட்டாலே தொல்லை தாங்க முடியவில்லை..." என்று அலுத்துக் கொண்டார் ஒரு நண்பர். "ஏன்? என்னாச்சு?" என்றேன். 

பின்னே என்ன அவரவர் இஷ்டத்திற்கு சேல், சேல் என்று கூவத் தொடங்கி விடுகிறார்கள். நாம்தானே கஷ்டப் பட வேண்டியிருக்கு..?" என்றார். 

அவர் கஷ்டத்திற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது, எனக்கு வேறு வித கஷ்டம்.  

என்னது நான் சொல்வது காதில் விழவில்லையா? இன்னும் கொஞ்சம் சத்தமாக பேச வேண்டுமா? 

ஓ.. லவுட் ஸ்பீக்கர் அலறுகிறதா? அதை மீறி கத்த வேண்டுமா? 
இதுதான், நான் சொல்ல நினைத்ததும். இந்த லவுட் ஸ்பீக்கர் தொல்லை...

அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறேன் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை கூழ் ஊற்றுகிறார்கள் என்றால் வியாழக் கிழமை முதலே லவுட் ஸ்பீக்கரில் பாட்டு அலறத் தொடங்கி விடும். 

இந்த பாடல்களுக்கு இசை அமைத்தவர்களோடு கொஞ்சம் பேச முடிந்தால் நன்றாக இருக்கும். 

"சின்னஞ் சிறு பெண் போலே..." போல  கம்போஸ் செய்ய வேண்டாம், குறைந்த பட்சம் எல்.ஆர்.ஈஸ்வரியின்,"தாயே கருமாரி.." போலவாவது இருக்க வேண்டாமா?

"துர்கா, சாமுண்டி.. " என்று முதலில் ஒரு பெண் அலறுகிறார், உடனே பின்னணி இசை ஒலிக்கிறது. எப்படிப்பட்ட பின்னணி தெரியுமா? எழுபதுகளில் வந்த படங்களில் கதாநாயகியை வில்லன் கடத்தி கொண்டு செல்வான், அவனைத் துரதியப்படி கதாநாயகன் ஒரு காரில் வரும் பொழுது பின்னணியில் ஒரு இசை ஒலிக்குமே, அதைப் போன்ற ஓசை. இதைக் கேட்டால் பக்தி வரும் என்ற அந்த இசை அமைப்பாளரின் நம்பிக்கை வியக்க வைக்கிறது. 

இவர்களுக்கு இத்தனை சத்தம் போடவும், தன் பக்தியை மற்றவர்கள் மீது திணிக்கவும் யார் உரிமை கொடுத்தார்கள்? மார்கழி மாதத்தில் அதிகாலையில் திருப்பாவை,திருவெம்பாவை பாடல்களை ஒலி பரப்புவது தொந்தரவு என்று அவற்றை ஒலி பரப்பக் கூடாது என்று தடை செய்தார்களே, குடியிருப்பு பகுதிகளில் மட்டுமல்லாது அலுவலகங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளிலும் கூட நாள் முழுவதும் இத்தனை இரைச்சலாக பாடல்கள் போடுவது அங்கு பணி ஆற்றுபவர்களுக்கு எத்தனை பெரிய அசௌகரியம்? இதைப்பற்றி  ஏன் யாரும் ஒன்றும் சொல்வதில்லை? 

இப்படிப்பட்ட கோவில் உற்சவங்களில் இன்னொரு தமாஷ் அவர்கள் ஓலி பெருக்கியை கையாளும் விதம். மைக் என்னும் ஆங்கில வார்த்தையை ஓலி பெருக்கி என்று அழகாக, பொருத்தமாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். நம்மால் ஒரு கூட்டம் முழுமைக்கும் கேட்கும்படி கத்த முடியாது என்பதற்காகத்தான் ஒலி அளவை பெருக்கிக் காட்டும் மைக்கை பயன் படுத்துகிறோம். ஆனால் நம்மவர்களோ ஒலி பெருக்கியில் உச்ச பட்ச டெசிபலில் அலறுவார்கள் . 

விவேக் நகைச்சுவையாக சொன்னார், நான் எனக்கு தெரிந்த விதத்தில் கூறியிருக்கிறேன். ஊதுகிற சங்கை ஊதுவோம், விடியும் போது விடியட்டும் 

Saturday, August 5, 2017

சில செய்திகள், சில எண்ணங்கள்

சில செய்திகள், சில எண்ணங்கள் 


வரதக்ஷனை கேட்டு தன்னை கொடுமை படுத்தினார்கள் என்று ஒரு பெண் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட கணவன்,மற்றும் அவன் வீட்டாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்று சட்டம் இயற்றப் பட்ட பொழுது, சோ மட்டுமே அதை கண்டித்தார்.
"இதனால் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு பெண் மாமனார், மாமியாரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புகார் கொடுத்தால் அப்பாவியான அவள் கணவனும், அவன் பெற்றோரும் தண்டிக்கப் படக்கூடும்" என்றார். ஆனால் அப்படி பெரும்பாலும் நடக்காது. 


வரதக்ஷனை கொடுமைக்காக பல பெண்களின் புகுந்த வீடுகளில் ஸ்டவ்கள் வெடித்ததால்தான் அப்படி ஒரு சட்டம் இயற்றப் பட்டது. நம் பாரத நாரிகள் கணவனோ, மாமியாரோ அவளை கொளுத்தினால் கூட, இறக்கும் தருவாயில் அவளிடம் வாக்குமூலம் வாங்க காத்திருக்கும் போலீசிடம், "என் கணவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது ஒரு விபத்துதான்' என்று கூறி ராமன்களை(??)மன்னிக்கும் சீதைகளாக இருந்ததால், குற்றவாளிகள் என்று நன்றாக தெரிந்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது. அதற்காகத்தான் வரதக்ஷனை கொடுமைகளில் சம்பந்தப் பட்டவர்களை விசாரணை இல்லாமல் கைது செய்யலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அது மீண்டும் மாற்றப்பட்டு விட்டது.


மனிதர்களுக்கு காதல் உணர்வை தூண்டுவது மூளையில் சுரக்கும் டோபோமைன் என்னும் ஹார்மோனம். காதல் உணர்வு கம்மியாக இருப்பவர்களுக்கு இந்த டோபோமைனை ஊசி மூலம் செலுத்தினால் காதல் உணர்வு அதிகரிக்குமாம். நம் நாட்டை பொறுத்த வரை டோபோமைன் சுரக்காமல் இருக்க மருந்து கண்டு பிடிக்கலாம். 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை விசாரித்த லட்சுமி ராமகிருஷ்ணனிடம் அந்தப் பெண்,"பிளஸ் டூ படிச்சேன்,லவ் பண்ணினேன்" என்று கூற,லட்சுமி ராமகிருஷ்ணன்,"லவ் பண்ணியது இருக்கட்டும், வேற என்ன உருப்படியா பண்ணின?" என்றார். அதைப் போல நம் ஊர் இளைஞர், மற்றும் இளம்பெண்களை இந்த காதல் படுத்தும் பாடு இருக்கிறதே..! பாருங்கள் வாரா வாரம் ஓட்டுக்களை குவித்த ஓவியா  பிக் பாஸிலிருந்து வெளியேற காதல்தானே காரணம்!(அட சட்! பி.பி.யை தவிர்க்க முடியவில்லையே..!)


அதே போல தவிர்க்க முடியாத வேறு சில விஷயங்கள்  ஜி.எஸ்.டி., நீட் தேர்வு. ஜி.எஸ்.டி. பற்றி பேச எனக்கு ஞானம் பத்தாது. நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தினசரி தொலைக்காட்சியில் கதறுகிறவர்கள் எல்லோரும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டம் என்று ஏதோ சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் அதிகமாக கற்பிக்கப்படுவது போலவும், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தில் ஒன்றுமே கற்பிக்கப் படுவதில்லை போலவும் பேசுகிறர்கள். உண்மையில் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., ஸ்டேட் போர்ட் எல்லாமே ஒரே பாட திட்டம்தான், கற்பிக்கப்படும் முறைதான் வேறு. முதல் இரண்டு போர்டுகளின் கல்வி முறை  ஒரு நிலத்தை ஆழ உழுவதற்கு சமம் என்றால், ஸ்டேட் போர்ட் கல்வி முறை அதே நிலத்தை அகல உழுவதற்கு சமம்.

ஸ்டேட் போர்டில் கிராம புறத்து மாணவர்கள் கல்வி கற்க எளிதாக இருக்க வேண்டும் என்று சொல்லி,ஒரு புறம் பாடத்திட்டத்தை நீர்த்து போக செய்து விட்டு, மறுபுறம் மதிப்பெண்களை அள்ளிப் போட்டு வாங்கும் மார்க்குகளுக்கு மரியாதை இல்லாமல் செய்து விட்டார்கள். வட மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் நாட்டில் படித்து ஒரு மாணவன் 90 சதவிகிதம் பெற்றால் அதிலிருந்து 10மார்க்குகள் குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள். அதற்காகத்தான் ஒரு பொது தேர்வு நடத்தி அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது. அதே முறையை மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கும் கடை பிடிப்பதில் என்ன தவறு? இவர்கள் பாட முறை எதையும் மாற்ற வேண்டாம். ஸ்டேட் போர்ட் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் செய்தால் போதும். ஒன்று, புத்தகத்தில் இருக்கும் அதே கேள்வியை நம்பரைக் கூட மாற்றாமல் கேட்பதை நிறுத்த வேண்டும். இரண்டாவது மதிப்பெண்களை அள்ளிப் போடுவதை குறைக்க வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே தரம் தன்னால் உயர்ந்து விடும். 

Tuesday, August 1, 2017

விக்ரம் வேதா - (விமர்சனம்)

விக்ரம் வேதா 
(விமர்சனம்) போலீசுக்கு தண்ணி காட்டும் நிழலுலக தாதா வேதாவை(விஜய் சேதுபதி) பிடிக்க அமைக்கப்படும் தனிப்படையில் ஒருவரான விக்ரம்(மாதவன்), அவரின் கூட்டாளியும், நண்பனுமான பிரேம் ஒரு ஆபரேஷனில் இறந்து விட, பிரேமை கொன்றது யார்? என்று அறிய முற்படும் பொழுது பல முடிச்சுகள் அவிழ்கின்றன. இறுதியில் தன் நண்பனை கொன்றவனை கண்டு பிடித்து பழி தீர்த்தாரா? என்பதே விக்ரம் வேதா. புஷ்கரின் காயத்ரியின் மூன்றாவது படம். 

நேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரி வேடத்தில் சிக்கென்று பொருந்துகிறார் மாதவன். அவருடைய மனைவியாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நல்ல தேர்வு. ரொமான்ஸிலும் சரி,கணவன் யாரை வேட்டையாட துடிக்கிறானோ அவனுக்கே வக்கீலாக பணியாற்ற வேண்டியதால் ஏற்படும் ஊடலிலும் சரி தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கிறார்.

இதுவரை திரைப் படங்களில் அங்கும் இங்கும் மட்டும் தலை காட்டிய பிரேமுக்கு மாதவனுக்கு இணையான ரோல். அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

வழக்கமான தேர்ந்த நடிப்பு விஜய் சேதுபதியினுடையது. தன்  தம்பியைப் பற்றி மாதவனிடம் துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணீரை அடக்கியபடி பேசும் பொழுது, தன்னால் நெகிழ்ச்சியாகவும் நடிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்.

அவருடைய தம்பியாக வரும் தம்பியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது. தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் கலக்கல். அதுவும் அந்த ரெஸ்டாரெண்ட் காட்சியில்,"ஆங்.." என்னும் ஒரே வார்த்தையை விதம் விதமாக சொல்லும் பொழுது ரசிக்க வைக்கிறார். 

மாதவனின் குழுவில் வரும் சந்தானம் என்னும் கதாபாத்திரம் அதீத பயம், அதீத அடக்கமாக வரும்பொழுதே பின்னால் மாறுமோ என்று சந்தேகம் வருகிறது.

படத்திற்கு பெரிய பலம் சாம் சி.எஸ்ஸின் இசை. 'டசக்கு டசக்கு..' பாடல் ஜனரஞ்சகம் என்றால் யாஞ்சி..' பாடல் இனிமை. 

தாதாக்களை நியாயப்படுத்துதல், போலீஸ் ஒழுங்கில்லை என்று காட்டுவது, அண்ணன் தம்பி செண்டிமெண்ட், காதலா? கடமையா? என்ற போராட்டம், பாரில் குத்துப்பாட்டு, நிறைய வயலென்ஸ் என்ற தமிழ் சினிமாவின் அம்சங்கள் அத்தனையும் இருந்தாலும் தொய்யாத திரைக்கதை + வித்தியாசமான ட்ரீட்மெண்ட் படத்தை ரசிக்க வைக்கிறது.   

Sunday, July 23, 2017

பெரம்பூர் என்னும் பிரம்மபுரி

பெரம்பூர் என்னும் பிரம்மபுரி


மாயவரத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் செல்லும் மார்கத்தில் உள்ளது. பெரம்பூர் என்னும் சிற்றூர். குத்தாலம் தாலுகா, நாகப்பட்டினம் டிஸ்ட்ரிக்ட். அங்கிருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமிதான் என் மகளின் புகுந்த வீட்டினர்க்கு குல தெய்வம். 

கோவில் சிறியது என்று கூறிவிட முடியாது. கருவறையில் மயில் மீது வலது காலை கீழே தொங்க விட்ட படியும், இடது காலை மடித்தும் அமர்ந்த கோலத்தில் எழிலாக முருகன், தனி சந்நிதியில் தெய்வயானை. இந்தமுறை என் மகள் வீட்டாருடன் அந்த கோவிலுக்குச் சென்ற பொழுது, கோவிலைப் பற்றிய சிறப்புகளை அங்கிருக்கும் அர்ச்சகரிடம் கேட்டறிந்தேன்.

தற்பொழுது பெரம்பூர் என்று அறியப்பட்டாலும், இந்த ஊருக்கு புராதன பெயர் ப்ரம்ம மங்களபுரம் அல்லது பிரம்மபுரி என்பதாகும். பிரம்மபுரி என்பதே பெரம்பூர் என்று மருவி இருக்கலாம். பிரம்மா தான் இழந்த பதவியை மீண்டும் பெற்ற தலமாம் இது. பிரம்மாவுக்கு பதவி பறி போனதா? எப்போது? ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் என்ன என்று முருகன் வினவ, அதற்கு பொருள் தெரியாததால் பிரம்மாவை சிறையில் தள்ளி *அவருடைய தொழிலான படைக்கும் தொழிலை முருகன் எடுத்துக் கொள்கிறார். பிரம்மா தன் தவறை உணர்ந்து முருகனிடம் மன்னிப்புக் கேட்க, அவருக்கு மீண்டும் படைக்கும் தொழிலை ஒப்படைத்த இடம்தான் இது. ஆக, பிரம்மாவிற்கு 
நல்லது(மங்களம்) நடந்ததால் இது ப்ரம்ம மங்களபுரம். 

அதே போல சூரனை சம்ஹாரம் செய்து, அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி, சேவலை கொடியிலும், மயிலை வாகனமாகவும் ஏற்றுக்கொள்கிறார். மயிலாக மாறிய சூரபத்மன் தன்னுடைய அசுர குணம் அழிய வேண்டும் என்பதற்காக தவம் இயற்ற, அந்த மயிலின் தலையில் தன் இடது ஆள்காட்டி விரலை பதித்து உபதேசம் செய்கிறார் முருகன். பெரும்பாலான கோவில்களில் மயிலின் தலை பாகம் முருகனுக்கு வலது புறம் இருக்கும், அவ்வாறு அமைத்திருந்தால் அது அசுர மயில் எனப்படுமாம்.இங்கு முருகனுக்கு இடது புறம் மயில் தலை பக்கம் இருக்கிறது. மேலும் மயில் தன் தலையைத் திருப்பி முருகனை பார்த்த வண்ணம் இருக்கிறது, ஆகவே அது தேவ மயில் என அறியப்படுகிறதாம். முருகனும் தன் தலையை சற்றே வலது புறம் சாய்த்து மயிலை நோக்கிய வண்ணம் இருக்கிறார்.  அதே போல சாதாரணமாக எல்லா கோவில்களிலும் முருகனின் கையில் இருக்கும் வேல் வீர வீல் என்றுதான் அழைக்கப்படுமாம், இங்கு முருகனின் கையில் இருக்கும் வேலுக்கு வஜ்ஜிர வேல் என்று பெயராம். எங்கெல்லாம் தேவயானை தணி சந்நிதியில் குடி கொண்டிருக்கிறாளோ, அங்கெல்லாம் முருகனுக்கு முன் யானைதான் வாகனமாக இருக்கும் என்னும் வழக்கத்தை ஓட்டி இங்கும் முருகனுக்கு முன் யானை வாகனம் காணப்பட்டாலும், பிரதான நுழைவு வாயிலில் மயில் வாகனமும் காணப்படுகிறது. அந்த மயில் வாகனத்திற்கு அருகில் ஸ்வாமியை வணங்கிய நிலையில் ஒரு மனிதருக்கு சிறிய சிலை உள்ளது. அது, இந்த கோவிலை நிர்மாணித்த மிளகு செட்டியாரின் சிலை என்றார்.

இங்கிருக்கும் முருகனின் பக்தரான செட்டியார் ஒருவர் மிளகு வியாபாரம் செய்து வந்ததால் மிளகு செட்டியார் என்று அழைக்கப்பட்டாராம். தினமும் மிளகு சேர்த்த வெண் பொங்கலை மட்டும் அதுவும் ஒரு முறை மட்டுமே உண்டு வந்த அவர், தன மிளகு வியாபாரத்தில் ஈட்டிய பொருளைக் கொண்டு இந்த கோவிலை ஐந்து நிலை கோபுரம் கொண்டதாக நிர்மாணம் செய்கிறார். அது முடியும் தருவாயில் தனக்கு முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் இங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார். ஆனால் இறக்கும் தருவாயில் இந்தக் கோவிலை காட்டியது தான்தான் என்று உலகுக்கு அறிவிக்க கூடாது என்றும், முருகனை எப்போதும்  தரிசனம் செய்து கொண்டிருக்கும் வண்ணம் தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், வருடத்தில் ஒரு நாள், அதாவது பொங்கலன்று மட்டும் தனக்கு மிளகு கலந்த வெந்நீரால் அபிக்ஷேகம் செய்யப்பட வேண்டும் என்றும் அதுவும் முதலில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகுதான் தனக்கு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இறந்து போகிறார். அவருடைய விருப்பத்தின்படியே வாசலில் மயில் வாகனத்திற்கு அருகில் அவருக்கு ஒரு சிலை பிரதிஷ்டை செய்து, அதற்கு பொங்கலன்று மட்டும் மிளகு கலந்த வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

பிரகாரத்தை வலம் வரும் பொழுது, சிவன் கோவில்களில் கோஷ்டத்தில் தெற்கு முகமாக பார்த்து தக்ஷிணாமூர்த்தி இருப்பதை போல இந்த கோவிலில் தெற்கு முகமாக பார்த்து முருகனே 'குஹ தஷிணாமூர்த்தியாக' மயில் மீது இடது காலை மடித்து, வலது திருவடியை தொங்க விட்டு தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் அமர்ந்திருக்கிறார். பிரகாரத்தின் இடது கோடியில் விநாயகரும், வலது கோடியில் தனி சந்நிதியில் பிரம்மபுரீஸ்வரர் என்னும் திருநாமத்தோடு சிவ பெருமானும் குடி கொண்டிருக்கிறார்கள். சிவன் சந்நிதியில் அகத்தியரும் காணப்படுகிறார். சிவன் சந்நிதியின் கோஷ்டத்தில் தென் புறம் நோக்கியவண்ணம் தக்ஷிணாமூர்த்தியும் இருக்கிறார். சிறப்பான கோவில். அங்கிருக்கும் அர்ச்சகரும் சிரத்தையோடு பூஜைகளும், அலங்காரங்களும் செய்கிறார். தரிசிக்க வேண்டிய ஆலயம். 

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்  

* ப்ரம்மாவிடமிருந்து படைப்புத் தொழிலை எடுத்துக் கொண்ட முருகன் ஒரு வாரம் படைப்புத் தொழிலை மேற்கொண்டாராம். ஆனால் ப்ரம்மாவைப் போல் மனிதர்களில் வித்தியாசம் காட்ட முடியாமல் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்தது விட்டாராம். அப்போது படைக்கப் பட்டவர்கள்தான் சீனர்களும், ஜப்பானியர்களும் என்று ஒரு செவி வழி கதை உண்டு.  

படங்கள்:  கூகிள், நன்றி!

How to reach Perambur?: மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் வழியாக பொறையாறு செல்லும் எண் 440 வழித்தட பேருந்தில் சென்றால் பெரம்பூரில் இறங்கி கொள்ளலாம்.


Monday, July 10, 2017

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை 


சிறு வயதில் பயணம் செய்ய மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் திருச்சி, விடுமுறை நாட்களில் கண்டமங்கலம் தவிர அதிகம் பிரயாணம் செய்ய வாய்த்ததில்லை. மிகவும் நெருங்கிய உறவுக் காரர்கள் வீட்டு திருமணங்களுக்கு குழந்தைகளில் யாராவது ஒருவரைத்தான் அழைத்துச் செல்வார்கள். அந்த லக்கி டிராவில் நமக்கு வாய்ப்பு கிடைத்தால் உண்டு. அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பில் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது எங்களின் ஒன்று விட்ட மாமாவின் திருமணத்திற்க்காக முதன் முதலாக சென்னை (அப்போது மெட்ராஸ்) வரும் வாய்ப்பு கிடைத்தது. என் மூத்த சகோதரி திருமணமாகி புதுக்கோட்டையில் இருந்த பொழுது ஓரிரு முறைகள் புதுக்கோட்டை சென்றிருக்கிறேன். இரண்டாவது அக்கா, மூன்றாவது அக்காக்கள்  திருமணத்திற்குப் பிறகு அவ்வப்பொழுது சென்னை வந்தேன். என் திருமணத்திற்குப் பிறகு பயணங்கள் கொஞ்சம் அதிகம்தான். 

பயணத்தால் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை எந்த புத்தகத்திலும் படித்து பெற்று விட முடியாது. இப்போதும் பயணம் செய்ய விருப்பம் இருக்கிறது, ஆனால் உடல் சற்று அசந்து போகிறது. தவிர, பயணங்களுக்குப் பிறகு வீட்டை சீரமைப்பதை நினைத்தால், எங்கேயும் போக வேண்டாம் என்று தோன்றுகிறது. 

மூன்று வாரங்களாக புட்டபர்த்தி, திருவண்ணாமலை, திருப்பதி மயிலாடுதுறை என்று சற்று அலைச்சல். புட்டபர்த்தியில் முன்பு போல வெளிநாட்டவர் அதிகம் இல்லை. அங்கிருந்த வெஸ்டர்ன் கேண்டீன் மூடப்பட்டு விட்டது.  

 திருவண்ணாமலைக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்றேன். பெரிதாக மாற்றமில்லை. நாங்கள் அங்கிருந்த பொழுது மளிகை சாமான்கள் உள்பட வாங்கி கொண்டிருந்த ரோஷன் மால் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.  


கிரிவலம் வரும் பொழுது அடி அண்ணாமலையார் கோவிலிலிருந்து பார்த்தால் மலையின் இந்த பகுதியில் நந்தியின் முகம் போல தெரியும். இந்த படத்தில் இரண்டு செடிகளுக்கு இடையில் பாருங்கள் ஒரு முண்டு போல் தெரிகிறது. நேரில் பார்க்கும்பொழுது அமர்ந்திருக்கும் நந்தி போலவே தெரியும். என்னுடைய செல் போனில் இவ்வளவுதான் முடிந்தது.


நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது திருப்திக்குத்தான் முற்றிலும் பொருந்தும்.  நான்கு வருடங்களுக்குப் பிறகு திருப்பதி விஜயம். APTDC மூலம் முன் பதிவு செய்து கொண்டு சென்றோம். நாங்கள் புக் பண்ணிய பொழுது திருப்பதியில் தரிசனத்திற்க்காக ரூ.300க்கு டிக்கெட்,காலை சிற்றுண்டி, பகல் உணவு உட்பட நபர் ஒருவருக்கு ரூ.1600/- என்றார்கள். ஆனால் பயணம் செய்த அன்று ஜி.எஸ்.டி. வரியால் ஹோட்டல் கட்டணங்கள் உயர்ந்து விட்டன, எனவே சிற்றுண்டி, மதிய உணவு நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறி, ரூ. 200/- திருப்பி தந்து விட்டார்கள்.  எப்படியோ, ஒரு பெரிய கூடத்திற்குள் நுழைந்து, நீ...ள ... நடந்து, ஒரு இடத்தில் இடது புற கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்த பொழுது கோபுரம் தெரிந்தது. இந்த இடத்திற்கு முன்பு வந்திருக்கிறோம் என்று தோன்றியது. பெரிதாக கும்பல் இல்லை, என்றாலும்  ஸ்வாமியை தரிசிக்க செல்லும் வாயில் அருகே ஏனோ தள்ளு முள்ளு. வித்தியாசமாக அலமேலுமங்காபுரத்தில் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. 

மயூரநாதர் கோவில் முகப்பு 
மாயவரத்திற்கு அருகில் இருக்கும் என் பெண் வீட்டாரின் குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் மாயவரத்தில் தங்குவோமே தவிர அங்குள்ள மயூரநாதர் கோவிலுக்குச் செல்வதில்லை. இந்த முறை மயூரநாதர் கோவிலுக்குச் சென்றோம். அன்று பௌர்ணமி என்பதாலோ என்னவோ நிறைய பேர் கோவிலை வலம் வந்து 
கொண்டிருந்தார்கள்.  அபயாம்பிகை சந்நிதியில் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. நின்ற நெடிய கோலத்தில் மனதை கொள்ளை கொண்டாள் அபயாம்பிகை. 

மறுநாள் என் மகள் வீட்டாரின் குலதெய்வமான சுப்ரமணிய சுவாமி கோவில் இருக்கும் பெரம்பூருக்கு சென்று அபிஷேக, ஆராதனைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினோம். 

இன்னும் திருநெல்வேலி, உடுப்பி, சிருங்கேரி, பண்டரிபுரம், கோனார்க் சூரியன் கோவில், பத்ரிநாத் போன்ற ஆன்மீக பயணங்களும், சுற்றுலாவாக லண்டன்,பாரீஸ், ரோம், ஸ்விசர்லாந்து போன்ற நகரங்களுக்கும் செல்ல ஆசை. ம்ம்ம்ம்!